தொடர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜே.என்.யூ கன்னையா குமார்

டெல்லி: டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு எதிரான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் கைவிட்டுள்ளார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி நடந்த நிகழ்ச்சியின்போது, தேச விரோத முழக்கங்கள் எழுப்பியதாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளனர். 

அச்சம்பவம் தொடர்பாக, அவர்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னையா குமார் உள்பட 25 மாணவர்கள், கடந்த 28-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். 

இந்த நிலையில் கன்னையா குமாரின் உடல்நிலையும் மோசம் அடைந்தது. அவரது ரத்த அழுத்தமும், குளுக்கோஸ் அளவும் குறைந்தது. வாந்தி எடுத்ததால்,பாதி சுயநினைவுடன் அவர் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கன்னையா குமார், உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கன்னையா குமார், சில தினங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சில மருத்து பரிசோதனைகளும் நடைபெற்று வருவதால், உடல் நிலையை மனதில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கன்னையா குமார் முடித்துக்கொண்டுள்ளதாக மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜே.என்.யூ கன்னையா குமார் தொடர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜே.என்.யூ கன்னையா குமார் Reviewed by நமதூர் செய்திகள் on 00:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.