விடியல் எப்போது? -அபுல் ஹசன்


இறைவனின் திருப்பெயரால்…
நமது  அண்டை நாடான மியான்மரில்(பர்மா) முஸ்லீம் மக்கள், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மியான்மர் முஸ்லீம்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் அவர்கள் ஆதிக்க சக்திகளால் வேட்டையாடப்பட்டதும், அகதிகளாக வங்காள தேசத்திலும், மலேசியாவிலும் குடியேறிய இரத்தம் தோய்ந்த வரலாறு உலகம் அறிந்ததே..ஏன், இந்தியாவிலும் கூட பல ஆயிரம் மியான்மர் முஸ்லீம்கள் அகதிகளாக குடியேறி, பின்பு இந்திய குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்த முறை அவர்கள் தாக்கப்படுவது அமைதிக்கும், துறவறத்திற்கும் பெயர் பெற்ற புத்த மதத்தைச் சார்ந்தவர்களால்..புத்தர் உயிருடன் இருந்திருந்தால், இப்படி ஒரு தீவிரவாதக் கூட்டத்தை உருவாக்கியதை எண்ணி வெட்கப்பட்டு, மீண்டும் போதிமரத்தைத் தேடி போயிருப்பார். அந்த அளவிற்கு பச்சிளங்குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று அவர்களின் பேயாட்டம் யாரையும் விட்டு வைக்கவில்லை.  அவர்களுடைய இந்த கொலைவெறியாட்டத்திற்கு அரசும், ராணுவமும் துணை நிற்பதுதான் சோகத்திலும் சோகம்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகியும், புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும் கூட முஸ்லீம்கள் மீதான இந்த அறிவிக்கப்படாத போர் குறித்து வாய் திறக்காமல், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அமைதி காத்து வருகின்றனர்.
உலக அரசியலில் புதிய விடிவெள்ளியாய் கருதப்பட்ட, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, இவர்கள் எங்கள் நாட்டு குடிமக்கள்தானா? என்று எனக்கு தெரியவில்லை என்று திருவாய் மலர்ந்தார் ஒரு முறை. கொல்லப்படுவது  நம்மைப் போன்ற  மனிதர்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றவில்லை. என் நாட்டு மக்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன் என்பது எந்த ஊர் நியாயம் என்றும் தெரியவில்லை. என்னே ஒரு மனிதநேயம்? அவர் பெற்ற நோபல் பரிசுக்கு மட்டும் உணர்வுகள் இருந்திருந்தால்,அவர் வீட்டு அலமாரியை அலங்கரித்ததை எண்ணி வெட்கப்பட்டு, அதனை விட்டு எப்போதோ ஓடிப் போயிருக்கும்.
உலக நாட்டாமையான அமெரிக்காவோ, அதன் அடிவருடியான ஐ.நா.சபையோ இதனைப் பற்றி வாய் திறக்கவேயில்லை. முஸ்லிம்கள் அழிவிலே தன்னை இன்பப்படுத்திக் கொள்ளும் ட்ரம்ப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
நமது இந்திய மக்களுக்கோ இப்படி ஒரு சம்பவம் நடப்பதாகக் கூட தெரியாது.ஏனெனில் நமது அரசோ, அரசியல்வாதிகளோ,உள்ளதை உள்ளபடி சொல்லும் பத்திரிகைகளோ, செய்தித்  தொலைக்காட்சிகளோ, மியான்மரில் நடந்து வரும் இந்தப் படுகொலைகள் குறித்து  மறந்தும் கூட பேசவோ, எழுதவோ, காட்சிப்படுத்தவோ இல்லை.
பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ அங்கு சிறுபான்மையினமாக வாழ்ந்து வரும் மக்கள் தாக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளும் வரிந்து கட்டி கொண்டு தலையங்கம் தீ(தி)ட்டித் தீர்க்கும். அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் விளம்பர இடைவேளையே இன்றி அதனைக் காட்சிப்படுத்தி காசு பார்ப்பார்கள். ஆனால் அந்த நடுநிலையான பத்திரிகைகளுக்கும்,தொலைக்காட்சிகளுக்கும் மியான்மரில் நிருபர்களோ, உளவாளிகளோ இல்லை போலும். இருந்திருந்தால் இந்நேரம் தங்கள் புஜ பல பராக்கிரமத்தை காட்டியிருப்பார்களே?..
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது  அவர்களை வைத்து காலங்காலமாக அரசியல் செய்தே, அவர்களை அழித்த நமது அரசியல் வியா(பாரி)திகள் இப்போது குருடர்களாயும், செவிடர்களாயும், ஊமைகளாயும் ஆகிவிட்டனர் போலும். இல்லையெனில் உண்ணாவிரதம், சட்டசபை தீர்மானம், மனிதச் சங்கிலி, பிரதமருக்கு தந்தி, கடிதம் என்று அவர்களும் களத்தில் குதித்திருப்பார்களே?..
அண்டை  நாடுகளுடன் உறவை வளர்க்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு தனது அமைச்சர் பரிவாரத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்தே அரசுப் பணத்தைக் காலி செய்யும் நமது மத்திய அரசின் காதுகளுக்கு, இன்னும் மியான்மரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி எட்டவில்லை போலும். எட்டியிருந்தால் உடனடியாக தனது பிரதிநிதியை அனுப்பி தாக்குதலை நிறுத்த சொல்லியிருக்குமே மாண்புமிகு மத்திய அரசு…
எங்கெல்லாம் தனது அடிவருடிகள் தாக்கப்படுகின்றனரோ, அங்கெல்லாம் உடனடியாக மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிற்கு இன்னும் மியான்மர் குறித்து வாய் திறக்க நேரம் வரவில்லை. ஏனெனில் தாக்கப்படுவது தனது ஆதரவாளர்கள் இல்லையே…இல்லையெனில்  இந்நேரம் தனது பெரியண்ணன்தனத்தை காட்டியிருக்குமே?…
தமிழ்ப் படங்களில் வரும் காவல்துறையைப் போல், எல்லா மக்களும் அழிக்கப்பட்ட பிறகு களத்தில் குதிக்கும் ஐ.நா. சபைக்கும், இன்னும் மியான்மருக்கு போக மனது வரவில்லை. ஆஸ்தான ஜோதிடர் (டிரம்ப்) இன்னும் நல்ல நேரம் குறித்து தரவில்லை போலும்…இல்லையெனில் தனது படை, பரிவர்த்தனையுடன் எப்போதோ களமிறங்கியிருக்குமே!..
அங்கு பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஈவிரக்கமற்ற முறையில் காவு வாங்கப்பட்டு வருவதைப் பற்றி மறந்தும் கூட வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள் நமது மக்கள் காவலர்கள்.
மியன்மரில் உணவு, உடை, உறைவிடம் என்று எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் அப்பாவி மக்கள். முஸ்லீம்களாக இருப்பது மட்டுமே அவர்கள் செய்த குற்றம்.
ஆக, தாங்கள்தான் உலகத்தையே மீட்க வந்த இரட்சகர்கள் போலவும், எங்கு அநியாயம் நடந்தாலும் அங்கே எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று வாய்கிழிய பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா,ஐ.நா,அவர்களின் கைப்பாவையாக விளங்கும் உலகத் தலைவர்கள், யூத, சியோனிசப் பிடியில் சிக்கியுள்ள ஊ(மை)டகங்கள்,நம் தேசத்து ஓட்டு பொறுக்கிகள் என்று எல்லோரும் முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது மட்டும் ஒடி, ஒளிந்து கொள்கின்றனர அல்லது முஸ்லீம்களை அழிக்க தூபம் போடுகின்றனர். எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது மியான்மர் மற்றும் உலகின் பல பகுதிகளிர் அழிக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள்  விவகாரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன்னுடைய இனம் அழிக்கப்படுகின்றது என்றவுடன் இங்குள்ள மக்கள் ஒன்றுபட்டனர்…கொதித்தெழுந்தனர்…ஆர்ப்பரித்தனர்…அலைகடலென திரண்டனர்..ஆனால் பலஸ்தீன், ஜம்மு – காஷ்மீர், இப்போது மியான்மர் என்று தன்னுடைய சகோதரர்கள், திட்டமிட்டு வேரறுக்கப்படுகின்றனர் என்று தெரிந்தும், தனித்தனியாக பிரிந்து நின்று ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று நடத்தி, அதிலும் நம்மவர்களை நரபலி கொடுத்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், கண்ணீருடன் கையைப் பிசைந்து கொண்டு, வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது உலகின் உயர்ந்த சமுதாயம்… நடுநிலையான சமுதாயம் அல்லவா?..அதனால் தானோ என்னவோ, மத்தியில் (மத்திய கிழக்கில்) இருந்து அமைதி காத்துக் கொண்டிருக்கின்றது!…
அசத்தியத்தை தூக்கிப் பிடித்துள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஓரணியில் நிற்கின்றனர். ஆனால் சத்தியத்தை தாங்கிப் பிடித்துள்ளவர்கள் சிறு,சிறு கூட்டங்களாக, அங்கும், இங்கும் சிதறிக் கிடக்கின்றனர்.
எதிரிகள் யாரென்று தெரிந்துவிட்டது.
ஆனால் எதிர்த்துக் களமிறங்க வேண்டியவர்கள், இன்னும் உறக்கம் கலைக்கவில்லை…
ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆனால் ஒன்றுபட விடாமல் தடுப்பது எது? என்று தெரியவில்லை…
விடியல் எப்போது?
என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றது முஸ்லீம் உலகம்……
நீங்களும் வாருங்களேன்!
இறந்து புதைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் ஏந்தும் தோழர்களே!
உப்புத் தண்ணீரில் உயிரோடு கரைக்கப்படும் மியான்மர் பூர்வகுடிகளுக்காகவும் சிறிது இரங்குங்களேன்!
தன் சிறுநீரை தானே குடித்து உயிர்வாழும் நம் மனித சொந்தங்களுக்காக கொஞ்சம் கலங்குங்களேன்!
காவி உடைக்குள் ஒளிந்திருக்கும் கயவர்களின் கயமையை எதிர்த்து களம் காணுங்களேன்!
இனப்போராளிகளே!
மதம் தாண்டி மனித இனத்திற்காகவும் போராடுங்களேன்!
மௌனிகளாக வேடிக்கை பார்க்கும் உலகின் கள்ள மௌனத்தை உடைக்க தயாராகுங்களேன்!
என் தமிழினம் கொல்லப்பட்ட போது நீங்கள் அமைதியாகத் தானே இருந்தீர்கள் என்ற பழைய பல்லவியையே பாடி
ஒரு மனிதக் கூட்டம் கருவறுக்கப்பட்டதற்கு
மௌன சாட்சிகளாக இருந்து வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் நீங்கா இடம்பெற்று விடாதீர்கள்!
முஸ்லிம் என்று பின்வாங்காதீர்கள்.
மனிதன் என்று களத்தில் இறங்க முன்வாருங்களேன்!
விடியல் எப்போது? -அபுல் ஹசன் விடியல் எப்போது? -அபுல் ஹசன் Reviewed by நமதூர் செய்திகள் on 01:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.