திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த உயர் நீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த உயர் நீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் பெற்ற வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடுத்த வழக்கில் நேற்று (மார்ச் 22) தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏகே போஸ் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.
ஏகே போஸ் சமர்ப்பித்த வேட்பு மனுக்களின் ஏ,பி படிவங்களில் கையெழுத்துக்கு பதில் அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. ஜெ.வின் கைரேகை போலியானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதனால் போஸின் வெற்றி செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வெறும் தேர்தல் வழக்காக மட்டுமல்லாமல் ஜெ.வின் உடல் நிலை பற்றிய மர்மங்களையும் உடைக்கும் வழக்காக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, அப்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் ஆணையரும் எவ்வாறு சட்ட விரோதமாக நடந்திருக்கிறார்கள் என்றும் தீர்ப்பில் தோலுரித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், மற்றும் 2016 நவம்பரில் நடந்த அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தல்களின் போது மாநிலத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் ராஜேஷ் லக்கானி. அப்போதே அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின. ஆனால் அவர் அதை மறுத்தார். ஆனால் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பான போக்கை போட்டுடைத்திருக்கிறது.
நீதிபதி வேல்முருகனின் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான அம்சங்கள்…
“ஏ.கே. போஸ் வேட்பு மனுக்களின் ஏ,பி, படிவங்களில் கட்சியின் தலைவர் பொதுச் செயலாளரின் கையெழுத்து மையில் இடம்பெற வேண்டும் என்பது சட்டம். ஆனால் கைரேகை வைக்கப்பட்டிருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் ஒருவேளை ஏற்க வேண்டும் என்றால் கூட… சப் டிவிஷனல் ஆபீசர் அந்தஸ்துக்கு குறைவில்லாத அலுவலரை அனுப்பி அரசு மருத்துவர் முன்னிலையில் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியிருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் இதில் உச்ச நீதிமன்ற நெறிமுறைகளையோ, சட்டத்தையோ பின்பற்றவே இல்லை.
மாறாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் கடிதம் ஒன்றையே போதுமானதாக்கி கைரேகையை ஏற்றுக் கொண்டு அதன் மூலம் போஸின் வேட்பு மனுவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷனுக்கும் அதிமுக என்ற ஒரு கட்சிக்கும் இடையே நடந்திருக்கும் கடிதப் பரிமாற்றம் வியப்பைத் தருகிறது. சட்டத்தின் எல்லா வகைகளையும் மீறி இந்த கடித ஒருங்கிணைப்பு நடந்திருக்கிறது.
வழக்கு விசாரணையின் போது ஏ.கே. போஸ் தன் தரப்பில் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிய டாக்டர் பாலாஜியை அவர் குறுக்கு விசாரணை செய்யக் கூட விரும்பவில்லை.
ஆனால் ஒரு விஷயத்தில் அவர் மிக அவசரமாக இருந்தார், எதிலென்றால் இந்த நீதிமன்றம் ஜெ.வின் உண்மையான கை ரேகையை பெங்களூரு சிறை அதிகாரியிடம் கேட்டுப்பெறுவதைத் தடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் செல்வதில்தான் அவர் அவசரமாக இருந்தார்.
தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் (ராஜேஷ் லக்கானி) ஆளுங்கட்சியின் ( அதிமுக) மவுத் பீசாக இருந்திருக்கிறார் என்பது துரதிர்ஷ்டவசமானது
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பத்திரிகை செய்திகளையோ, அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகளையோ கூட அவர் ஆராயாமல் மது சூதனன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மட்டுமே வேட்பு மனுவில் கைரேகை பெறுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அந்த கைரேகையும் ஜெயலலிதாவின் சுய நினைவோடு பெறப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
தமிழக தலைமை தேர்தல் ஆணையரும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சீனியர் முதன்மைச் செயலாளரும் இந்த நீதிமன்றத்தில். ‘நாங்கள் மதுசூதனன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில்தான் முடிவெடுத்தோமே தவிர, ஜெயலலிதாவின் வேறு எந்த மருத்துவ ஆவணங்களையும் பார்க்கவில்லை’ என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே வேட்பாளர் போஸின் வேட்பு மனு முறையற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே போஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கப்படுகிறது” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அரசுகளின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதற்கு திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான ஆதாரமாக அமைந்திருக்கிறது!
https://minnambalam.com/k/2019/03/23/32
திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த உயர் நீதிமன்றம்! திருப்பரங்குன்றம் வழக்கு: தேர்தல் ஆணையத்தைத் தோலுரித்த உயர் நீதிமன்றம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.