மருத்துவத்துறையை சீரழிக்கப்போகும் மசோதா - வி.களத்தூர் எம்.பாரூக்






திருத்தப்பட்ட 'தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017' தற்போது  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதார் மசோதாவை எப்படி குறுக்குவழியில் நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதோ அதுபோல் இந்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துக் கவுன்சில் சட்டம் 1956 ன் படி மருத்துவக்  கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் 'தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017' வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

'இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1933' ன் படி 1934 ம் ஆண்டு அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புதான் இந்திய மருத்துவ கவுன்சில். இந்தியாவிலுள்ள மருத்துவ கல்லூரிகளுக்கும் அவற்றின் மாணவர்களின் எண்ணிக்கை, புதிய பிரிவுகள், துறைகளுக்கு ஒப்புதல் அளிப்பது, பாடத்திட்டம், தேர்வுகள், கட்டமைப்புகள், மருத்துவ சேவையை கண்காணிப்பது, புகார்களை விசாரிப்பது, நடவடிக்கைகளை எடுப்பது போன்றவைகள் இதன் பணிகளாக வரையறுக்கப்பட்டன.

இந்த மருத்துவ கவுன்சிலில் நடைபெற்ற ஊழல்களும், மோசடிகளும் அதனை சீர்படுத்த வேண்டும் என்ற குரலை உயர்த்தியது. 'மருத்துவ கவுன்சிலின் ஊழல்களும், பொறுப்பேற்றல் அற்ற தன்மையும் நாட்டின் மருத்துவ கல்விக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையென்றால் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் இழப்புகள் ஏற்படும். அதன் தன்னாட்சிக்கும், பொறுப்பேற்றலுக்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ கவுன்சிலை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்' என்று ராம்கோபால் யாதவ் தலைமையிலான 31  உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு 03.03.2016 அறிக்கை கொடுத்தது. அதன்பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட டாக்டர். ரஞ்சித்ராய் சௌத்ரி குழுவும் ஒரு அறிக்கையை சமர்பித்தது.

இந்த அறிக்கைகளில் தனக்கு சாதகமானவற்றை தனித்து எடுத்துத்தான் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட முன்வடிவை நிதி ஆயோக் தயாரித்தது. இந்த சட்ட முன்வடிவு 29.12.2017 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த எதிர்ப்பை தொடர்ந்து சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதா தற்போது சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. 

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த ஆணையத்தின் நோக்கம் என்று மசோதா தனது முன்னுரையில் தெரிவிக்கிறது. ஆனால் இந்த மருத்துவ ஆணையத்தின் மசோதாவை ஆழ்ந்து நோக்கினால் பல மோசடிகள் வெளிப்படுகிறது. அது முன்பு இருந்த இந்திய மருத்துவக் கவுன்சிலை காட்டிலும் மோசமானதாக இருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைக்கு வந்தால் மருத்துவக் கல்வி குறித்த விஷயங்களில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பறிபோகும். மருத்துவ சேவைகளில் தனியார்மயம் கொடிகட்டி பறக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் துரதிஷ்ட நிலை ஏற்படும். இதுபோன்ற பல ஆபத்துகளை கொண்டிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

நெக்ஸ்ட் தேர்வு : 
மருத்துவக் கல்வியின் தரம், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துகிறோம் என்று சொல்லி மருத்துவம் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு (நெக்ஸ்ட்-நேஷனல் எக்ஸிட் தேர்வு) என்ற ஒரு புதிய தேர்வு கொண்டு வரப்படுகிறது. இதனால் மாணவர்கள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். ஏற்கனவே நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களை வஞ்சித்து வருகிறது. தற்போது நெக்ஸ்ட் தேர்வும் அவர்களின் மருத்துவக் கனவை கலைக்கவே செய்யும். மருத்துவ மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வை எழுதியபின் பயிற்சி மருத்துவர்களாக நியமனம் செய்யப்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது. அது மாற்றப்பட்டு மருத்துவம் படித்து முடித்து நெக்ஸ்ட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலையை இந்த மசோதா ஏற்படுத்துகிறது. நெக்ஸ்ட் தேர்வில் தோல்வியுற்றால் ஆறுமாதம் அல்லது ஒருவருடம் காத்திருந்து மீண்டும் நடைபெறும் தேர்வை சந்தித்து வெற்றிபெற வேண்டும். இதற்காக நீட் கோச்சிங் போல நெக்ஸ்ட் கோச்சிங் சென்டர்கள் பெருக்கெடுத்துவிடும். இதில் சேர்ந்து படிப்பது ஏழை எளிய மாணவர்களுக்கு சாத்தியம் இல்லாதது. இதனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர்களாக உருவாக முடியும் என்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 'தேசிய மருத்துவ ஆணையம் (MNC) மசோதா 2017 மூலமாக கட்டாயமாக்கப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்), தேசிய எக்ஸிட் தேர்வு (நெக்ஸ்ட்) ஆகியவை அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை' என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டுள்ளதை இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும்.

மாநில உரிமை பறிப்பு :
மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருந்து வருகிறது. அதை இந்த ஆணையத்தின்மூலம்  மத்திய அரசு பறித்துக்கொள்ள முற்படுகிறது. தற்போதைய மருத்துவ கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் மருத்துவ ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 நபர்களை மத்திய அரசே நியமிக்கிறது அவர்கள் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்பது வேறுகதை. மாநிலங்கள் சார்பாக தேர்வு செய்யப்படும் 5 பேர் மட்டுமே மருத்துவர்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவமே இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். 

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறைப்பு :
தற்போது தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படுகின்றன. ஆனால் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் இது மாற்றப்பட்டிருக்கின்றன. அதாவது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 40%, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 60%. இதனால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால்கூட வசதி படைத்த மாணவர்கள் பணத்தை இறைத்து தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை கைப்பற்றும் நிலை ஏற்படும்.

இடங்களை நிறுவனங்களே தீர்மானிப்பது :
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் புதிய இடங்களை அவர்களாகவே உருவாக்கிக் கொள்ளலாம். முதுகலை மருத்துவப் படிப்புகளையும் தொடங்கி கொள்ளலாம். இவற்றுக்கு எல்லாம் அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மசோதா கூறுகிறது. தனியார் மருத்துவமனை முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கே இது துணை புரியும்.

நீதிமன்றங்கள் தலையிட கூடாது :
'புதியதாக அமையும் தேசிய மருத்துவ ஆணையம் நல்ல நோக்கங்களுக்காக, எடுக்கும் முடிவுகளுக்காக அரசின் மீதோ, அதிகாரிகள் மீதோ நீதிமன்றங்கள் வழக்குப் பதிவு செய்யக்கூடாது; நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆணையம் எது செய்தாலும் நீதிமன்றம் கண்டுக்கொள்ளக் கூடாது. யாரும் எங்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிற ஆணவத்தின் வெளிப்பாடாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது. இது இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானதாகும்; ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இப்படி பல ஆபத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது தேசிய மருத்துவ ஆணைய மசோதா. இந்த மசோதாவிற்கு எதிராக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இது மருத்துவர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல அனைவருக்கும் உண்டான போராட்டம் என்பதை உணர்வது அவசியம். மருத்துவக் கல்வி அனைவருக்குமானதாக இருந்தால் மட்டுமே மருத்துவமும் அனைவருக்குமானதாக இருக்கும்.

மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும். பொது சுகாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பெற வேண்டும். இதுவே ஆரோக்கிய இந்தியாவை கட்டியெழுப்ப உதவும். மாறாக தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவத்துறையை சீரழிக்கவே செய்யும். 

- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : சமரசம் 01-15 பிப்ரவரி 2019
மருத்துவத்துறையை சீரழிக்கப்போகும் மசோதா - வி.களத்தூர் எம்.பாரூக் மருத்துவத்துறையை சீரழிக்கப்போகும் மசோதா - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 03:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.