நாம் முன்னேறுவோம்! நாமே முன்னேற்றுவோம்!! - வி.களத்தூர் எம்.பாரூக்
சாதிக்க வேண்டும் என்ற வெறியும், வரையறுக்கப்பட்ட இலக்கும், சரியான கண்ணோட்டமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எப்பேற்பட்ட நிலையையும் ஒருவன் அடையும் முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகளை நினைவாக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதற்காக உழைப்பார்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கான நினைப்பவர்கள் அதற்காக சிந்தித்து அதற்கான வழியில் செயல்படுவார்கள். அதே போல பலரும் தனக்கு விருப்பமான பலதுறைகளின்படி சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.
அதேபோல நமதூரிலும் நல்ல சிந்தனை கொண்ட இளைஞர்கள் அதிகமிருக்கிறார்கள். நல்ல கனவுகள் அவர்களிடம் இருக்கின்றன, பல விடயங்களில் புதிய பார்வைகளை செலுத்துகிறார்கள் என்பது வியக்கத்தக்கது, பாராட்டுக்குரியது!. ஆனால் இவையெல்லாம் சரியான இலக்கில் செலுத்தப்படுகிறதா? என்றால் பெரிய கேள்வி குறிதான்.
இன்னும் சொல்லப்போனால் அந்த எண்ணங்களை, திறமைகளை மழுங்கடித்து தேவையில்லாத சிறு சிறு பிரச்சனைகளில் ஈடுபடுவது வருந்ததக்கது. அந்த திசையில் இருந்து அவர்களை மாற்றி அவர்களின் கவனங்களை ஊரின் முன்னேற்றத்திற்கான வழிகளில் செயல்பட வைப்பது போன்ற பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அதற்கான வாய்ப்பினை தொடர்ந்து நாம் ஏற்படுத்தாமல் இருந்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையே. நமது பலத்தை தவறான வழிகளில் செலவிடுவதால் நமது ஊருக்கும், நமது வருங்கால சந்ததியினருக்கும் தரப்போவது என்ன? என்று நாம் அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஊரின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், ஏழைகளின் உயர்விற்கும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அது நமது கடமையாக இருக்கின்றன. யாரை எப்படி வீழ்த்துவது என்று சிந்திப்பதிலிருந்து, ஊரை எப்படி வளர்ச்சியின் பாதைக்கு இட்டு செல்வது என்பதில் நமது கவனம் திரும்ப வேண்டும். ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய நமதூரில் அது தொட வேண்டிய வளர்ச்சியை இன்னும் தொட வில்லை என்றே கருதுகிறேன். குறிப்பாக நம் சமூகத்தில் பெரும்பாலான துறைகளில் 'வீழ்ச்சி'யுடன் தான் இருந்து வருகிறோம். நமது வளர்ச்சிக்கு இங்கு செயல்படும் பல இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து, அவற்றின் மூலம் கல்வி, பொருளாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான செயல்திட்டங்கள் அமைக்க வேண்டும் என்பது நமது விருப்பம். நமது ஊரின் முன்னேற்றத்திற்கு நாம் கவனம் செலுத்த தேவையான, எனக்கு தெரிந்த சில விசயங்களை இங்கு பதிவு செய்கிறேன்.
1. கல்வி முன்னேற்றம் :
உலகில் முன்னேறிய அனைத்து சமூகங்களையும், நாடுகளையும் பார்த்தோமையானால் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிய வரும். நமது நாட்டில், நமது சமூகத்தில் கல்வியில் நீண்டகாலமாகவே பின்தங்கி வருகிறோம். இன்றும்கூட முதுகலை பட்டம் பெறுபவர்கள் 1.4% தான் இருக்கிறார்கள். இதிலேயே இப்படி என்றால் வழக்கறிஞர், டாக்டர், வரலாற்று ஆய்வாளர் என சொல்லிக்கொண்டே போகாலாம் அங்கெல்லாம் நமது பங்களிப்பு மிக குறைவுதான். அதே நிலைமை தான் நமதூரிலும். கல்வி ரீதியில் முன்னேற்றம் என்பது இன்னும் இங்கு கானல் நீராகவே இருக்கிறது. அதனால் நமது முதல் கவனம் கல்வி முன்னேற்றதில்தான் இருக்க வேண்டும். கல்வியில் நமது இலக்கை அடைந்துவிட்டாலே நமது முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும். கல்வித்துறையில் மாணவ, மாணவியர்கள் முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் கண்டறிப்படப்பட வேண்டும். அதற்கு இங்கு என்ன தடையாக இருக்கின்றனவோ அவைகளை களைய வேண்டும். மாணவர்களும் இதுதான் இலகுவாக உள்ளது என்று படிக்காமல் அல்லது இதுதான் எல்லோரும் படிக்கிறார்கள் என்று படிக்காமல் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நமது ஊரில் வழக்கறிஞர், டாக்டர் ஒருவர் கூட இல்லை என்பது வருந்ததக்கது. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
2. அரசு வேலைவாய்ப்பு & தொழில் முன்னேற்றம் :
எவ்வளவு கஷ்டப்பாட்டலும் நாம் இங்கு தான் உழைத்து வாழ்வேன் என்ற எண்ணம் கொண்டவர்கள் நமதூரில் மிக குறைவு. அப்படி எண்ணம் கொண்டவர்கள் இருந்தாலும் அவர்களை நமதூர் மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்பதில் எனக்கே பல அனுபவங்கள் உண்டு. நமது நாட்டிலேயே இருந்து தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று பல சகோதரர்களிடம் வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்புகளை ஏனோ யாரும் பரிசீலிப்பதில்லை. அனைவரிடமும் 'வெளிநாடு செல்லவேண்டும்' என்ற எண்ணம் நன்றாக பதிந்துள்ளது. படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்த இளைஞர்களே கூட படித்து முடித்து விட்டு உடனே விசா எடுத்து வெளிநாட்டிற்கு கிளம்பிவிடுகிறார்கள். நமது நாட்டிலேயே அதிலும் குறிப்பாக அரசு துறைகளில் அமர வேண்டும் எண்ணம் குறைவாக காணப்படுகிறது. அரசு வேலை என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பது உண்மைதான். அதேபோல் அதை உடனே நாம் பெற்று விட வேண்டும் என்று நினைப்பதும் தவறு. அதற்கான முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் அரசு வேலைக்கு நடக்கும் போட்டி தேர்வுகளில் பங்கெடுக்க வேறு வேலை செய்யாமல் முழுநேரமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சில தேர்வுகளில் தோல்வியடைந்தாலும் அந்த அனுபவத்தில் வேறு ஒரு தேர்வில் வெற்றிபெற்று உள்ளே சென்று விடுகிறார்கள். நாம் செய்ய வேண்டியது எங்கு, எந்த வேலை காலியாக உள்ளது என்பதினையும், அதற்கு எப்படி தயார் ஆவது குறித்தும் அடிக்கடி கலந்தாய்வு செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பினை இங்கு உருவாக்க வேண்டும். முக்கியமாக அரசு வேலையில் இருக்கும் சகோதரர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அரசு வேலையில் சேர்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
3. பொருளாதாரம் :
சமூகத்தில் மிகவும் பின் தங்கி இருப்பவர்களை கண்டறிந்து சிறு, சிறு உதவிகள் மட்டும் செய்யாமல் பெருமளவில் உதவி செய்து அவர்கள் தொழில் ரீதியாக முன்னேறுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்வதின் மூலம் பாதிப்பில் இருக்கும் நபர்கள் அப்போதைய பிரச்சனையை சமாளித்துக் கொள்கிறார்கள். பிறகு மீண்டும் யாரையாவது எதிர்ப்பார்க்கும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் இத்தனை ஆண்டுகளுக்குள் என்று அளவுகோல் வைத்து ஒவ்வொரு நபராக பொருளாதார ரீதியில் மேல கொண்டுவருவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
4. பைத்துல்மால் :
பைத்துல்மால் என்பது இன்று பல ஊர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பைத்துல்மால் உருவாக்குவதன் மூலம் வட்டி இல்லா கடன்களை இப்போது நாம் வழங்கி வருவதை விட அதிகமாக வழங்க முடியும். அதன்மூலம் மிகவும் நலிவடைந்தவர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி ஆகியவைகளை சிறந்த முறையில் செய்ய முடியும். தற்போது இதுபோன்ற உதவிகளுக்கு வட்டிக்கு பணம் வாங்குவதும் நமதூரில் அதிகரித்து வருகிறது. அதை ஓரளவிற்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதனால் இறைவனிடம் நேரிடையாக மோதும் பாவங்களிலிருந்து அவர்களை நாம் காப்பாற்ற முடியும்.
5. அரசு நலத்திட்டங்கள் :
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. அதன்மூலம் பலர் பயன்பெறுகிறார்கள். இருந்தாலும் இன்னும் பலரால் பயன் பெற முடிவதில்லை. அதற்கு அதை எப்படி பெறுவது என்ற விபரம் தெரியாததுதான் காரணமாக இருக்கிறது. பொதுவான அரசு நலத்திட்டங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என இரண்டையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை பெரும்பாலும் நாம் பயன்படுத்துவதில்லை. சிறுபான்மை மக்களுக்கான உதவிகள் என்னென்ன, அதை எப்படி பெற வேண்டும், யாரை அணுக வேண்டும் என்று ஒரு சிறு புத்தகமே உள்ளது. அதை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதலால் ஒவ்வொரு நலத்திட்டங்களும் செயல்பாட்டிற்கு வரும்போது அந்த விபரங்கள் தெரிந்தவர்கள் அதற்கான அறிவிப்பை செய்து அதற்கு என்ன, என்ன ஆவணங்கள் வேண்டும் என்று விளக்குவது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
6. வக்ப் நிலங்கள் :
இந்தியாவிலேயே அதிகம் சொத்து உள்ள ஒரு துறையாகத்தான் வக்ப் துறை இருக்கிறது. அதேபோல நமது முன்னோர்களாலும் நமக்கு அளிக்கப்பட வக்ப் சொத்துக்கள் பல இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வக்ப் நிலங்களை மீட்டு பாதுகாக்க வேண்டும். அந்த இடத்தில் கல்வி நிறுவனங்களை நிறுவ முயற்சி எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான கல்லூரி வந்தால் நமது சகோதரிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். குறைந்தது வக்ப் நிலங்களை கண்டறிந்து மீட்டு அதை பாதுகாக்கும் முயற்சிகளையா வது செய்ய வேண்டும்.
7. அமைப்புகளை அரவணைத்தல் :
நமது ஊரில் செயல்படக்கூடிய அனைத்து அமைப்புகளையும், அறக்கட்டளைகளையும் அரவணைத்து அவர்கள் செய்யும் நல்ல விசயங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இன்னும் பல நல்ல விசயங்களில் கவனம் செலுத்த ஆர்வம் ஊட்ட வேண்டும்.
8. பதட்டங்களை குறைத்தல் :
நமதூரில் அடிக்கடி ஏற்படும் பதட்டங்களை குறைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய ஊராக இருப்பது நமக்கு நல்லதல்ல. எப்போதும் அதிகார வர்க்கத்தை முறைத்துக்கொண்டு இருப்பதும் தவறான அணுகுமுறை. சிறு சிறு பிரச்சனைகளை இரு தரப்பும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். என்றும் நல்லிணக்கம் தொடரும் வகையில் செயல்பட வேண்டும். ஊரின் பொதுவான பிரச்சனைகளுக்கு கலந்து பேசி இரு தரப்பும் பங்கெடுக்கும் வகையில் கூட அந்த பிரச்சனைகளை முன்னெடுக்கலாம்.
9. வாசிப்பு பழக்கம் :
நவீன கால மோகத்தால் குறைந்து கொண்டே வருகிறது. முகநூளில் வரும் செய்திகளே உண்மை என்று நம்பும் அளவிற்கு பலர் இருக்கிறார்கள். தினசரி நாளிதல்களைகூட படிப்பதில்லை. அவர்களிடம் வாசி ப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும். அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு பொதுவான இடத்தில் நூலகம் அமைக்க வேண்டும். அங்கு வரலாறு, கதை, இலக்கியம் புத்தகம் மட்டுமில்லாமல், கல்வி ரீதியான புத்தகம், அரசு போட்டி தேர்களுகான புத்தகம், தினசரி நாளிதழ்கள் இடம்பெற செய்ய வேண்டும். மற்றும் கலை, இலக்கியம், எழுத்து, பேச்சு, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மூன்று மாததிற்கு ஒரு முறை இவைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
10. சமூக தீமை :
சமூகத்தில் அதிகரித்து வரும் வட்டி, மது போன்ற தடை செய்யப்பட தீமைகளிலிருந்து மக்களை காக்க அதற்கெதிரான பிரச்சாரங்களை அதிகமாக செய்ய வேண்டும். அதன் பாதிப்புகளை எடுத்துரைக்க வேண்டும். இன்னும் இந்த சமூகத்தில் என்னென்ன தகாத விஷயங்கள் நடக்கின்றனவோ அதற்கெதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ய வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. நான் சொல்லாமல் விட்டது இன்னும் பல இருக்கலாம். உங்களுக்கு சிந்தனையில் பல திட்டங்கள் இருக்கலாம்.நமது இலக்கை எட்ட வேண்டும் என்று சொன்னால் அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிந்தித்து, செயல்பட வேண்டும். குறிப்பாக இதற்கான பணிகளில் ஆர்வமுடன் செயல்படுபவர்களை ஜமாஅத் தலைமையில் ஒருங்கிணைக்க வேண்டும். இதுபோன்ற பணிகளில் நாம் தனி கவனம் செலுத்தி வந்தால் சிறிது காலத்திற்குள்ளாகவே நமது எண்ணம் நிறைவேறும். அப்போது நமது ஊர்தான் பல ஊர்களுக்கும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். நமது ஊரின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் நாம் உழைக்க வேண்டும்.
இதெல்லாம் நமதூரில் நடக்குமா? என்று கேள்வியை எழுப்புவதை விட, இதை செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்புவதே சிறந்தது. 'முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை' முயன்றுதான் பார்ப்போமே! முதலில் நாம் முன்னேறுவோம்! பிறகு நமது ஊரை நாமே முன்னேற்றேவோம்!!
- வி.களத்தூர் எம்.பாரூக்
நாம் முன்னேறுவோம்! நாமே முன்னேற்றுவோம்!! - வி.களத்தூர் எம்.பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:04:00
Rating:
No comments: