`தனியார்மயமாகும் 70,000 பி.எஸ்.என்.எல் கோபுரங்கள்!’

தனி நிறுவனம் உருவாக்கும் போக்கை மத்திய அரசு கைவிட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே கோபுரங்கள் தொடர்ந்து செயல்படும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.

`தனியார்மயமாகும் 70,000 பி.எஸ்.என்.எல் கோபுரங்கள்!’ அதிர்ச்சி தகவல்கள்
நாட்டிலேயே அதிகபட்சமாக 70,000 கோபுரங்களைக் கொண்ட மிகப்பெரிய நெட் வொர்க்  பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது. இந்தக் கோபுரங்களைத் தனியார்மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சென்னையில் நேற்று நடந்த தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்க மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில், ``தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்றும் தீர்மானம் போடப்பட்டது.
தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்க மத்திய குழு கூட்டம், சென்னையில் கடந்த 26-ம் தேதி நடந்தது. இதுகுறித்து, இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் வே.சுப்புராமன் கூறுகையில், ``அரசின் கொள்கை முடிவை நிறைவேற்றும் வண்ணம், லாப நஷ்டம் பார்க்காமல் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கி வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல் தான். இந்நிறுவனம், நட்டத்தில் இயங்குகிறது என்று ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு தயக்கம் காட்டுக் போக்கை கைவிட்டு விட்டு விரைவாக அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் படிகளை வழங்க வேண்டும். 3 வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.
செல்போன் கோபுரங்கள் - பி எஸ் என் எல்
2009-10-ம் ஆண்டிலிருந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்கிற காரணத்தைக் கூறி, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போனஸ் நிறுத்தப்பட்டது. தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்கள், வலியுறுத்தல் காரணமாக 2014-15-ம் ஆண்டுக்கான அட்ஹாக் போனஸாக ரூ.3,000 வழங்கப்பட்டது. அதுவும் அதற்கடுத்த ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை. போனஸ் என்பது கொடுபடா ஊதியம். அதைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச போனஸை மீண்டும் வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள், அதன் அடிப்படை கட்டமைப்பான சுமார் 70,000 கோபுரங்களின் செயல்பாட்டில்தான் உள்ளன. அத்தகைய கோபுரங்களைக் கொண்டு பி.எஸ்.என்.எல் கட்டுப்பாட்டின் கீழ், 'பி.எஸ்.என்.எல் டவர் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்கிற தனியாக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், சி.எம்.டி மற்றும் டைரக்டர்களைக் கொண்டு தனி டவர் நிறுவனம் இயங்கும் வகையில் அதிகாரிகள் நியமனத்தில் அரசு கடைப்பிடித்துவரும் போக்கு எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல் டவர் கார்ப்பரேஷன் தனியார் மயத்தை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தனி நிறுவனம் உருவாக்கும் போக்கை மத்திய அரசு கைவிட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே கோபுரங்கள் தொடர்ந்து செயல்படும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
செயற்குழு கூட்டம்
2009-ம் ஆண்டு, மத்திய அரசின் உத்தரவுப்படி, ஓய்வூதியப் பங்களிப்பு என்பது ஊழியர் வாங்கும் உண்மை அடிப்படை சம்பளத்தின்படி, பி.எஸ்.என்.எல் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், உச்சபட்ச சம்பள விகிதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது. பலமுறை அரசுக்கு இந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டியும் அதே நிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், பி.எஸ். என்.எல் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய் இழப்பு மாதந்தோறும் ஏற்படுகிறது. இனியாவது, மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், 2009-ம் ஆண்டு முதல் பெறப்பட்ட அதிகப்படியான, ஓய்வூதிய பங்களிப்பு தொகையைப் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குத் திருப்பித் தர வேண்டும்.
அரசின் கொள்கைகளை நிறைவேற்றும் வண்ணம், லாபம்-நஷ்டம் பார்க்காமல் நாட்டின் கிராமப்புறங்கள், மலைப்பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையை அளித்து வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மேலும், தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்தை முறியடித்து கட்டணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உலகிலேயே குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவையைக் கிடைக்க வழிசெய்ததும் பி.எஸ்.என்.எல்-தான். எனவே, இந்நிறுவனத்தை இந்திய மக்களின் நலன் கருதி சேவைத்துறையாக அறிவித்து தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்'' என்றார்.
`தனியார்மயமாகும் 70,000 பி.எஸ்.என்.எல் கோபுரங்கள்!’ `தனியார்மயமாகும் 70,000 பி.எஸ்.என்.எல் கோபுரங்கள்!’ Reviewed by நமதூர் செய்திகள் on 05:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.