நீர் மேலாண்மை இன்றி வேளாண்மை இல்லை!

சிறப்புக் கட்டுரை: நீர் மேலாண்மை இன்றி வேளாண்மை இல்லை!

தேவிபாரதி

காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்த தீர்ப்பு தமிழகத்தின் பல்வேறு பலவீனங்களையும் அம்பலப்படுத்தக்கூடியது. குறிப்பாக, நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழகம் தற்கொலைக்கொப்பான அலட்சியத்தைக் காட்டிவருகிறது. நீர் மேலாண்மை குறித்த குறைந்தபட்ச அக்கறையாவது அரசுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. இது குறித்துப் பல அமைப்புகள் அரசின் மீது குற்றம் சுமத்தி வருவதைக் கவனிக்க வேண்டும். அரசின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையிழந்த பல தன்னார்வக் குழுக்கள் தமிழகத்தின் பராம்பர்யமான நீராதாரங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இளைஞர்களும் சிறு, குறு விவசாயிகளும் இணைந்து தங்கள் ஊர்களின் தூர்ந்துபோன கிணறுகளையும் குட்டைகளையும் ஏரிகளையும் மீட்டெடுக்க முயன்றுவருகிறார்கள். சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்கள். தனிநபர்களால் செய்யக்கூடிய இதுபோன்ற காரியங்களை அரசு முன்னெடுத்தால் மேலும் பல மடங்கு பலன் கிடைக்கும். அரசு அதைச் செய்வதில்லை. அது மட்டுமல்ல; அப்படிச் செய்பவர்களுடைய முயற்சிகளை ஊக்குவிக்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போட அரசு தயாராக இல்லை என்பதுதான் அதிகக் கவலைக்குரிய விஷயம்.
நீராதாரங்களைப் பயனுள்ள விதத்தில் திறமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை வெற்றிகரமாகச் செய்துகாட்டியுள்ள ராஜேந்திர சிங் போன்றவர்களின் ஆலோசனைகளையும் தமிழக அரசு கேட்பதில்லை. தமிழகத்தை விடவும் குறைவான மழைப்பொழிவு உள்ள ராஜஸ்தானில் நீர் மேலாண்மை விஷயத்தில் மாபெரும் புரட்சியைச் செய்தவர் ராஜேந்திர சிங். அவர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் தமிழகத்துக்கான நீர் மேலாண்மை பற்றிப் பேசிவருகிறார். அரசின் கேளாச் செவிகளில் அது விழுவதில்லை.
மக்களின் விருப்பங்களைப் புறக்கணித்துவரும் அரசின் சமீபத்திய முயற்சிகளில் பல அதிகார மையங்களின் கரங்களில் சிக்கிப் பயனற்றதாக மாறியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். மக்களோடு இணைந்து செயல்படுவதை அரசு கௌரவகக் குறைச்சலாகக் கருதுகிறதா? தூர்ந்துபோன நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியில் அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அது மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை முனைப்பாகப் பங்கெடுக்கச் செய்வதற்கு அரசு முற்பட வேண்டும்.
நீர் மேலாண்மை என்பது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் அரசு மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும். சங்கீதா ஸ்ரீராம் போன்ற விவசாயம் தொடர்பான ஆய்வாளர்களில் சிலர் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல நீர் மேலாண்மை குறித்த நமது மரபான புரிதல்களிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது. மானியங்கள், வங்கிக் கடன்கள் மூலம் நிலைமையைச் சமாளிக்க முயன்றுவரும் அரசு தொடர்ந்து தோல்வியையே சந்தித்துவருகிறது, கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தைப் பாதித்துள்ள வறட்சி, வெள்ளப் பெருக்கு ஆகிய இயற்கைப் பாதிப்புக்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். ஒவ்வொருவரிடமும் நமது நீர் மேலாண்மையின் போதாமைகளை அம்பலப்படுத்திவிட்டுச் செல்கின்றன. நாம் தவறுகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவும் மறுத்துவருகிறோம்.
மழை நீர்ச் சேகரிப்பு போன்ற பயனுள்ள திட்டங்களை உண்மையிலேயே செயல்பூர்வமானதாக்க அரசு முன்வர வேண்டும். வேளாண்மை, குடிநீர் முதலான எந்தப் பலனும் இன்றிக் கடலில் கலந்து வீணாகிக்கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு காவிரியின் மூலமாக நமக்குக் கிடைத்துவரும் நீரின் அளவைவிட அதிகம் என ஒரு கருத்து நிலவுகிறது. கட்டடங்களுக்கு வரைபட அனுமதிகொடுக்கும்போது அவற்றில் மழை நீர் சேகரிப்புக்கென ஒரு சிறிய இடம் இருந்தால் போதும் என நினைப்பது பேதமை. கிராமப்புறங்களிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும். மானாவாரி நிலங்களுக்கான பாசன வசதிகளை உருவாக்குவதற்கு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
குறைந்த நீராதாரத்தைக் கொண்டு விளைவிக்கப்பட்ட கம்பு, ராகி, சோளம், திணை, சாமை முதலான உணவு தானியங்கள் இப்போது மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆர்கானிக் உணவு வகைகளில் இடம்பெற்று சாதாரண மக்களின் கைகளுக்குச் சிக்காத பொருள்களாக மாறியுள்ளதை அந்தப் பயிர்களுக்குக் கிடைத்துள்ள விபரீத யோகம் எனச் சொல்லலாம். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மானவாரிச் சாகுபடிக்கு ஏற்ற பயிர்களாகத் திகழ்ந்துவந்தவை அவை. எளிய ஆரோக்கியமான உணவு வகைகளாக விளங்கி வந்தவை. நெல் உற்பத்திக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக அவை வழக்கொழிந்துபோனதும் மக்களின் உணவுப் பழக்கத்திலிருந்து அவை விலக்கப்பட்டதும் பெருங்கதை. அந்தப் பெருங்கதைக்குப் பின்னாலிருக்கும் சந்தைப் பொருளாதாரம், அது சார்ந்து உருவான மதிப்பீடுகள், உணவுப் பழக்கங்கள் முதலானவை அந்தப் பெருங்கதையின் முக்கியமான கூறுகள்.
விவசாயம், நீர் மேலாண்மை சார்ந்த கல்வியில் தலைகீழான மாற்றங்கள் தேவை. ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் விழிப்புணர்வை உருவாக்கி மக்களைப் பங்கெடுக்கச் செய்வதிலும் நாம் அக்கறை காட்ட வேண்டும்.
சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதும் நீராதாரங்களைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொனறு இணையான செயல்பாடுகள், கர்நாடகம் அதை உணர்ந்து செயல்படுவதுபோல் தெரிகிறது.
உரிமைப் போராட்டமும் கடமைகளும்
காவிரி நீரில் நமக்குரிய பங்கைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து போராடியாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ள போதிலும் தற்போதைய தமிழக, மைய அரசியல் சூழல் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கான வாய்ப்புகளுக்குப் பெரும் தடையாக இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புகள் பலவற்றை கர்நாடகம் எளிதாகப் புறக்கணித்துவிட்டதைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் அவநம்பிக்கைதான் ஏற்படுகிறது.
நமது நீராதாரங்களை முறையாகப் பராமரித்து அவற்றின் பயன்களை அதிகரிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சுற்றுச்சூழல், சாகுபடி முறைகள் ஆகியவற்றிலும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் நமக்கான உரிமைகளைப் பெறத் தமிழக அரசியல் அமைப்புகள் அனைத்தும் இணைந்து போராட வேண்டும். காவிரி நீரின் மீதான நமது நியாயமான உரிமையைப் பெறுவதற்கு மக்கள் திரளோடு இணைந்து போராடுவதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றைப் பற்றி அரசும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.
சிந்திக்குமா?
கடவுளுக்குத்தான் தெரியும்.
நீர் மேலாண்மை இன்றி வேளாண்மை இல்லை! நீர் மேலாண்மை இன்றி வேளாண்மை இல்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.