நீங்கள் அம்பானியின் பிரதமரா?
“நீங்கள் அம்பானியின் பிரதமரா? இல்லை மக்களின் பிரதமரா?. ஏன் லோக்பால் மசோதாவை நீங்கள் கொண்டுவரவில்லை என்று இப்போதுதான் புரிகிறது பிரதமரே” என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது போர் விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு போர் விமானத்திற்கு ரூ.1,670 கோடி என்று விலை நிர்ணயித்திருப்பதாகவும் முறைகேடாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டே, “‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது” என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஜாவேர் ஷெர்கில் ஆகியோருடன் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“லோக்பால் மசோதாவை கொண்டுவராததற்குக் காரணமே, ரஃபேல் ஊழல் கண்டுபிடிக்கப்படும் என்பதால்தான். பிரதமரே, தயவுசெய்து உங்கள் நல்ல நாட்களை(அச்சா தின்) மறந்துவிடுங்கள். சத்திய நாட்களை(சச்சே தின்) வெளிக்கொண்டு வாருங்கள். உண்மையை பேசுங்கள்” என்றார்.
பிரான்ஸ் அதிபர் விளக்கம்
இதற்கிடையே இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், ஐ.நா கூட்டத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். நேற்று ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரிடம் செய்தியாளர்கள் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அவர், ”ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது நான் பதவியில் இல்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸிடம் தெளிவான விதிமுறைகள் உள்ளன. இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். ராணுவ ஒத்துழைப்புத் தொடர்பாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் துவக்கத்தில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது ஹாலண்டேதான் பிரான்ஸ் அதிபராக இருந்தார். அதன் பிறகு மே மாதம் நடந்த தேர்தலில், பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீங்கள் அம்பானியின் பிரதமரா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:41:00
Rating:
No comments: