ஹரியானா: பாலியல் வன்முறைகளின் தலைநகரா?
ஹரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி மாணவியை கும்பல் பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கும், அந்த மாநிலத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துவருவதற்கும் மாநில அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னதாக, சிபிஎஸ்சியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவரில் நிசு என்ற ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய இரு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் இன்றும் கைது செய்யப்படாதது, மாநில அரசின் மீது அனைத்து தரப்பினரையும் கண்டனம் தெரிவிக்க வைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே ஹரியானாவில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சம்பவம் நடந்த ரேவரி என்ற மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னதாக 10 வயது சிறுமி அவளது மாமாவினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். ஜிந்த் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரின் நிர்வாணமான உடல் கைப்பற்றப்பட்டது. அவரின் உடல் கூறாய்வில் அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான ஆயுதம் குத்தப்பட்டு இறந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.
பானிபட் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 13ஆம் தேதியன்று 11 வயது சிறுமி கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதே நாளில் 22 வயதான பெண் ஒருவர் பரிதாபாத்தில் கார் ஒன்றில் கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் அதே மாதத்தில் 16ஆம் தேதியன்று 15வயது சிறுவன் மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியுள்ளான். அதனைத்தொடர்ந்து 2 நாட்களுக்குள் 20 வயது பெண் ஒருவரை கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் 2014லிருந்து 1.5 மடங்கு அதிகரித்து வருவதாக அந்த மாநில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது நடந்த சம்பவத்திற்கு இன்னும் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,ஹரியானா பாலியல் வன்முறைகளின் தலைநகராக மாறி வருவதாக எதிர்கட்சிகளும் ஊடகங்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
ஹரியானா: பாலியல் வன்முறைகளின் தலைநகரா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:03:00
Rating:
No comments: