சோபியாவுக்கு ஜாமீன்!
தமிழிசை முன்பு, பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிற்காக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த நிலையில், அதே விமானத்தில் வந்த சக பயணியான மாணவி சோபியா, ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று முழக்கம் எழுப்பினார். இதனால் கோபமடைந்து விமானம் தரையிறங்கியவுடன் சோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை, அவருக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தார். தமிழிசையின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், பாஜகவினர் தங்களை விமான நிலையத்தில் மிரட்டியதாக சோபியாவின் தந்தை அளித்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சோபியா மீது 505(1)(B), 290 மற்றும் 75 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை தூத்துக்குடி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சோபியா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு, தூத்துக்குடி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சோபியா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சோபியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு பிரிவு வழக்கிற்கு பொருந்தாது என்று கூறி இரண்டு பிரிவுகளில் மட்டும் நீதிபதி ரிமாண்ட் செய்தார். இரண்டு பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகள் என்பதால், இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்படுவார். சோபியாவுக்கு நடந்த ஆபத்துக்கள் சம்பந்தமாக தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இதனை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சோபியாவுக்கு ஜாமீன்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:16:00
Rating:
No comments: