பீகாரில் மெகா கூட்டணி விஸ்வரூபம் எடுக்கும்: சரத் யாதவ்
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மெகா கூட்டணியில் தொடரும் என சரத் யாதவ் அணியினர் அறிவித்துள்ளனர். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இதில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பீகாரில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து கடந்த 2015-ஆண்டு பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்து 178 இடங்களில் வெற்றிபெற்றது. நிதீஷ் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். அதன் பின், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென நிதீஷ் குமார் வலியுறுத்தினார். இதனை ஏற்க லாலு மறுத்ததை அடுத்து, பீகார் முதல்வர் பதவியை கடந்த 2017, ஜூலை மாதம் நிதீஷ் குமார் ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட கட்சியின் முன்னனியினர் அதிருப்தியடைந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
அதிருப்தி அடைந்த சரத் யாதவ் அணி ஏற்கனவே 2015 தேர்தலில் அமைத்திருந்த மெகா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்தும் செயல்படுகிறார். இந்நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை சரத் யாதவ் டெல்லியில் நடத்தினார். இதில், கட்சியின் செயல் தலைவராக சோட்டுபாய் வசாவா நியமிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.கள் அலி அன்வர், ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர். பீகாரில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் தங்கள் கட்சி தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
கட்சியின் சின்னம் சரத் யாதவ் அணிக்குத் தரப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீவாஸ்தவா, “கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோருவதற்கு ஆதரவாக மேலும் பல ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க இருக்கிறோம். காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் எங்களுடன் உள்ளன. விரைவில் எங்கள் கூட்டணி விஸ்வரூபம் எடுக்கும்” எனக் கூறியுள்ளனர்.
பீகாரில் மெகா கூட்டணி விஸ்வரூபம் எடுக்கும்: சரத் யாதவ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:42:00
Rating:
No comments: