விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!
அமெரிக்கா தொடர்பான மிக ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 47) மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு கோடி ஆவணங்கள் விக்கி லீக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் மிக ரகசிய ஆவணங்களாகும்.
ஜூலியன் அசாஞ்சே மீது எழுந்த பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்த முயற்சி செய்தபோது, 2012ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் பெற்றுவந்தார் ஜூலியன் அசாஞ்சே. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவை எக்வடோர் அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து எக்வடோர் தூதர் லண்டன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். இன்று எக்வடோர் தூதரகத்துக்கு சென்ற லண்டன் காவல்துறையினர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜூலியன் விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் சரணடையாத ஜூலியனை கைது செய்யும்படி 2012ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜூலியன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எக்வடோர் அதிபர் லெனின் மொரெனோ தனது ட்விட்டர் பக்கத்தில், “மனித உரிமைகளுக்கும், சர்வதேச சட்டத்திற்கும் நாங்கள் அளித்துள்ள அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு, ஜூலியன் அசாஞ்சே சித்தரவதை செய்யப்பட்டு, மரண தண்டனையை சந்திக்கக்கூடிய நாடுகளுக்கு அவர் நாடு கடத்தப்பட மாட்டார் என பிரிட்டனிடம் உறுதிமொழி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் உள்துறை செயலாளரான சஜித் ஜாவித் தனது ட்விட்டர் பக்கத்தில், “எக்வடோர் தூதரகத்தில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இருந்தபின் தற்போது ஜூலியன் அசாஞ்சே போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இவ்விவகாரத்தில் ஒத்துழைத்த எக்வடோர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:10:00
Rating:
No comments: