மூன்று லட்சம் கோடி ஊழல் செய்த பாஜக: திருமுருகன் காந்தி
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பண மதிப்பழிப்பு செய்த பாஜகவே ரூ.3 லட்சம் கோடி கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களைத் தடை செய்த சமயத்தில், ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை வெளிநாட்டில் அச்சடித்து, படை விமானங்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவந்து அதனை ரிசர்வ் வங்கியில் கொடுத்து புதிய தாள்களை மாற்றியதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்துக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஏப்ரல் 9ஆம் தேதி வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் இச்செய்தியைப் பெரும்பாலான ஊடகங்கள் புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து நேற்று (ஏப்ரல் 11) மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய அரசு அச்சடிக்க வேண்டிய பணத்தை, அமித் ஷா தலைமையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டில் அச்சடித்து ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளது வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய ஊழல் என்று கூறியுள்ள திருமுருகன் காந்தி, “வெளிநாட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து, ரிசர்வ் வங்கியில் கொடுத்து அதனை மாற்றி, பெருமுதலாளிகளிடத்திலிருந்து கறுப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் தாள்களை மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செயலை செய்தவர்களில் ஒருவராக இருக்கக் கூடிய இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி இதுகுறித்துப் பேசுகின்ற வீடியோ வெளியாகியிருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய அரசு அச்சடிக்க வேண்டிய ரூபாய் நோட்டுகளை, அமித் ஷா தலைமையில் பாஜகவினர் 3 லட்சம் கோடி அச்சடித்து விநியோகம் செய்துள்ளது இந்திய வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய ஊழல். இந்தத் தகவல் ஊடகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊடக சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆவதற்கு முன்பே அவரது கையெழுத்துடன் பாஜக இந்த ரூ.3 லட்சம் கோடி கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், “இந்தக் கள்ளப்பணம் அச்சடிக்கப்பட்ட காலத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்தார். ஆனால், அச்சடிக்கப்பட்ட பணத்தில் உர்ஜித் படேலின் கையெழுத்து இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் இருக்கிற தலைவர்கள் பேச வேண்டும். மோடி அரசும், ரிசர்வ் வங்கியும் பதிலளிக்க வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் ரூ.3 லட்சம் கோடி ஊழல் நடந்தது என்பது இந்திய வரலாற்றிலேயே கிடையாது” என்று கூறியுள்ளார்.
மோடி அரசின் இந்த ஊழலால் இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள திருமுருகன் காந்தி, “பெரும் பணக்காரர்களுடைய கறுப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்காகத்தான் இந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. பாஜகவின் இந்த 3 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து பெரிய கட்சிகள் கேள்வியெழுப்ப வேண்டும்” என்றார்.
மூன்று லட்சம் கோடி ஊழல் செய்த பாஜக: திருமுருகன் காந்தி
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:07:00
Rating:
No comments: