அமைச்சர் ஊழல்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்!
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தப் புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ஊழலில் ஈடுபட்டது உண்மைதான் என அறப்போர் இயக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “மே 2014இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி பதவியேற்றார். அதன் பின்னர், அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான கே.சி.பி. இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட், வரதன், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, செந்தில் அண்டு கோ ஆகிய நான்கு நிறுவனங்களும் மிகப்பெரிய லாபம் அடைந்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளோம்.
கே.சி.பி. நிறுவனத்தின் விற்றுமுதல் 2011-2012ஆம் ஆண்டில் ரூ.51 லட்சமாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால், 2014-15ஆம் ஆண்டில் ரூ.100 கோடியாக உயர்ந்த இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 2016-17இல் ரூ.142 கோடியாக அதிகரித்துள்ளது.
கே.சி.பி. நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சந்திரபிரகாஷ் என்பவரின் தாயார் சுந்தரி கிருஷ்ணகுமாருக்குச் சொந்தமான நிறுவனம் வரதன். சந்திரபிரகாஷின் மனைவியின் நிறுவனம் கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா. இந்த நிறுவனங்களின் விற்றுமுதலும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தில் செய்த ஒப்பந்தப் பணிகள் மூலமே இவர்களின் வருவாய் உயர்ந்துள்ளது. ஒப்பந்தங்கள் அனைத்துமே முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட நான்கு நிறுவனங்களும் தங்களுக்குள்ளேயே ஏலம் கேட்டு எடுத்துள்ளன. பெரும்பாலும் கே.சி.பி. மற்றும் வரதன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே போட்டிப் போட்டு ஏலம் எடுத்துள்ளன.
சென்னை மாநகராட்சியைச் பொறுத்தவரை ஜனவரி 2018இல் இருந்து மே 2018 வரை ஒன்பது டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதில், ஏழு டெண்டர்கள் வரதன் நிறுவனத்துக்குச் சென்றுள்ளது. இதேபோல், வரதன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்பதால் ரீ-டெண்டர் விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலும் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் வேலுமணி தனது சகோதரர் அன்பரசன் மற்றும் நெருக்கமானவர்களான ராஜன் சந்திரசேகர், சந்திரபிரகாஷ், சந்திரபிரகாஷின் தாயார் சுந்தரி, ராபர்ட் ராஜா ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார். தனது பினாமிகள் மூலம் சொத்து சேர்ப்பதற்காக வேலுமணி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, பினாமி பரிவர்த்தனை சட்டம், ஒப்பந்த சட்டம், பண மோசடி உள்ளிட்ட சட்டங்களின் கீழ் புகாரைப் பதிவு செய்து, அமைச்சர் வேலுமணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஊழல்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:03:00
Rating:
No comments: