பழங்குடிகள் இன அழிப்பு வன அழிவிற்கே வழி வகுக்கும்- மார்ச் 5 பாரத் பந்த்


பழங்குடிகள் இன அழிப்பு வன அழிவிற்கே வழி வகுக்கும்- மார்ச் 5 பாரத் பந்த் 
இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து எதிர்வரும் மார்ச் 5ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றனர் பழங்குடியின மக்கள். 
ஆண்டு ஆண்டு காலமாக வனத்தில் வசித்துவரும் பழங்குடியின மக்களால் என்றும் வனத்திற்குப் பாதிப்பு இருக்காது என்பதும் பழங்குடிகள் இல்லாமல் காடுகளைப் பாதுகாக்க முடியாது என்பதும் நாம் அறிந்தது.  கடந்த 2006ஆம் ஆண்டு பழங்குடி மக்களின் நலனுக்காகவும், அவர்களது உரிமைக்காகவும் வன உரிமைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், 2005 டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பிருந்தே காடுகளில் வசித்துவரும் பழங்குடியினருக்கு அவர்கள் குடியிருக்கும் நிலம் மற்றும் பயிரிடும் நிலம் ஆகியவற்றுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்கிறது. ஆனால் இதனை எதிர்த்து ‘வைல்டுலைஃப் ஃபர்ஸ்ட்’ (Wildlife first) என்கிற அமைப்பு 2008ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. “பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினால் காடுகள் அழியும், காட்டு விலங்குகளும் அழியும். எனவே இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும்கூட, பட்டா இல்லாத பழங்குடி மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்” என அவ்வமைப்பு தன் மனுவில் கேட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 16 மாநிலங்கள் தங்கள் வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடியினருக்கு வழங்கிய பட்டா மனுக்களின் எண்ணிக்கை, அதில் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை அளித்தன. மொத்தம் 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அம்மக்களை ஏன் வெளியேற்றவில்லை என்று கேட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்; அடுத்த விசாரணைக்குள் அம்மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்க வேண்டும்; தவறினால் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்து, வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
இந்நிலையில் இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்  நிலை உருவாகியிருக்கிறது. தமிழகத்திலிருந்து 11,742 பேரும், சத்தீஸ்கரில் 4,62,403 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,62,024 பேரும், மகாராஷ்டிராவில் 2,28,221 பேரும், தென்னிந்தியாவில் அதிகபட்சமாகக் கர்நாடக மாநிலத்திலிருந்து 1,80, 956 பேரும் வெளியேற்றப்படவுள்ளனர். 
"பழங்குடிகளுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு  வன அழிவிற்கே வழி வகுக்கும்" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 5ஆம் தேதி சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்து அழைப்புவிடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தலித் மற்றும் பழங்குடியின செயல்பாட்டாளர் அசோக் பாரதி, "காடுகளை விட்டு பழங்குடியினர் செல்லவேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மார்ச் 5ஆம் தேதி பந்த் நடத்தவிருக்கிறோம். சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அணி திரள இருக்கிறோம். இந்த போராட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகத் தலித் மக்களும் பங்கேற்கவுள்ளனர். வன உரிமைகள் சட்டத்தை மீண்டும் கொண்டுவரப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து டெல்லியில் அமைதி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடிகள் இன அழிப்பு வன அழிவிற்கே வழி வகுக்கும்- மார்ச் 5 பாரத் பந்த் பழங்குடிகள் இன அழிப்பு வன அழிவிற்கே வழி வகுக்கும்- மார்ச் 5 பாரத் பந்த் Reviewed by நமதூர் செய்திகள் on 03:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.