இஸ்லாமிய நோக்கில் நடுநிலைச் சமூகமும், விடுதலைச் சிந்தனையும்-பேராசிரியர் பரீத் இஸாக்
அறிமுகக் குறிப்பு
நவீன இஸ்லாமிய சிந்தனை கருத்தாடல்களில் பங்குகொள்ளும் தென்னாபிரிக்க இஸ்லாமிய சிந்தனையாளர் பரீத் இஸாக். சர்வதேசரீதியில் பல்வேறு தளங்களில் தனது கருத்துக்களை விவாதித்து வருகின்றார். தற்போது இவர் ஜொஹன்னஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறை பீடாதிபதியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகம் , பேர்லின் பல்கலைக்கழகம் , கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகவும் பங்களித்துள்ளார். மட்டுமன்றி, அம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நெல்ஸன் மண்டேலா சிறப்பு விரிவுரைத் தொடரை ஆரம்பித்து வைத்தவர் பேராசிரியர் பரீத் இஸாக் என்பதும் நோக்கத்தக்கது.
‘Al Quran , Pluralism and the Liberation Theology’ என்ற பேராசிரியர் பரீத் இஸாகின் நூல் நவீன இஸ்லாமிய சிந்தனை தொடர்பான கலந்துரையாடலுக்கான அவரது சிறந்த பங்களிப்பு எனலாம். சமூக விடுதலைக்காக பன்மைச் சமூகத்தில் வாழும் ஒரு முஸ்லிம் எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும்? என்பதற்கான அல்குர்ஆனிய சிந்தனைகளை இந்நூல் பேசுகிறது. ‘அல்குர்ஆனும் ,விடுதலைச்சிந்தனையும்’ , ‘அல்குர்ஆனில் நிழலில் வன்முறை மற்றும் விடுதலைச் சிந்தனை’ , ‘சமகால உலகில் நடுநிலைச் சமூகத்தின் இயங்குதளம்’ போன்றன சர்வதேச ரீதியில் பேராசிரியர் பரீத் இஸாக் ஆற்றிய பிரபல்யமான ஆய்வுரைகளாகும். மேற்கத்தய புத்திஜீவித்துவ உலகில் ‘Al Quranic Scholar’ என பலரும் அவரை அழைப்பதுண்டு. சமீபத்தில் கேரள மாநில இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தின் (SIO) வருடாந்த ஆய்வு மாநாட்டில் ‘Towards understanding Islamic theology of Liberation’ (இஸ்லாமிய விடுதலைச் சிந்தனையை புரிந்து கொள்வதனை நோக்கி) என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இக்கட்டுரை தொகுத்தளிக்கிறது.
இஸ்லாமிய விடுதலைச் சிந்தனை என்றால் என்ன?
‘இஸ்லாமிய விடுதலைச் சிந்தனையை புரிந்து கொள்வதனை நோக்கி ‘ என்ற வசனத்தில் இஸ்லாமிய சிந்தனை (Islamic thought) , விடுதலைச் சிந்தனை (Liberation theology) மற்றும் நோக்கி (Towards) என்று மூன்று சொற்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் இஸ்லாமிய சிந்தனை என்பது குறித்த ஒரு விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய மூலங்களை அல்லது அது முன்வைக்கும் நியாயங்களை ஆதாரமாகக் கொள்வதாகும். உண்மையில் இதுவோர் மனித செயற்பாடே. எனவேதான், எனது தலைப்பிற்கு ‘Towards’ (நோக்கி) என்ற சொல்லையும் இணைத்திருக்கிறேன். இதுதான் ஒரே இஸ்லாமிய நிலைப்பாடு என வாதிப்பது ஒரு வித அறிவுச் செறுக்குடன் தொடர்புபட்டதாகும். இஸ்லாமியப் புரிதலொன்றை கட்டியெழுப்புவதற்கான கூட்டுச் செயற்பாட்டில் ஒரு கதாபாத்திரத்தையே நான் வகிக்க விரும்புகிறேன். மேலும், மூன்றாவது சொல்லான ‘விடுதலைச் சிந்தனை’ என்பதே எமது கருத்தாடலுக்கான பிரதான கருப்பொருளாகும்.
விடுதலைச் சிந்தனைக்கான அடிப்படைகள் :
அல்ஆர்ஆனிய விடுதலைச் சிந்தனை இரண்டு அடிப்படைகளைக் கொண்டவை என்பது எனது புரிதலாகும்.
முதலாவது, ஒதுக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட , புறக்கணிப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட மக்களுக்காக (Marginalized Community) எமது சிந்திப்புகளில் அதிக இடத்தை கொடுத்தலும், அத்தகைய மக்களது தேவைகள், அபிப்பிராயங்கள் , அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு செவிசாய்த்தலுமாகும். இந்த பரப்பெல்லையில் உள்ள மக்களை அடையாளப்படுத்துவதற்காக அல்குர்ஆன் ‘அல் முஸ்தல்அபூன்’ (பலவீனப்பட்டவர்கள்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த வகையில் சமூகத்தளத்தில் பலவீனப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கு இஸ்லாமிய வழிகாட்டல்களை எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பதே ‘இஸ்லாமிய விடுதலைச் சிந்தனை’ என வரையறை செய்யலாம்.
‘யார் எமது விடயத்தில் முயற்சி செய்கின்றாறோ, அவர்களுக்கு பல வழிகளை நாம் திறந்து கொடுப்போம்’ என்ற அல்குர்ஆனிய வசனம் இஸ்லாமிய விடுதலைச் சிந்தனையின் இரண்டாவது அடிப்படையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதாவது, ‘இதோ எனது வேத வரிகள் இருக்கின்றன , இதனை பின்பற்றினால் நீங்கள் விடுதலையடைவீர்கள்’ என்று அல்ஆன் கூறவில்லை. மாறாக, எனது வழிகாட்டல்களின் ஒளியில் நீங்கள் தொடர்ச்சியாக பயணிக்கும் போது, வெற்றிக்கான பல்வேறு வழிகளை நீங்கள் அடைந்து கொள்வீர்கள் என்றே அல்லாஹ் இங்கு கூறுகிறான். எனவே, வரிக்கு வரி அல்குர்ஆனை பின்பற்றுவதால் அடைந்து கொள்ளும் இலக்கல்ல ‘விடுதலை’ என்பது. மாறாக, எப்படி ஒரு சமூகம் தனது விடுதலைக்காக சிந்திக்கிறது ? திட்டமிடுகிறது? எவ்வாறு விடுதலையை மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறது? என்பதும் சமூக விடுதலைக்கு அவசியமாகும். இது அல்குர்ஆன் முன்வைக்கும் விடுதலைக் கோட்பாட்டிற்கான இரண்டாவது அடிப்படையாகும்.
பலவீனமானவர்களின் மீதான அல்லாஹ்வின் அருள் :
சமூக விடுதலை பற்றிய அல்குர்ஆனிய சிந்தனையை ஸூரா அல்கஸஸின் ஆரம்ப வசனங்கள் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகின்றன. அதில் ‘பூமியில் பலவீனமானவர்களாக இருந்;தவர்கள் மீது நாம் எமது அருளை சொரிந்தோம். இன்னும், அவர்களை நாம் பூமியின் ஆட்சியாளர்களாகவும் மாற்றினோம். பூமியின் வாரிசுகளாகவும் ஆக்கினோம்’ என அல்கஸஸின் இரண்டாவது வசனம் பேசுகிறது. மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனம் இரண்டு மிகப் பிரதானமான கருத்துக்களை சமூக விடுதலை தொடர்பாக கோடிட்டுக் காண்பிக்கிறது.
முதலாவது, அல்லாஹ் பலீனமானவர்களுக்கு அருள்பாளித்தான் என்பது. அப்படியென்றால், அல்லாஹ் ஏனைய மனிதர்களுக்கு அருள்பாளிக்க வில்லையா? என்ற கேள்வி எழுகிறது. பலவீனமானவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தான் என்று வருகிறது. அவ்வாறென்றால், ஏனையவர்கள் ஆட்சிபுரிவதனை அல்லாஹ் விரும்பவில்லையா? என்ற மயக்கம் ஏற்படுகிறது. உண்மையில், சமூகப் போராட்டத்தில் பலவீனமானவர்களை அல்லாஹ் மையப்படுத்துகிறான். இஸ்லாமியப் போராட்டத்தில் மைய நிலை ‘பலவீனமானவர்களை பாதுகாத்தலாகும்’ என்ற உட்பொருளை உணர்த்துவதற்கே அல்குர்ஆன் இங்கு முயற்சிக்கிறது. பலவீனமானவர்கள் என்ற வட்டத்திற்குல் நசுக்கப்பட்ட ,உரிமை மறுக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட சகலரையும் உள்ளடக்க முடியும்.
அடுத்து, ‘ஏன் நாம் பலவீனப்பட்டவர்களை பூமியின் ஆட்;சியாளர்களாக மாற்றினோம் என்றால், பிர்அவுனும், ஹாமானும் எதனையிட்டு பயந்து கொண்டிருந்தார்களோ (தங்களது ஆதிக்கம், அதிகாரம் இல்லாமல் போகலாம்) , அதனை அவர்களுக்கு காண்பிப்பதற்காக’ என்பது குறித்த ஸூரா அல்கஸஸினுடைய வசனத்தின் இரண்டாவது பகுதியாகும். இவ்வசனம் ஆழமான யதார்த்தமொன்றைச் சொல்கிறது. பிர்ஆனும் , ஹமானும் ஆட்சி பீடத்தில் இருக்கும் போது பலவீனர்களாக இருந்த பனூஇஸ்ரேவலர்கள் சுதந்திரமாக முடியாது என்பதாகும். ஏனெனில், அவர்களிருவரும் (பிர்அவன் , ஹமான்) திட்டமிட்ட முறைவழியொன்றுக்கு (System) ஊடாக மக்களை பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். இதனால்தான், ‘பலவீனமானவர்கள்’ என்ற வசனத்தை பயன்படுத்தாது ‘உஸ்துல்இபூ’ (பலவீனப்படுத்தப்பட்டவர்கள்) என்ற பிரயோகத்தை அல்குர்ஆன் பயன்படுத்துகிறது.
அதாவது, யாரும் இயற்கையாக பலவீனப்படுவதில்லை. திட்டமிடப்பட்ட முறையொன்றுக்கு ஊடாக மனிதர்கள் ‘பலவீனப்படுத்தப்படுகிறார்கள்;’ என்றே அல்குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு மக்களை பலவீனப்படுத்தும் இயந்திரத்தின் அத்திவாரத்தை அசைக்காத வரை, மக்களை விடுதலை செய்ய முடியாது.. எனவே, சமூக விடுதலை என்பது சமூகத்தை அடிமைப்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு , அதற்கெதிராக போராடுவதினுடாகவே நிகழ முடியும் என அல்குர்ஆன் இங்கு வாதிக்கிறது. மறுபுறம், சமூகத்தை பலவீனப்படுத்தும் காரணிகளுடன் , முறைமைகளுடன் நேர்மறையாக உறவாடுவதும், அதனுடன் ஆறத் தழுவி சமதானம் செய்து கொள்;வதும் சமூக விடுதலைக்காக பாதையாக இருக்க முடியாது என்பது அல்குர்னிய சிந்தனையாகும்.
அவ்வசனம் சமகால ‘சமூகவிடுதலை’ பற்றிய பிழையான புரிதலொன்றையும் எமக்கு கற்றுத் தருகிறது. இன்றைய உலகத்தில் பாதிக்கப்பட்ட , உரிமை மறுக்கப்பட்ட , ஆக்கிரமிக்கப்பட்ட பலர் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கு பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் , நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதனை ‘ஹைராத்’ (சமூகநலன்) என மிகப் பெரிய விளம்பரத்துடன் மேற்கொள்கின்றன. ஆனால், அவர்கள் ஒடுக்கப்பட்டதற்கான , உரிமை மறுக்கப்பட்டதற்காக காரணியை அடையாளம் கண்டு , அதற்கெதிராக சவால் விடுவதற்கு எவரும் தயாராக இல்லை. ‘மூஸாவே நீங்கள் பிர்அவ்னிடம் சென்று ஏன் நீ மக்களை அடிமைப்படுத்துகிறாய் என்று கேளும்’ என்பதே அர்குர்ஆனின் வழிகாட்டலாகும். மக்களை பலவீனப்படுத்தும் முறைமையை , காரணியை எதிர்த்து நிற்க அல்லாஹ் மூஸாவை ஏவினானே தவிர, பாதிக்கப்பட்ட பனூ இஸ்ரேவேலர்களுக்கு உதவி செய்யுமாறு அர்குர்ஆன் கூறவில்லை.
இன்று, சமூக நலப் பணிகளை பலரும் சமூக விடுதலைக்கான பணியாக கருதுகின்றனர். ஆனால், பாதிக்கப்படவர்களுக்கு உதவி செய்வதனை அல்குர்ஆனிய நோக்கில் விடுதலைச் சிந்தனை என்று கூற முடியாது. உண்மையில், அது வெறும் தர்மம் சார்ந்த நோக்கை (Charity perspective) அடிப்படையாகக் கொண்டதாகும். இஸ்லாம் இதற்கும் பாரியதொரு முக்கியத்துவத்தை கொடுக்கிறது. ஆனால், இஸ்லாம் அதனை விட ‘நீதியை அடிப்படையாகக் கொண்ட நோக்கையே (Justice perspective) முதன்மையானதாக கருதுகிறது. இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு தன்னை தயார்படுத்துவதற்கு போலவே, மக்களை பாதிப்புக்கு உட்படுத்தும் முறைமைக்கு (System) சவால் விடுக்கவும் தன்னை தயார் செய்ய வேண்டும். இம்முன்னுரிமையை தவறவிடும் பட்சத்தில், மக்களை பாதிப்புக்கு உட்படுத்தும் முறைமையிடமே (ளுலளவநஅ) பணம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அணுகுமுறைக்குல் நாம் நுழைந்து விடலாம். இதனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தை தொட்டுக்காட்ட முடியும்.
அதாவது, நதிக் கரையில் ஒரு மனிதன் வாழந்து வருகிறார். ஒருமுறை நதியில் அடிபட்டு வந்து சிறிய கைக்குழந்தையொன்றை காண்கிறார். உடனே, அக்குழந்தையை கைப்பற்றி கவனமாக தனது வீட்டில் வளர்க்கிறார். மீண்டும் அடுத்தநாள் மற்றொரு குழந்தை அதே நதியில் அடிபட்டு வருகிறது. அதனையும் கைப்பற்றி வீட்டில் வைத்துக் கொள்கிறார்;. இவ்வாறு ஒரு மாதத்தில் நதியில் அடிப்பட்டு வந்த 30 குழந்தைகள் அவரது வீட்டில் வந்து சேர்ந்து விடுகின்றன. பின்பு, அவ்வநாதைக் குழந்தைகளை வளர்ப்பதற்காக ‘அநாதை மடமொன்றை’ அவர் ஆரம்பிக்கிறார். அங்கு வரும் பலரும் ‘எவ்வளவு சிறந்த சமூக நலப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்’ என அவரைப் புகழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். அப்போது அங்கு வந்த ஒரு மனிதன் தன்னை ‘பரிபகாரியாக’ அறிமுகம் செய்து விட்டு, ‘நீ செய்யும் இந்த நல்ல காரியத்திற்கு நான் மாதந்தம் குறிப்பிட்ட தொகை உதவி செய்கிறேன். இந்த நதியோரமாக இரண்டு மைல் தூரம் வந்தால், எனது வீட்டை உன்னால் அடைந்து கொள்ள முடியும். அங்கு வந்து பணத்தை மாதம் தோறும் பெற்றுக் கொள்ளும்’ என்றார். சில நாட்கள் செல்ல பரோபகாரியாக தன்னை அறிமுகம் செய்த மனிதனே நதியில் குழந்தை வீசிவிடுபவன் என்ற தகவல் அநாதைகள் பராமரிப்பு மையத்தின் நிறுவனர்க்கு தெரியவருகிறது.
இதுதான் முதலாளித்துவ உலகம். நதியில் முதலாவது குழந்தையை கண்டவுடனேயே , அக்குழந்தையை நதியில் வீசியவர் யார்? அவன் ஏன் குழந்தையை வீசுகிறான்? என சமூக நல சேவை செய்யும் மனிதன் தேடியிருந்தால், சமூகத்திற்கு எதிரான ஈணச் செயலை மேற்கொள்ளும் அந்த மனிதன் தன்னை பரோபகாரியாக காண்பிப்பதற்கான வாயில் மூடப்பட்டிருக்கும். மட்டுமன்றி அடுத்த 29 குழந்தைகளும் தப்பியிருக்க வாய்புண்டு. இவ்வாறுதான், நாம் தர்ம நோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து, நீதி நோக்கை இரண்டாம் பட்சமானதாக கருதும் போது சர்வதேச குற்றவாளிகள் சமதான நீதவான்களாக மாறிவிடுகின்றார்கள். இந்த விடயத்தில் இஸ்லாமிய நிறுவனங்கள் ,அமைப்புகள் , இயக்கங்கள் மற்றும் தனிமனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீதியையும், தர்ம நோக்கையும் செயற்படுத்தும் போது , இரண்டினதும் வேறுபாடுகளை , சமூக தளத்தில் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகளை வித்தியாசப்படு;த்தி நோக்குவது மிக முக்கியமானதாகும். ஏனெனில், எமது தர்ம நோக்கு அநீதிக்கு குடையாக அமைந்து விடக் கூடாது.
அல்குர்ஆன் ‘அல்வஸத்’ என முஸ்லிம் சமூகத்தை வர்ணிக்கிறது. அதாவது, மனித சமூகத்திற்கு சான்று பகிர்வதற்காக நடுநிலையான சமூகமாக முஸ்லிம் உம்மாவை அல்லாஹ் அனுப்பியதாக அல்குர்ஆன் பேசுகிறது. உண்மையில் ‘அல்வஸத்’ என்ற வார்த்தைக்கு பல்வேறு விளக்கங்களை தப்ஸீர் அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதிலும், குறித்த பதப் பிரயோகம் பல்வேறு வரலாற்றுக் கால கட்டங்களில் பல்வேறு நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஆரம்ப கால தப்ஸீர் ஆசிரியர்கள் ‘அல்வஸத்’ என்ற வசனத்தை ‘அல்அத்ல்’ நீதியான சமூகம் என்று விளக்கமளித்துள்ளதனை அவதானிக்க முடியும். அதாவது, விவகாரங்களை நீதியாக அணுகும் சமூகம் என பொருள் கோடல் செய்ய முடியும். நீதி என்பது விடுதலைச் சிந்தனைக்கு மிக நெருக்கமான விழுமியமாகும்.
எனவே, நடுநிலைச் சமூகமொன்றின் பிரதான பணியாகவும் அதிகாரங்களினால் அநீதியாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மனித சமூகத்தை விடுதலை செய்வதனையும், அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உழைப்பதனையும் நோக்கியே அமைய முடியும் என அழுத்தமாகக் கூறலாம். மாத்திரமன்றி, வஹி இறங்கிய ஆரம்ப வரலாற்றுக் கட்டங்களில் ‘தக்வா’ ‘ஈமான்’ மற்றும் ‘அல்ஜிஹாத்’ போன்ற அல்குர்ஆனியப் பதங்களை விடுதலைக் கோட்பாடுகளாவே நபி (ஸல்) அவர்களை எதிர்த்த சமூகங்கள் விளங்கியிருந்தன. அன்றைய சமூகத்தை கட்டுப்படுத்திய அடிமைத்துவம், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் கோத்திர வெறி போன்றவற்றுக்கு எதிரான விடுதலைச் சித்தாந்தமாகவே அல்குர்ஆனியப் பிரயோகங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழில்: அஷ் ஷெய்க் ஸக்கி ஃபவுஸ் நளீமி
இஸ்லாமிய நோக்கில் நடுநிலைச் சமூகமும், விடுதலைச் சிந்தனையும்-பேராசிரியர் பரீத் இஸாக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:20:00
Rating:
No comments: