பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகள்

பிரதமரின் புதிய வேளாண் காப்பீடு திட்டம்(Pradhan Mantri Fasal Bima Yogana) ரூ. 17,500 கோடியில் கர்நாடகா மாநிலம் பெலகாவில் 18.02.2016 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வழக்கம்போல் ஆரவாரமாக மிகப்பெரிய விளம்பரத்துடன் திட்டம் தொடங்கப்பட்டது. தனது வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த திட்டத்தின் பெருமைகளை பேசி வருகின்றார். விவசாயிகளின் வாழ்வில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த திட்டம் என்று பெருமை கொள்கிறார். உண்மையில் இந்த பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயன்தந்திருக்கிறதா என்று தொடர்ந்து பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் எதையும் காதில் வாங்காமல் இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்று விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று காட்டுவதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறார் திருவாளர் மோடி. தோல்வியைக்கூட வெற்றியாக சித்தரிக்க தெரிந்த வாய்ச்சொல் வீரர் ஆயிற்றே அவர்.
புதிய காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தவுடன் மக்களிடம் குறிப்பாக விவசாயிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவானது என்பதை மறுப்பதற்கில்லை. “கரும்பு மற்றும் வாழைக்கு 5 சதவீதமும், காரிப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட தோட்டக்களைப் பயிர்களுக்கு 2 சதவீதமும், ராவி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவீதமும் காப்பீடு வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. ‘‘வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல், விலங்குத் தாக்குதல் ஆகியவற்றால் பயிர்கள் அழிந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மொத்த பிரிமியம் தொகையில் 1.5 சதவீதமுதல் 2 சதவீதம் வரை செலுத்தினால் போதுமானது” என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கடுமையான வறட்சியினால் பெரும் பாதிப்பை சந்தித்து வந்த விவசாயிகள் இந்த புதிய காப்பீடு திட்டம் தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருத தலைப்பட்டார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல இந்த திட்டத்தை பிரதமர் மோடி யாருக்காக தொடங்கினார், யார் இதனால் அதிக பலன்களை அடைகிறார்கள் என்பது வெளியே தெரிய தொடங்கிவிட்டன.
விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் ஆட்சி காலத்தில் வேளாண் காப்பீடு திட்டம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது. அதற்காக வேளாண் காப்பீடு நிறுவனம் தொடங்கப்பட்டது வரலாறு. அதன் மூலம் விவசாயிகள் இழப்பீடுகளை பெற்று வந்தனர். பிரதமர் மோடி இந்த திட்டத்தை மேம்படுத்துகிறேன் என்ற போர்வையில் தனியார் காப்பீடு நிறுவனங்களை உள்ளே இழுத்து வி.பி. சிங் நல்ல நோக்கில் கொண்டு வந்த திட்டத்தை நாசம் செய்ய வைத்துவிட்டார் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள்.
இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 3,31,96,239 விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 15,37,000 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயத்தில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்பட்டால் அரசு தரும் இழப்பீடு தாங்கள் செய்த முதலீட்டில் சிறிது அளவாவது கிடைக்கும் என்ற நப்பாசையில்தான் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைகிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் விவசாயிகள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். விவசாயிகளின் பெயரில் விவசாயிகளின் நலனிற்காக என்று சொல்லி தொடங்கப்பட்ட இத்திட்டம் முழுதும் காப்பீட்டு நிறுவனம் லாபம்கொழிக்க என்று உருமாற்றம் பெற்றது. புதிய காப்பீடு திட்டத்தில் 17 காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இதில் 5 மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களாகும். மீதியுள்ள 12 நிறுவனங்களும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தாம். இவர்கள்தான் இந்த திட்டத்தை வைத்து தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தற்போது காப்பீடு நிறுவனங்களின் லாபம் 85% உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
விவசாயிகளின் பணத்தையும், அரசின்மூலம் மக்களின் வரிப் பணத்தையும் கபளீகரம் செய்து வருகின்றன காப்பீட்டு நிறுவனங்கள். காரிப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு பிரிமிய கட்டணம் ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ. 503, துவரை, உளுந்து, பச்சைப்பயிருக்கு ரூ. 260, நிலக்கடலைக்கு ரூ. 432, கம்புக்கு ரூ. 148, வலைக்கு ரூ 2,308 என்று நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிறுவனம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் இழப்பீடு வழங்காமல் இருப்பது எவ்வகை நியாயம். கடந்த ஆண்டிலிருந்தே இழப்பீடு தொகை பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு உரிய நியாயம் இன்னும் கிடைக்கவில்லை.
2016&-2017 ம் நிதியாண்டில் குறுவை சாகுபடி காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் 44% லாபம் ஈட்டிருக்கிறது. மொத்த வசூலான காப்பீட்டு பிரிமியம் தொகை ரூ. 15,735 கோடி. ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 8,862 கோடி மட்டும்தான்.
2017&2018 ம் நிதியாண்டிற்கான குறுவை சாகுபடிக்காக செலுத்தப்பட்ட பிரிமியம் தொகை ரூ. 1,694 கோடி. இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை ரூ. 69.93 கோடி மட்டுமே. “பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பயிர் காப்பீடு பிரிமியம் தொகையாக ரூ. 17,796 கோடி செலுத்தப்பட்டது. நிறுவனங்கள் இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 2,767 கோடி. நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை ரூ. 15,029 கோடியாகும்” என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளை விட காப்பீடு நிறுவனங்கள்தான் அதிக பலன்களை அடைந்திருக்கின்றன என்று மத்திய அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
மத்திய அரசின் இந்த திட்டம் விவசாயிகளை வஞ்சிப்பதோடு நில்லாமல் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பெரும் தகிடுதத்தங்களை செய்து வருவது கண்கூடாக தெரிகின்றது. பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அடியொற்றி நிற்கிறது. அதனால்தான் அவர் ‘கார்ப்பரேட்களின் பிரதமர்’ என்று விமர்சிக்கப்படுகிறார்.
“மத்திய அரசின் பயிர்காப்பீடு திட்டம் மோசடியானது. பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை. தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம்” சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டினார். அதற்கு இதுவரை அரசிடமிருந்து உரிய பதில் வரவில்லை. மாறாக புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் பல்வேறு மோசடிகளும், ஊழல்களும் அனுதினமும் அரங்கேறி, வெளிப்பட்டு வருகின்றன.
“நாகை வருவாய் கிராமத்தில் அரசின் கணக்குப்படி நன்செய் பரப்பு 118 ஹெக்டேர்தான். அதில் 53 ஹெக்டேரில் 52 விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள். அரசு உறுதிப்படுத்திய தகவல் இது. ஆனால் அப்பகுதியில் 260 ஹெக்டேரில் விவசாயம் செய்ததாக போலியாக ஆவணம் தயாரித்து அந்த கிராமத்தில் இல்லாத 170 நபர்களின் பெயர்களை சேர்த்து ழிமீஷ் மிஸீபீவீணீ கிssuக்ஷீணீஸீநீமீ என்ற காப்பீட்டு நிறுவனம் முறைகேடு செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு இழப்பீடு தருகிறோம் என்ற பெயரில் ரூ.3, ரூ.5, ரூ.10, ரூ.48 காசோலை மூலமாக கொடுத்து பல இடங்களில் அவமானம் செய்திருக்கிறார்கள்.
அரியானாவைச் சேர்ந்த பன்சிலால் என்ற விவசாயியின் கிசான் கிரெடிட் கார்டிலிருந்து ரூ. 2,480 எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் என்ன விபரம் அறிய சென்றபோது உனக்கு பயிர் காப்பீடு செய்திருக்கிறோம் என்று சொல்லிருக்கிறார்கள் அதிகாரிகள். பல இடங்களில் இதுபோன்று கட்டாயப்படுத்தி திட்டத்தில் இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் விவசாயிகளின் பணத்தை நிர்பந்தப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வழியேற்படுத்திருக்கிறார்கள். “ஒருமனிதனை அவனுக்கே தெரியாமல் பாலிசிதாரர் ஆக்கும் விந்தை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது” என்று யோகேந்திர யாதவ் இவற்றை பொருட்படுத்திதான் கூறினார்.
பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்தால் இழப்பு சந்திக்கும்போது அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசும், காப்பீடு நிறுவனங்களும் மாற்றி பேசுகின்றன. இவர்களின் நோக்கம் இழப்பீடு வழங்காமல் மொத்த பணத்தையும் சுருட்ட வேண்டும் என்பதே. அதற்காகத்தான் புதிய புதிய கொள்கைகளை வகுத்தும், இணைத்தும் வருகிறார்கள். “மத்திய அரசும், காப்பீடு நிறுவனங்களும் சேர்ந்து வகுத்திருக்கும் கொள்கைபடி ஒரு வட்டாரத்தில் 70% பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் விவசாயிகளுக்கு காப்பீடு தர முடியும்” மத்திய அமைச்சர் சோம்பல் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
உதாரணத்திற்கு 1000 ஏக்கர் இருக்கும் இடத்தில் இயற்கையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் 700 ஏக்கர் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் இவர்களின் கூற்றுப்படி. 300 ஏக்கர், 400 ஏக்கர், 600 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டால் கூட இழப்பீடு இல்லையாம். இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். பேருந்து ஒன்று விபத்தில் சிக்குகிறது. அதில் நூறு நபர்கள் பயணிக்கிறார்கள். ஒருவர் பலியாகிவிடுகிறார். அவருக்கு உடனே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ‘இல்லை நூறு நபர்களில் 70 நபர்கள் இறந்தால்தான் இழப்பீடு தர முடியும்’ என்று சொன்னால் முட்டாள்தனமான நிலைப்பாடு என்று சொல்வோம் அல்லவா. அந்த நிலைப்பாட்டைதான் பயிர் காப்பீட்டு விடயத்தில் அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன.
பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் நடைபெறும் மோசடிகளும், முறைகேடுகளும், ஊழல்களும் வெளிக்கொணரப்பட வேண்டும். இந்த விடயத்தில் பெரும்பாலான ஊடகங்ளும் அமைதி காப்பது விந்தையாக உள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உடனே வெளியேற்றப்பட வேண்டும். இழப்பீடுகளை வழங்காமல் சாமானிய மக்களை இழுத்தடிக்கும் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும். இவைகளை சாத்தியப்படுத்தாமல் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் எந்த நன்மையையும் பெறமுடியாது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான் கொழுத்து நிற்கும்.
– M.முஹம்மத் பாரூக்
நன்றி : புதிய விடியல்
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகள் Reviewed by நமதூர் செய்திகள் on 05:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.