காவிரித் தீர்ப்பு: புறக்கணிக்கப்பட்ட தமிழகம்!

காவிரித் தீர்ப்பு: புறக்கணிக்கப்பட்ட தமிழகம்!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்தரவுப்படி 192 டி.எம்.சி தண்ணீரில், 14.75 டி.எம்.சி. அளவை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பில் காவிரியின் மொத்த பயன்பாட்டு நீரான 740 டி.எம்.சி.யில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அதில் 14 டி.எம்.சி.யை குறைத்து 177.25 டிஎம்சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
2007இல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி.யாக அது குறைக்கப்படுகிறது.
284.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவுக்குக் கிடைக்கும்.
கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை
காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை
காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இது இறுதித் தீர்ப்பு என்பதால் மேல்முறையீடு செய்ய முடியாது
தமிழகத்தின் சாகுபடிப் பரப்புக் கணக்கு சரியாகக் கணக்கிட்டு சமர்ப்பிக்கப்படவில்லை
தமிழ்நாடு தனது தரப்பில் சரியான வாதங்களை முன்னெடுத்து வைக்கவில்லை
தமிழகத்தில் 10 டி.எம்.சி. முதல் 20 டி.எம்.சி. வரை நிலத்தடி நீர் வளம் இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு நீர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகத் தண்ணீர் தேவை என்ற கர்நாடகாவின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 14.75 டி.எம்..சி. பெங்களூருவுக்காக ஒதுக்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்
இந்தத் தீர்ப்பின்போது, “குடிநீர் பயன்பாட்டுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதோடு,காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள் இனி மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர்.
தீர்ப்பின் தாக்கம் என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீரை குறிப்பிட்ட மாநிலம் சொந்தம் கொண்டாட முடியாது என்றெல்லாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வார்த்தைகள் நன்றாக இருந்தாலும், தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரில் இனி வருடா வருடம் 14.75 டி.எம்.சி.யைக் குறைத்திருப்பது தமிழக விவசாயிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் கர்நாடகாவில் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்பதால் வருடத்துக்கு 15 டி.எம்..சி. என்ற கணக்கின்படி 225 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு இழப்பாகும்.
கர்நாடகா விவசாயத்தை மட்டுமின்றி, தனது குடிநீர்த் தேவையையும் முன் வைத்து வாதாடியது. ஆனால் தமிழ்நாடு அரசோ சென்னை, சேலம், உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர்த் தேவையைக் காவிரியோடு தொடர்புபடுத்தி வாதாடவே இல்லை என்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் காவிரி உரிமை மீட்புக் குழு தஞ்சையில் கூடி, “காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசு தமிழக மக்களுக்கான உரிமைகளை மீட்பதற்கான உரிய வகையில் வாதங்களை முன்வைக்கவில்லை. எனவே தமிழகத்துக்கான உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கென தனியாக வழக்கறிஞரை வைத்து வாதாட அனுமதி வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதினர். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
காவிரி நீரில் தமிழகத்துக்கான தேவைகள் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் உரிய அக்கறையோடும் முனைப்போடும் வாதங்கள் முன் வைக்கப்படாததால் இப்படிப்பட்ட தீர்ப்பு தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
காவிரித் தீர்ப்பு: புறக்கணிக்கப்பட்ட தமிழகம்! காவிரித் தீர்ப்பு: புறக்கணிக்கப்பட்ட தமிழகம்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.