வேலைவாய்ப்புகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்!

வேலைவாய்ப்புகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்!

ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை அவரது சாதி நிர்ணயம் செய்யும் நிலை சற்று மாறியுள்ளது என்றாலும், சாதியின் பிடி முற்றிலுமாகத் தளர்ந்துவிடவில்லை. மேலும், இன்றும் நாம் ஒரு ஆணாதிக்க சமுதாயமாகத்தான் இருந்து வருகிறோம்; ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகமாகத்தான் இயங்கி வருகிறோம். அதன் வெளிப்பாட்டை நம் பொருளாதார அமைப்பிலும் நாம் காணலாம். இந்த சமமின்மை வேலைவாய்ப்பில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
குறைவான வருமானம் ஈட்டித்தரும் வேலைகளில், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு, மொத்த தொழிலாளர்களில் அவர்கள் வகிக்கும் பங்கைவிட மிகவும் அதிகம். அதே நேரத்தில், மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் அலுவலக மேலாளர் போன்ற அதிக வருமானம் பெற்றுத்தரும் வேலைகளில் இவர்களின் பங்கு மிகவும் சொற்பமாக இருக்கிறது. சுரங்கம், கட்டுமானம் மற்றும் தோல் பதனிடுதல் போன்ற பாதுகாப்பு இல்லாத வேலைகளில்தான் இவர்கள் பெரும்பாலும் அமர்த்தப்படுகிறார்கள்.
முறை சார்ந்த சேவைத்துறையின் உயர்மட்ட வேலைகளில் உயர்சாதி மக்கள் என்று கருதப்படுபவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். சுயமாக தொழில் செய்து பிழைப்பவர்களிலும், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வருமானம், மற்ற சாதியினர் பெறும் வருமானத்தில் 50 முதல் 60 விழுக்காடு மட்டுமே. அரசாங்க வேலைகளில் இவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் உள்ளது ஆறுதலான செய்தி. இது, இடஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்த உதவும் பயனுள்ள ஏற்பாடு என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
பெண் தொழிலாளர்கள் குறைவான மதிப்புக்கூட்டும் (low value-added) துறைகளில்தான் அதிகமாகப் பணிபுரிகிறார்கள். உழைக்கும் வயதில் இருப்பவர்களில் பெண்களின் பங்கு 50 விழுக்காடு; ஆனால், மொத்தத் தொழிலாளர்களில் அவர்களின் பங்கு 22 விழுக்காடுதான். 2004-2015 காலத்தில் உழைப்புப் படையில் அவர்களுடைய பங்கு தொடர்ந்து சரிந்துள்ளது. இதன் பொருள், பெண்கள் ஊதியம் ஈட்டித்தரும் வேலைவாய்ப்பைத் தேடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதே. உயர்கல்வி பெறுவதற்காக அவர்கள் உழைப்புப் படையில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கதுதான்.
அதிக வருமானத்தை ஈட்டித்தரும் முறைசார்ந்த சேவைத்துறையில், பெண்களின் பங்கு 10 விழுக்காடு மட்டுமே. வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பாலின பாகுபாடு உள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடும்போது, அவர்களின் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
https://minnambalam.com/k/2019/04/24/38
வேலைவாய்ப்புகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்! வேலைவாய்ப்புகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.