கவர்ச்சிக்கு மதிப்பு இல்லை:திருமாவளவன்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கு மதிப்பில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"திமுகவும் அதிமுகவும் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதில் கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகளையும் வாரிவழங்கி வருகின்றன. இதன் மூலம் மக்களை நம்ப வைத்து வாக்குகளை அறுவடை செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. திமுக ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்தியது. அதிமுக மூன்று முறை ஆண்டது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட நலத்திட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருந்தால் அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமே வந்திருக்காது.
ஆனால் அவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் ஒவ்வொரு தேர்தலின்போதும் கடந்த காலத்தில் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தார்களோ அதே வாக்குறுதிகளை அடுத்தடுத்த தேர்தலின்போதும் கொடுத்து பல்வேறு கவர்ச்சிகரமான இலவசங்களையும் சேர்த்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதற்கு ‘விலையில்லாப் பொருட்கள்’ என்று புதிதாக ஒரு பெயரையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஐந்து முறை ஆண்ட திமுகவும் மூன்று முறை ஆண்ட அதிமுகவும் கடந்த காலத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிட்ட வாக்குறுதிகளை முழுமையாக இரு கட்சிகளும் நிறைவேற்றியிருந்தாலே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. தற்போதுகூட திமுக, அதிமுக இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்தால்தான் முடியும். அல்லது உலக வங்கியிடம் கையேந்திக் கடன்பெற்றால்தான் முடியும். ஏற்கனவே தமிழக அரசு இலட்சம் கோடிக் கணக்கில் கடனில் இருப்பதால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?
ஆகவே, எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்கிற அதிகார போதையில் இரு கட்சிகளும் தள்ளாடுகின்றன. எனவேதான் கடந்த காலங்களில் என்ன வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்களோ அதையே திரும்பத் திரும்ப ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படியென்றால், அவற்றையெல்லாம் நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம். தற்போது அவர்கள் கொடுக்கும் பொய்யான கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதிகார போதையில் தள்ளாடும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தங்கள் மௌனப் புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பார்கள்."
இவ்வாறு திருமாவளவன் அந்த அறிக்கையில்கூறியுள்ளார்.
கவர்ச்சிக்கு மதிப்பு இல்லை:திருமாவளவன்! கவர்ச்சிக்கு மதிப்பு இல்லை:திருமாவளவன்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.