முகிலனை ஸ்டெர்லைட் நிறுவனம்தான் கடத்தியுள்ளது-குமரெட்டியாபுரம் மக்கள்
சூழலியல் போராளி முகிலனை ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான் கடத்தியுள்ளனர் என்றும், தமிழக அரசு அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் குமரெட்டியாபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், அந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒன்று என்பதை ஆதாரத்துடன் ''கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?'' என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் தோழர் முகிலன் வெளியிட்டார்.
அன்றிரவு 10:30 அளவில் அவர் மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அதிலிருந்து தோழர் முகிலனைக் காணவில்லை. அதற்குப் பிறகு தோழர் முகிலன் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருடைய கை பேசியும் அணைக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, தோழர் முகிலன் எங்கே? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருவதோடு, பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்தும், முகிலனை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முகிலனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த வழக்கு நேற்று (மார்ச் 18) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. அப்போது அங்கு வந்திருந்த குமரெட்டியாபுரம் மக்கள், "முகிலனை ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான் கடத்தியுள்ளனர் என்றும், தமிழக அரசு அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும்" என்று கூறினர். மேலு, இந்த சமூகம் கோடி கோடியாக கொள்ளையடிப்பவர்களை விட்டுவிடுகிறது. சுற்றுசூழலை பாதுகாக்க நினைக்கும் தோழர் முகிலன் போன்றோரை வஞ்சிக்கிறது. எங்களுக்கு எங்கள் தோழர் வேண்டும். அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தாலே போதும்" என்று வேதனை தெரிவித்தனர்.
முகிலனை ஸ்டெர்லைட் நிறுவனம்தான் கடத்தியுள்ளது-குமரெட்டியாபுரம் மக்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:42:00
Rating:
No comments: