சின்னம் ஒரு பிரச்சினையில்லை: திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று சின்னங்கள் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் கடந்த இரு தேர்தல்களாக விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டுவந்த மோதிரம் சின்னம், ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சிறுத்தைகளும் மோதிரம் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தனர். தமிழ்நாடு இளைஞர் கட்சியும் கேட்டிருந்தது. அக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதால் மோதிரத்தை அக்கட்சிக்கே வழங்கியது.
இந்நிலையில் இன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான தனது பேட்டியில் சின்னம் குறித்து இந்த நாளிதழைச் சேந்த ப.கோலப்பனின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் திருமாவளவன்.
“திமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறது. நிலையான சின்னம் இல்லாத கூட்டணிக் கட்சியினர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றால் வெற்றி எளிதாகும் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
நான் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நட்சத்திரம் சின்னத்தில் நின்றேன். 1.6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றேன். அதே தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை `2006, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009, 2014 மக்களவைத் தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுள்ளோம். ஏற்கனவே போட்டியிட்டுள்ளோம் என்பதைத் தவிர சின்னத்துக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. கல்வியறிவு அதிகரித்திருப்பதால் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. மேலும் ஊடகங்களின் வீச்சு அதிகமாக இருப்பதால் எந்தச் சின்னத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்க்க முடியும். இந்த நிலையில் திமுகவின் வேண்டுகோளைப் பற்றி நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை”என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.
சின்னம் ஒரு பிரச்சினையில்லை: திருமாவளவன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:31:00
Rating:
No comments: