அகதிகள் பிரச்சினை: தீர்வு காண ஐநா ஒப்பந்தம்!

அகதிகள் பிரச்சினை: தீர்வு காண ஐநா ஒப்பந்தம்!

பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்பாக, மியான்மருக்குத் திரும்பிட ஐநா சபை அந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று (6.6.2018) ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மியான்மர் நாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், பங்காளதேஷில் அடைக்கலம் புகுந்த ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமான முறையிலும் மியான்மருக்குத் திரும்பிட தகுந்த சூழ்நிலைமைகள் அந்த நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம்தான் ரோஹிங்கியா அகதிகளின் பாதுகாப்புக்கான முதல் அவசியமான நடவடிக்கையாகும்.
மியான்மரின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த ரோஹிங்கியா மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இவர்களுக்கு மியான்மர் நாட்டின் குடியுரிமை வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் நாடற்ற குடிமக்களாகவே வாழ்ந்து வந்தனர். குடியுரிமை கோரியும் உரிமைகள் கோரியும் ரோஹிங்கியா மக்களில் ஒரு பிரிவினர் அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக, ரோஹிங்கியா கிளர்ச்சிப் படையினருக்கும் அந்நாட்டின் அரசப்படைகளுக்கும் இடையில் இடைவிடாத சண்டை நடந்து வந்தது.
2017இல் ஆகஸ்ட்டில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் மீது அரசப்படைகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியது. இதன் விளைவாக 8,00,000 ரோஹிங்கியா அகதிகள் மியான்மரிலிருந்து வெளியேறி அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்தத் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் புகுந்த நாடுகளிலும் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. இவர்கள் வாழ்ந்த முகாம்களில் அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை.
அது மட்டுமின்றி சுட்டுக்கொல்வது, பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் அகதிகள் மீது நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஐநா சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் பிரச்சினை: தீர்வு காண ஐநா ஒப்பந்தம்! அகதிகள் பிரச்சினை: தீர்வு காண ஐநா ஒப்பந்தம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.