எது கவுரவக் குறைச்சல்?
சல்மா
ஜூலை 28ஆம் தேதி கேரளாவின் செங்கனூரில் பம்பா நதிக்கரையோரம் நிகழ்ந்த இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். அகன்று பரந்திருந்த நதியின் மீது இடைவிடாது கொட்டிய மழை, நீரைப் பெருக்கியபடி இருந்தது. இரவும் பகலும் எங்களை ஆற்றுப்படுத்திய மழையை ரசித்துவிட்டுக் கடவுளின் தேசத்திலிருந்து கிளம்பியபோது, ரசிக்கவே இயலாத வகையில் மழை அந்த நகரத்தின் மீது மாபெரும் தாக்குதலை நிகழ்த்தும் என நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
பெரும் சுமையாக அந்தத் துயரம் நம் மீது கவிந்துவிட்டது. இயற்கை சிதைத்துவிட்டுச் சென்ற பிறகு இப்போதைக்கு எழ முடியாததொரு நிலையில் வீழ்ந்து கிடக்கிறது அந்த மாநிலம். வெள்ளத்தால் குதறப்பட்ட அந்த மாநிலத்தையும் மக்களையும் தங்கள் தோள்களில் சுமக்கவென பேதமேதும் இல்லாமல் நீண்ட ஓராயிரம் உதவிக் கரங்களும், மனித மனங்களில் பீறிட்ட பேரன்பையும் கண்டு மனநிறைவை அடைந்தோம்.
இந்தச் சமயத்தில்தான் வெள்ளச் சேதம் ரூ.22,000 கோடி என்கிற கணக்கீட்டை மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இந்திய அரசு ரூ.600 கோடியையும், ஐக்கிய அரபு குடியரசு ரூ.700 கோடியையும் உதவித் தொகையாக அறிவித்ததாகச் செய்தி வந்தது.
அம்மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த நிதி உதவிகள் துணையாக இருக்கும் என்ற சிறு ஆசுவாசம் நமக்கெல்லாம் எழுந்தது. அப்போதுதான், மத்திய அரசு இது குறித்த தன் நிலையைத் தெரிவித்தது. இயற்கைப் பேரிடர்களின்போது வெளிநாட்டின் உதவிகளைப் பெறுவதில்லை என்று 2004இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ கூட்டணி அரசு எடுத்த கொள்கை முடிவினைச் சுட்டிக்காட்டி அந்நிய நாட்டின் நிதியைப் பெற இயலாது என மத்தியில் ஆளும் பாஜக அரசு கூறியது. பிற நாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்கு மாற்று வழியாக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அல்லது தனி நபர்களுக்கு நிதியை அளிக்க முடியும் என்கிற விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப்பட்டன .
இந்தச் சமயத்தில் இரண்டு விஷயங்களை முன்வைத்து நாம் பேச வேண்டியிருக்கிறது.
ஒதுக்கப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
மோடி அரசு ஆட்சிக்கு வந்த இந்த நான்காண்டுகளில் இந்தியாவில் மக்களுக்குப் பணி புரியக்கூடிய ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களது நிதி ஆளுகை கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பல தொண்டு நிறுவனங்களது வெளிநாட்டுப் பணம் பெறுகிற உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அவை மறுவரையறை செய்யப்பட்டன. உரிமம் ஆண்டுக்கொருமுறை புதுப்பித்தல் எனச் சட்டம் மாற்றப்பட்டது. அந்நிய நிதியைப் பெறப் புதிதாகக் கோரப்பட்ட எண்ணற்ற உரிமங்கள் மறுதலிக்கப்பட்டன அல்லது உள்துறை அமைச்சகத்தின் மேசையில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. காரணம், வெளிநாட்டு நிதி உதவிகள் வழியே இந்தியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்வதான பீதியை இந்த அரசு கொண்டிருக்கிறது என்பதே.
இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கப் பிற நாடுகளது நிதி உதவிகளைப் பெறுவதற்கான மாற்று வழியாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்க முடியும் என்பதையும் இந்த அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது .
தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சார்ந்த தன்னார்வலர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டுப் பொருட்களை ஓடி ஓடிச் சேகரித்து ஒருங்கிணைத்து அவற்றைத் தேவைப்படுகிற இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தபடி இருப்பதை இன்றைய பேரழிவின்போது நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். ஆயிரக்கணக்கான மனிதர்கள் இப்படி உதவிகள் புரிவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பேரிடர் நிகழும்போது அரசை மட்டுமே நம்பி அமர்ந்திருந்தோம் என்றால் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்ய முடியாது. மக்களுக்கான உதவிகள் உரிய நேரத்தில் உரிய விதத்தில் போய்ச் சேராது. தன்னார்வலர்களோடு இணைந்துதான் இந்த விஷயங்களை அரசு செய்ய முடியும்.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளங்களைத்தான் பாஜக அரசு சந்தேகப்பட்டு, அடித்தட்டு மக்களிடம் அவர்கள் பணி செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.
கொள்கை என்ன சொல்கிறது?
அது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு நிதி உதவிகள் குறித்த சட்டத்தில் இருக்கக்கூடிய சாதகமானதொரு விஷயத்தை அவ்வளவாக யாரும் பேசவில்லை. பேரிடர் நிகழும்போது வெளிநாடுகளின் உதவியைக் கோருவதில்லை என்பதை இந்திய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. ஆயினும், வேறொரு நாட்டின் அரசு நல்லெண்ண நோக்கத்துடன், பேரிடர் பாதித்த மக்களின் நலனுக்காக தன்னார்வத்துடன் உதவ முன்வந்தால், மத்திய அரசு அதை ஏற்கலாம். அதாவது, கோரிப் பெறக் கூடாது, தானாக முன்வந்து எந்த நாடேனும் தந்தால் அதை ஏற்கத் தடை இல்லை.
வெளிநாடுகளிலிருந்து வரும் இத்தகைய உதவிகளைப் பரிசீலிக்கும் பொறுப்புள்ள வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய அரசின் உள் துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதை முறையாக வழிநடத்த வேண்டும். வெளிநாடு வழங்கக்கூடிய உதவிகளைக் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் ஆலோசித்து, உள் துறை அமைச்சகம் மதிப்பீடு செய்யும்.
2016ஆம் ஆண்டில் இதே பாஜக அரசு வெளியிட்ட பேரிடர் மேலாண்மை குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் இது..
இதிலிருந்து தெரிவது என்ன? மத்திய அரசு சொன்ன கொள்கை முடிவு என்பது தவறு. உதவியைப் பெறுவதில்லை என்பது கொள்கை முடிவு அல்ல. உதவி கோருவதில்லை என்பதே கொள்கை முடிவு. கையேந்த வேண்டாம், தானாகக் கிடைத்தால் ஏற்பதில் தவறில்லை என்பதே கொள்கை.
இப்படியிருக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க முன்வந்த 700 கோடியை மறுப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இதுபோல நடந்துகொள்கிறது என்னும் குற்றச்சாட்டு இதையொட்டி எழுகிறது. அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. கேரள மக்களின் துயர் துடைப்பதற்கான உதவிகளை எல்லா வகையிலும் செய்ய வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
எது கவுரவம்?
பெண்களுக்கெதிரான பாலியியல் வன்முறையில் முதலிடம் பிடித்துள்ள நாடு, குழந்தைக் கடத்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு, கடந்த சில வருடங்களில் 50,000 குழந்தைகளைத் தொலைத்துவிட்டு மீட்க முடியாத நாடு, விவசாயிகளின் தற்கொலையில் முன்னிற்கும் நாடு என்றெல்லாம் இந்தியா சர்வதேச அரங்கில் பல ‘பெருமை’களைப் பெற்றுள்ளது. உலகமெங்கும் அறிந்த தகவல்கள் இவை.
இந்த நாட்டை உலக அரங்கில் தலைகுனியவைக்கும் இந்தக் காரணிகள் நாட்டின் கவுரவப் பிரச்சினை இல்லையா? இயற்கைச் சீற்றத்தின்போது பிற நாடுகள் தாமாக முன்வந்து பெறும் உதவியைப் பெறுவதுதான் கவுரவக் குறைச்சலா?
எது கவுரவக் குறைச்சல்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:19:00
Rating:
No comments: