படம்: தி வயர் பெஹ்லு கானை கொலை செய்தவர்களை ராஜஸ்தான் அரசு காப்பாற்ற நினைக்கிறது: பெஹ்லு கான் குடும்பத்தினர்
ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பயங்கரவாதிகளால் பால் பண்ணை உரிமையாளர் பெஹ்லு கான் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தன்னை தாக்கியவர்கள் என்று பெஹ்லு கான் அவரது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்ட ஆறு நபர்களை இந்த வழக்கில் இருந்து ராஜஸ்தான் காவல்துறை விடுவித்தது. (பார்க்க செய்தி)
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெஹ்லு கானின் குடும்பத்தினர், கொலைகாரர்களை ராஜஸ்தான் அரசு பாதுகாக்க நினைப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பெஹ்லு கானின் மூத்த மகன் இர்ஷத், “இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அந்த நபர்கள் ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதனால் தான் அரசு அவர்களை பாதுகாக்க நினைக்கிறது. இங்கே அனைவரும் விலைபோயுள்ளனர். அந்த ஆறு பேரும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்தனர். இதனை எங்கள் தந்தை அவரது மரணத்திற்கு முன்பு கூட கூறியிருந்தார். இவர்கள் எப்படி அந்த ஆறு பேர் அங்கு இல்லை என்று கூறி அவர்களை விடுவிக்க முடியும். இந்த விஷயத்தை நாங்கள் உச்ச நீதிமன்றம் வரையில் எடுத்துச் செல்வோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “நீதிக்காக போராடி எங்களது சேமிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. நீதியை விடுங்கள், அரசு எங்களுக்கு வாக்களித்த இழப்பீட்டுத் தொகை கூட இன்னும் கிடைக்கவில்லை. எங்களது வாழ்க்கையே தற்போது போராட்டமாக மாறிவருகிறது.ஒரு வாரம் முனனதாக எங்கள் தாயாருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. எங்கள் வீட்டின் பரபரப்பான நிலையினால் அவர் குணமடையாமல் உள்ளார். அவரும் எங்களை விரைவில் விட்டுச் சென்றுவிடுவார் போலும்.” என்று இர்ஷத் தெரிவித்துள்ளார்.
பெஹ்லு கானை பசு பயங்கரவாதிகள் தாக்கிய போது இர்ஷத் மற்றும் அவரது சகோதரர் ஆரிஃப் ஆகியோர் பெஹ்லு கான் உடன் இருந்தனர். இவர்களை அவர்களது வாகனத்தில் இருந்து இழுத்து பசு பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஓம் யாதவ், ஹுகும் யாதவ், சுதிர் யாதவ், ஜக்மல் யாதவ், நவீன் ஷர்மா மற்றும் ராகுல் சைனி ஆகியோர் ஈடுபட்டனர் என்று பெஹ்லு கான் தனது மரண தருவாயில் காவல்துறையிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆயினும் இவர்களை அவர்களது மொபைல் போன் இருப்பிடத் தகவலை அடிப்படையாக கொண்டு ராஜஸ்தான் அரசு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், “இவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேறு இரண்டு பேர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பெஹ்லு கான் குறிப்பிட்ட இந்த ஆறு நபர்கள் தாக்,உதல் நடைபெற்ற இடத்தில் இருந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், “பெஹ்லு கானின் கொலை திட்டமிடப்பட்ட கொலை போன்று தெரியவில்லை. இந்த ஆறு நபர்களும் தங்களது போன்களை வேறு இடத்தில் விட்டு விட்டு இந்த தாக்குதலை நடத்த சென்றிருப்பார்கள் என்பது ஏறுக்கொள்ள முடியாது. மொபைல் போன்கள் நம் வாழ்வில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்ட நிலையில் மாடுகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத்தை போன் இல்லாமல் பின் தொடர்வது என்பது இயலாத காரியம். மேலும் வேறு பகுதியை சேர்ந்த நபரான பெஹ்லு கான் மற்றொரு பகுதியை சேர்ந்த ஆறு நபர்களின் பெயர்களை மிகவும் மோசமான உடல் நிலையிலும் மிகச் சரியாக நியாபகம் வைத்து கூறுவதும் நம்பத் தகுந்ததாக இல்லை. இந்த ஆறு நபர்களும் முதலில் தலைமறைவாக இருந்தனர். அவர்களிடம் பேசிய பின்னரே நாங்கள் இந்த முடிவிற்கு வந்தோம்.” என்று கூறியுள்ளார்.
இந்த ஆறு நபர்களில் மூன்று பேர் வலது சாரி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள். ஜமால் யாதவ் என்பவர் ராத் பசு பாதுகாப்பு மையத்தை நடத்தி வருபவர்.
பெஹ்லு கான் கொலை வழக்கில் அடையாளம் தெரியாத 200 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெஹ்லு கான் கொலையின் வீடியோ காட்சி மூலம் ஒன்பது நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் தலைமறைவாக உளள்னர்.
ராஜஸ்தான் அரசின் இந்த செயல்பாட்டை விமர்சித்த CPI(M) பொலிட்பீரோ உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், “எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமலேயே அனைத்து குற்றவாளிகளையும் வழக்கில் இருந்து அரசு விடுவித்துள்ளது. ஒரு வகையில் பெஹ்லு கான் கொலைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் கூறியதற்கு ஒத்துப் போகும் வகையிலேயே இந்த விசாரணை முடிவும் அமைந்துள்ளது. இதுவே இந்த விசாரணையின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை தெரிவிக்கின்றது. பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடைபெறும் கூட்டுப் படுகொலைகளை கண்காணிக்க சுதந்திரமான விசாரணை ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பசு பயங்கரவாதிகளால் ஏற்படும் வன்முறைகளை தவிர்க்க ஒரு மூத்த அதிகாரியை ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியமர்த்தி பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது குறித்து ராஜஸ்தான் உட்பட மூன்று மாநிலங்களின் பதில்களையும் முன்னதாக உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
படம்: தி வயர் பெஹ்லு கானை கொலை செய்தவர்களை ராஜஸ்தான் அரசு காப்பாற்ற நினைக்கிறது: பெஹ்லு கான் குடும்பத்தினர்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:06:00
Rating:
No comments: