அதிமுக வீட்டைக் கொளுத்தும் நெருப்பு: ஸ்டாலின்
திமுக வீட்டு விளக்கு என்றும், அதிமுக வீட்டைக் கொளுத்தும் நெருப்பு என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து வியாசர்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக வேட்பாளர்களில் பலர் வாரிசுகளாக உள்ளனர் என்று ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், வாரிசு என்பதற்காக ஒருவரின் திறமையைப் புறக்கணிக்க முடியுமா என்று ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வேட்பாளர் தகுதியானவரா என்று விமர்சிக்கலாமே தவிர, யாருடைய மகன் என ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்” என்றார். விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய ஸ்டாலின், “விவசாயிகள் போராடுகிறார்கள். தற்கொலை செய்துகொண்டு மாண்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு கொடுமைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லிக்குச் சென்றும் தமிழக விவசாயிகள் விதவிதமான போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அவர்களால் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. பிரதமரும் போராடிய விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அதற்கு இந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? பொடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தது திமுக. ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கியால் 13 பேரைச் சுட்டுக்கொன்றது அதிமுக. இதுதான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம். திமுக வீட்டுக்குள் வைக்கும் விளக்கு; அதிமுக வீட்டைக் கொளுத்தும் நெருப்பு” என்றார்.
திமுகவின் பிரச்சாரக் கூட்டத்துக்குச் செல்லுமிடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது திமுகவுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது என்பதற்கு அடையாளச் சின்னமாக இருப்பதாகக் கூறிய ஸ்டாலின், “ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்லும்போதும் முந்தைய கூட்டத்தை மிஞ்சும் வகையில் மக்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களின் முகத்தில் அன்பும், மகிழ்ச்சியும் இருக்கிறது. அந்த வகையில் வடசென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டமும், மற்ற எல்லா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில் உள்ளது. தேர்தலே நடக்காமல், வாக்குகளே எண்ணாமல் திமுகவுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை இந்த மக்கள் வெள்ளம் காட்டுகிறது” என்றார்.
நரேந்திர மோடி அடிக்கல் மட்டுமே நாட்டுகிற பிரதமராகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தமிழக முதல்வர் தாமதமாகவே சென்று பார்வையிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்கு நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்
அதிமுகவிலிருந்து விலகிய பிறகு அரசியலில் ஈடுபடாமல் இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த மாதத்தில் திமுக கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்திகள் பரவியது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாஞ்சில் சம்பத் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது தாம் திமுகவில்தான் இருப்பதாகவும், தலைமை கொடுக்கும் அட்டவணைப்படி தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாகப் போட்டியிடுகிற நாடாளுமன்ற வேட்பாளர்களையும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காண்கிற வேட்பாளர்களையும் ஆதரித்து மார்ச் 26ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 16ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காகக் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன்” என்றார்.
தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதச்சார்பின்மை, சமூகநீதிக் கொள்கைகள் காக்கப்பட வேண்டும் என்கிற உன்னத நோக்கிலே, மோடி தலைமையிலான ஆட்சியை அகற்றி, மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளேன்.
இந்த நாட்டின் பன்முக கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நாங்கள் இந்தக் கொள்கை முடிவை எடுத்திருக்கிறோம். ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமராக வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் நான் அப்போது போட்டியிட்டது அரசியல் வியூகம். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டேன்” என்றார்.
https://minnambalam.com/k/2019/03/25/8
அதிமுக வீட்டைக் கொளுத்தும் நெருப்பு: ஸ்டாலின்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:29:00
Rating:
No comments: