மதுரை சித்திரை திருவிழாவின்போது தேர்தல்: ’வாக்குப்பதிவை பாதிக்கும்’

மதுரை
மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாளில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருப்பது குறித்து விமர்சனங்கள்எழுந்துள்ளன. நீதிமன்றத்திலும் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது, தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டத்தில், அதாவது ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமான மதுரையில் மிகப் பெரிய சித்திரைத் திருவிழாவும் நடைபெறுகிறது. ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 22ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்குத் திரும்புவதுடன் நிறைவடைகிறது.
தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நடக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டிருப்பது மதுரையில் உள்ள அரசியல் கட்சிகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மதுரையில் மீனாட்சி தேரோட்டம் நடக்கும் தினத்தில் வெளிவீதிகளைத் தாண்டி எந்த வாகனமும் மதுரை நகருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை ஆறு மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டு பிற்பகலில் மீண்டும் நிலையை அடையும் வரையிலான நேரத்தில் நான்கு மாசிவீதிகளுக்கு உட்பட்ட பகுதிகள் பெரும் மக்கள் திரளால் நிரம்பி வழியும்.
இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எப்படி நடக்குமென்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, அழகர்மலையிலிருந்து புறப்பட்டு, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக மதுரை நோக்கி வரும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மூன்று மாவடி பகுதியில் நடக்கும். இதற்குப் பிறகு, வைகையை நோக்கி அழகர் தன் பயணத்தைத் தொடர்வார். இதனால், வைகை ஆற்றின் வடகரை பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்திருப்பார்கள்.
சித்திரைத் திருவிழாவைக் காண மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது, அருகில் உள்ள தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் மதுரை நகரில் குவிவார்கள்.
இந்தக் காரணங்களால் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப் பதிவை நடத்துவது சரியான காரியமாக இருக்காது என பலரும் கருதுகிறார்கள்.
"ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலை நடத்துவது எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு ஏதுவாக இருக்காது. சித்திரைத் திருவிழாவிற்காக மதுரையில் சுமார் 10000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள். அன்றைய தினம் வாக்குப் பதிவையைும் நடத்தினால், அதற்கும் பாதுகாப்பு அளிப்பது மாவட்ட நிர்வாகத்தால் முடியாது. இது அரசு நிர்வாகத்திற்கு மட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கும் பெரிய அழுத்ததை உருவாக்கும்" என்கிறார் மதுரையைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான சு. வெங்கடேசன்.
மதுரை
"சித்திரைத் திருவிழாவின் முக்கிய தினத்தன்று தேர்தலை நடத்தினால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்க ஏதுவான சூழல் இருக்காது. இது மதுரை மட்டுமல்லாமல் ஐந்தாறு மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். தேர்தல் நடத்துவதற்கும் வாக்களிப்பதற்கும் ஏதுவாக இருக்காது. தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும்" என்கிறார் வெங்கடேசன்.
ஊடகங்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் இது குறித்துக் கேட்டபோது, "உள்ளூர் விடுமுறை என்றைக்கு என தேர்தல் ஆணையத்திலிருந்து கேட்டார்கள். ஆகவே அழகர் ஆற்றில் இறங்கும் தினமான 19ஆம் தேதி என்று தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துவிட்டோம். இந்த விஷயம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் அதிகாரிகளிடம் தேர்த் திருவிழா குறித்து கேட்டபோது, மதியம் 12 மணிக்குள் தேர் நிலையை அடைந்துவிடும் என்று தெரிவித்ததாகவும் அதனால், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பதாகவும் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நடராஜன் கூறினார்.
இதற்கிடையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் முதலாவது அமர்வில் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், இதனை மனுவாகத் தாக்கல்செய்தால், அது குறித்து விசாரிக்கப்படுமென தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தை கவனத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.
மதுரை சித்திரை திருவிழாவின்போது தேர்தல்: ’வாக்குப்பதிவை பாதிக்கும்’ மதுரை சித்திரை திருவிழாவின்போது தேர்தல்: ’வாக்குப்பதிவை பாதிக்கும்’ Reviewed by நமதூர் செய்திகள் on 04:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.