இறைச்சி: வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர்.
கடந்த 17ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலொன்று சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தது. இந்த ரயிலில் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலைச் சோதனையிட்டனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள். இந்த சோதனையில் 2,100 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது நாய்க்கறியாக இருக்கலாம் எனக் கூறினார்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என்ற சந்தேகத்தின் காரணமாக, அவற்றைச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் உணவு பாதுகாப்புத் துறையினர்..
ரயிலில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று (நவம்பர் 23) சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட ஆய்வு முடிவில் அது நாய் இறைச்சி அல்ல என்றும், செம்மறி ஆட்டிறைச்சிதான் என்றும் உறுதி செய்யப்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து, இன்று (நவம்பர் 23) சென்னையில் இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகளையும், அதன் வால் நீண்டிருப்பதையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
"எந்தவித அடிப்படை விசாரணையும் இன்றி ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி என்று எப்படி வதந்தி பரப்பட்டது. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இதைத் தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டி, தங்களுடைய வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இறைச்சி வியாபாரமும், அசைவ உணவு விடுதிகளும் கடும் இழப்பைச் சந்தித்துள்ளன. மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்பை இந்தச் சம்பவம் பெற்றுத் தந்துள்ளது.
அசைவ உணவுக்கு எதிராகவும், மாட்டிறைச்சிக்கு எதிராகவும் இங்கு பல்வேறு சதிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த சதிகளின் பின்புலத்தில் சில சக்திகள் இருக்கின்றனர். அதே சக்திகள்தான் இந்தச் சம்பவத்தின் பின்புலத்திலும் உள்ளனர். ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.
இறைச்சி: வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:07:00
Rating:
No comments: