மாற்றுவோம்... வாக்களிப்போம்... SDPI... - - வி.களத்தூர் சனா பாரூக்

இந்த தேசம் விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளில் முஸ்லிம்கள் தலைமை தாங்கி நடத்தக்கூடிய ஒரு தேசிய கட்சி இருந்தது இல்லை. அல்லது வளர்ந்தது இல்லை எனலாம். கண்ணியமிகு. காயிதே மில்லத் அவர்கள் இருக்கும் வரையில் முஸ்லிம் லீக் வலுவுடனும், நம்பிக்கையுடனும், முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்புடனும் விளங்கியது. அவருக்குப்பின் வந்த தலைவர்களால் முஸ்லிம் லீக் சிதறி தனது வலுவை இழந்தது. அதன் பிறகு தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் இருந்து வந்திருப்பதை ஒரு அரசியல் பார்வையாளனாக கவனித்து வருகிறேன். அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு சக்தியாகவே SDPI கட்சியை பார்க்க முடிகிறது. அதற்கேற்றார்போல் வளர்ந்து வருகிறது.

2008 ம் ஆண்டு இந்திய தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள், மாநாடுகள், விவாதங்கள், மக்களின் விருப்பங்கள், கருத்துகள் அடிப்படையில் ஒரு தேசிய அரசியல் கட்சி துவக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி நன்கு திட்டமிட்டு உருவானதுதான் SDPI கட்சி. சரியாக 2009 ம் ஆண்டு ஜூன் மாதம் 21 ம் தேதி "பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!" எனும் முழக்கத்தோடு துவக்கப்பட்டது. முதலில் சிலர் விமர்சித்தாலும் மக்களின் ஆதரவும், கட்சியின் செயல்பாடுகளும் வெகு விரைவில் அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கின. அதற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தே வேறு சிலரும் கட்சி ஆரம்பம் செய்தனர்.

தனது கொள்கை முழக்கத்தின் மூலம் இரண்டு விசயங்கள் இந்த தேசத்தை அச்சுறுத்துவதாக SDPI கட்சி கூறுகிறது. ஒன்று பசி, மற்றொண்டு பயம். "இந்தியா ஏழை நாடல்ல, ஏழைகளின் நாடு" என்று சொல்வார்கள். மிகவும் வளமான தேசம் என்று உலக அளவில் கணிக்கப்படும் இந்த தேசத்தில்தான் 42% மக்கள் வறுமை கோட்டிற்குகீழ் வாழ்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதல் தேசமாக உள்ளது. ஆப்ரிக்க கண்டத்தை விட இந்தியாவின் சில பகுதிகளில் வறுமை தாண்டமாடுவதாக ஐநா மன்றம் ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது. முழுமையான சுகாதாரமின்மை பிரச்சனைகளில் மக்கள் சந்திக்கும் துயரங்கள் அதிகரித்து வருகின்றன.

மற்றொரு பக்கம் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தினமும் அரங்கேறி வருகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும்போது அவர்களை மாவோயிஸ்ட் சித்தரித்து அழித்தொழிப்பதும், முஸ்லிம்கள் தங்கள் உரிமைக்காக போராடினால் அல்ல பேசினால்கூட அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி தள்ளுவதும், போலிமோதல் படுகொலைகள் மூலம் அச்சுறுத்துவதும் தொடர் நிகழ்வாக நிகழ்ந்து வருகிறது.

சாதி மத மோதல்களையும், மத மோதல்களையும் திட்டமிட்டு கிளப்பிவிட்டு மறைமுகமாக இந்த தேசத்தின் வளங்கள் சில தனியார் முதலாளிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு ஆதிக்க ஆட்சியாளர்களும் தனக்கு வேண்டியதை 'பெற்றுக்கொண்டு'  உடந்தையாக இருகின்றனர்.  இந்த தேசத்தில் மக்கள் வறுமையில் வாடி கிடக்க மறுப்பக்கம் செல்வந்தர்களின் எண்ணிக்கையோ பெருகி கொண்டிருக்கின்றன. இருபக்கமும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இது மிகப்பெரிய ஆபத்தானதாகும். உலக ரவுடியான அமெரிக்கா, இஸ்ரேல் உடனான உறவை வளர்த்துக்கொண்டு தனது மக்களையும், தனது தேசத்தையும் அழிக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நீதி மறுப்பும், சமத்துவமின்மையும், பாதுகாப்பு கேள்விக்குறியாகவும் ஆக்கப்பட்டு வருகிறது. இதற்கெதிராக நெஞ்சம் நிமிர்த்தி உணமையான அக்கறையுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகிறது SDPI கட்சி.

அரசு+இயல் என்பதுதான் அரசியல் எனப்படுகிறது. அரசை இயக்குவதற்கான, அரசை மக்களுக்காக செயல்பட வைப்பதற்கான ஒரு களம்தான் அரசியல். ஆனால் துரதிஸ்டமாக இன்று தொழில்முறை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றை பார்த்தோமானால் பல தலைவர்கள் நீதியாளர்களாகவும், நேர்மையானவர்களாகவும், எளிமையானவர்களாகவும், இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தங்களையே தியாகம் செய்திருக்கிறார்கள். தங்களது உடமைகளை, உயிர்களை இழந்திருக்கிறார்கள். 

இன்றைய அரசியல் அமைப்பு அப்படியே  தலைகீழாக காட்சியளிக்கிறது. இந்த அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக பலர் இது அசிங்கமான சாக்கடை என்று ஒதுங்கிவிடுகிறார்கள். அரசியல் என்ற பெரிய கடலில் முழுவதும் விஷம் கலக்கப்பட்டுள்ளது. அதில் விசத்தை செரித்துக்கொண்டு அந்த கடலை தன் வயப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே விசத்தை அகற்றி அது எல்லோருக்குமான வாழ்நிலையமாக மாற்ற போராடுகிறார்கள். அந்த ஒரு சிலரில் SDPI கட்சியும் ஒன்று.

அரசியல், அதிகாரம், காவல்துறை, நீதித்துறை, ஊடகம் என எல்லாத்துறையையும் ஆதிக்க சாதிகளும், பண முதலைகளும் தங்கள் கைகளில் வைத்திருக்கிறது. அதனை மாற்றுவதற்கு நீண்ட செயல்திட்டங்கள் முன்வைத்து SDPI கட்சி போராடி வருகிறது. அணுவுலை எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, சேல் காஸ் திட்ட எதிர்ப்பு, தமிழகம் முழுவதும் மதுக்கடை அகற்றுவது, மீனவர்கள் நலனுக்காக, இலங்கை தமிழர்களுக்காக, சாதிய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு  எதிராக, பாசிசத்திற்கு எதிரான போராட்டம், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கான போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

"மக்களின் உரிமைகளை பெற வேண்டுமானால் தொடர்ந்து போராடுவதுதான் ஒரே வழி" என உணர்ந்து போராட்ட களத்தை தனது முதன்மை களமாக தேர்வு செய்திருக்கிறது. அதன்படி செயலாற்றுகிறது. எல்லா கட்சிகளும் நாங்கள் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்று வாக்கு கேட்கும் தருணத்தில் SDPI கட்சி மட்டுமே தேர்தல் களத்தில் நாங்கள் என்னென்ன செய்தோம் என்று விளக்கி பிரசாரம் செய்து வருகிறது. எவ்வித அதிகாரம் இல்லாதபோதே பல பணிகளை மக்களுக்கு செய்திருக்கிறோம். அதிகாரம் இருந்தால் கூடுதலாக உங்களுக்காக உழைப்போம் என்று வாக்குறுதி வழங்கி மக்களை சந்திக்கிறது.

"அனைவருக்கும் அரசியலில் தகுந்த பிரநிதித்துவம் அளிக்கப்படும்" என்று தனது செயல் திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள SDPI கட்சி  தேர்தல் களத்தில் அதிகாரமற்ற மக்களை ஒருங்கிணைத்து அரசியல்படுதுவதுதான் முதன்மை பணியாக கொண்டுள்ளது. அதனை தனது முழக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது. அதிகாரம் மக்களுக்கே, அரசியலை நமதாக்குவோம், தேசத்தை பொதுவாக்குவொம் என உரத்த குரலில் முழங்குகிறது. SDPI கட்சி மற்றொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியலை முன்னெடுக்கும் கட்சி. அது பாழ்படுத்தப்பட்டுள்ள அரசியல் அமைப்பை மக்களின் பிரச்சனைகளை பேசுகின்ற அமைப்பாக, செயல்படுவதற்கான அமைப்பாக மாற்றுவதற்கே போராடுகிறது. இது வெறும் அதிகாரத்தை ஒரு கட்சியிடமிருந்து மற்றொரு கட்சிக்கு மாற்றுவது அல்ல. சீரழிந்துள்ள அரசியல் அமைப்பை மாற்றுவது. அல்லது தூய்மைப்படுத்துவது.

இந்த மாற்றத்திற்கான ஒரு உந்து சக்தியாக நீங்கள் எல்லாம் இருக்க வேண்டும். அதற்கு சரியான வாய்ப்புதான் இந்த சட்டமன்ற தேர்தல். பண பலமும், அதிகார பலமும், அடியாள் பலமும், ஊடக பலமும் திரட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் தனித்து களம் காண்கிறது. தமிழகத்தில் 30 சட்டமன்ற தொகுதியிலும், புதுச்சேரியில் 3 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறது. SDPI கட்சி மற்றவர்களை போல சமரசங்களை செய்துகொண்டு எப்படியாவது ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது பெற வேண்டும் என்று தேர்தல் களத்தில் நிற்கவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்கான பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே களத்தில் நிற்கிறது. இன்று புரையோடி போயிருக்கும் சுயநல அரசியலை ஒழித்து, பொது நல அரசியலை வளர்க்க விரும்புகிறது. அதையே தனது தேர்தல் முழக்கமாக முன் வைத்திருக்கிறது. 

"நாட்டின் கடைக்குடிமகன் வரையிலும் ஜனநாயகம் முறையாக சென்றடைய வேண்டும். வாக்குரிமை சரியாக பயன்படுதப்பட வேண்டும்" SDPI கட்சி தனது செயல் திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதையே மக்களுக்கான வேண்டுகோளாகவும் வைக்க கடமைப்பட்டுள்ளேன். உயிரோட்டமுள்ள மக்கள் நலனை அடிப்படையாக கொண்டுள்ள SDPI கட்சி தேர்தல் களத்தில் வேகமாக சுழன்று வருகிறது. ஒரு உணமையான அரசியலை நமக்கு வழங்க நினைக்கும் அந்த கட்சியின் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நாம் SDPI கட்சியை இந்த தேர்தலில் ஆதரிக்க தயாராக வேண்டும்.

வாருங்கள்
சுயநல அரசியலை மாற்றுவோம் !
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிப்போம் !!
எங்களின் கட்சி SDPI !!!
என உரக்க முழங்குவோம்...  

- வி.களத்தூர் சனா பாரூக்
மாற்றுவோம்... வாக்களிப்போம்... SDPI... - - வி.களத்தூர் சனா பாரூக் மாற்றுவோம்... வாக்களிப்போம்... SDPI... - - வி.களத்தூர் சனா பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 18:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.