துக்கத்திலும் பணியாற்றிய முதல்வர்!
தனது தாயார் இறந்துவிட்ட துக்கத்திலும், புதுவை முதல்வர் நாராயணசாமி அவசர கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டு அனுப்பிவைத்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரியம்மாள், தனது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் வசித்துவந்தார். 96 வயதாகும் ஈஸ்வரி அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக டெல்லி சென்றிருந்த நாராயணசாமி, தாய் மறைந்த தகவலறிந்ததும் புதுவை திரும்பினார்.
நாரயணசாமியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரி அம்மாளின் உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஈஸ்வரி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாராயணசாமியின் அன்பு தாயார் ஈஸ்வரி நல்லதொரு தாயாகவும், நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அவரது மறைவு நாராயணசாமிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். தனது அன்புத் தாயாரை இழந்து வாடும் நாராயணசாமிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையில் உள்ள புதுவை முதல்வர் வி. நாராயணசாமி அவர்களுக்கும் - அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசர், தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துக்கத்திலும் கோப்புகளில் கையெழுத்திட்ட முதல்வர்
அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாராயணசாமியின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். தாயாருடைய உடல் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், துக்கத்திலும் தனது அலுவல்களை ஆற்றினார் நாராயணசாமி. வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்த அவர், அவசரக் கோப்புகளைப் பார்த்து அதற்கு கையெழுத்திட்டு அனுப்பினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
துக்கத்திலும் பணியாற்றிய முதல்வர்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:06:00
Rating:
No comments: