நீங்கள் காவலன் என்றால் என்னுடைய மகன் நஜீப் எங்கிருக்கிறார் என்று சொல்லுங்கள்?- பாத்திமா நபிஸ்
நீங்கள் காவலன் என்றால் என் மகன் நஜீப் எங்கே? என்று "பாதுகாவலன் நரேந்திர மோடி" (Narendra Modi chowkidar) என்று டிவிட்டர் கணக்கில் பெயர் மாற்றிக்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியிடம் நஜீப் அகமதுவின் தாய் பாத்திமா நபிஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த நஜீப் அகமது (27), பாஜகவின் மாணவர் இயக்கமாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினருடனான மோதலுக்குப் பிறகு காணாமல்போனார். அதிலிருந்து அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நஜிப் அகமதுவை கண்டுபிடித்துத் தரக்கோரி ஜேஎன்யு மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். நீண்ட காலமாக நஜிப் பற்றிய தகவல் கிடைக்காததால், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையிலும் எந்த தகவலும் கிடைக்காததால் அந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சியினரும் பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அவ்வகையில் ''பாஜக கட்சியினர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மத, சாதி கலவரங்கள் நடைபெறவில்லை. நாங்கள் தான் நாட்டின் காவலன்'' என்று பாஜகவினர் பொய் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். மோடியும் கடந்த 17ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பாதுகாவலன் நரேந்திர மோடி’ என்று பெயரை மாற்றிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த பெயர் மாற்றப்பட்ட அன்றைய நாளிலிருந்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது இந்த பெயர். நெட்டிசன்கள் இந்த பெயரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்ட நஜிப் அகமதுவின் தாய், பாத்திமா நபஸ், "நீங்கள் உண்மையிலேயே சௌக்கித்தார் என்றால் என்னுடைய மகன் நஜீப் எங்கிருக்கிறார் என்று சொல்லுங்கள்? ஏபிவிபி தொண்டர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை? நாட்டின் மூன்று பெரிய பாதுகாப்பு அமைப்புகள் என்னுடைய மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தது ஏன்?" என்று டிவிட்டரில் மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நீங்கள் காவலன் என்றால் என்னுடைய மகன் நஜீப் எங்கிருக்கிறார் என்று சொல்லுங்கள்?- பாத்திமா நபிஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:41:00
Rating:
No comments: