100% ஒப்புகைச்சீட்டு இயந்திர வசதி : தேர்தல் ஆணையம்!

100% ஒப்புகைச்சீட்டு இயந்திர வசதி : தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவிகிதம் ஒப்புகைச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
”2019 மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்” என சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியராஜ் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, வாக்காளர்கள், யாருக்கு வாக்களித்தார்களோ, அந்த வாக்கைச் சரிபார்ப்பதற்கு வசதியாக, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அறிமுகம் செய்யப்பட்டது. 2013ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், ஆறு ஆண்டுகளான நிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை” என குற்றம்சாட்டியிருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரம் நிறுவப்படுவதாக மனுவில் கூறியுள்ள பாக்கியராஜ், ”அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தை நிறுவக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவுக்குச் சரியான பதில் அளிக்கவில்லை” என புகார் தெரிவித்திருந்தார்.
கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்திய நிலையில், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்தபோது, ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடக்க ஒரு சதவிகிதம் மட்டுமே சாத்தியம் இருப்பதாகவும், சில தொகுதிகளில் ஒன்று முதல் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி இருக்கும் போது, ஓட்டு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை ஒரு சதவிகித தொகுதிகளில் கூட அமைக்கப்படவில்லை” எனவும் மனுதாரர் தரப்பில் குறை கூறப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017ல் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வர இருக்கும் மக்களவை தேர்தலில் நூறு சதவிகிதம் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திர முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
https://minnambalam.com/k/2019/02/05/44
100% ஒப்புகைச்சீட்டு இயந்திர வசதி : தேர்தல் ஆணையம்! 100% ஒப்புகைச்சீட்டு இயந்திர வசதி : தேர்தல் ஆணையம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.