மாற்றத்தைக் கொண்டு வருவாரா மம்தா!


மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டு ஆட்சியைப் பிடித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, முதன்முதலாக நாடாளுமன்றம் வந்தார். அதை ஆச்சர்யத்தோடு அத்தனை ஊடகங்களும் செய்தியாக்கியதோடு, விவாதங்களையும் நடத்தினார்கள். தனது வருகைக்குப் பின்னர் அவர், “2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணி அமையும்” என்றார். இதுதான் இந்திய அரசியலில் அவர் சொன்ன செய்தி.
பாரதிய ஜனதா வரலாற்றில் முதன்முறையாக மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவரை அசைத்துப் பார்க்க முடியுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் இருந்தது. இப்போது வங்கத்து பெண் புலி மம்தா, தேசிய அரசியல் தொடர்பாக வாய் திறந்திருப்பதால் தேசிய அளவில் மாற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற நம்பிக்கையுடன் மம்தாவைப் பார்க்கின்றனர் அத்தனை பேரும்.
மம்தா, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணி அமையும் என்ற கருத்தை முன்வைத்தாலும், பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்துவது பற்றி எதையும் சொல்லவில்லை. இந்திய அரசியல் தளத்தில் ஒரே கருத்தையும் ஒத்த கண்ணோட்டத்தையும் கொண்ட கட்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால், குறைந்தபட்ச செயல்திட்ட சிந்தனை என்ற ஒன்றில் எல்லா கட்சிகளுமே ஒரு புள்ளியில் இணைவார்கள். அந்தப் புள்ளியில் தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை பல கட்சிகளை இணைக்கலாம் என்று விரும்புகிறார் மம்தா.
அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக கொல்கத்தாவில் நடந்த தியாகிகள் தினத்தில் பேசிய உரை மிக முக்கியமானது. அதில், “நான் ஒரு சிறிய, எளிய பெண். என் குடிசைக்குள் வாழவே விரும்புகிறேன். ஆனால், என் நண்பர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன்” என்றார் அந்தக் கூட்டத்தில். அவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆதரித்துப் பேசினார் என்பதே உண்மை. கடந்த செவ்வாய்க்கிழமை நிதிஷ்குமார் கொடுத்த விருந்தில் மம்தா பங்கேற்றார். வரவிருக்கும் கோவா மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் மம்தா என்கிற தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் கசிந்தபோது ஊடகங்கள் அதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மறுப்பேதும் அவர் சொல்லவில்லை. கடந்த ஆண்டு பீகார் தேர்தலில் வெளிப்படையாகவே நிதிஷ்குமாரை ஆதரித்தார் மம்தா.
ஆனால், மோடி மிருகபலத்தோடு எதிர்கொண்ட 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கத் தவறியதால் அகில இந்திய அளவில் தோல்வியடைந்ததையும் ஒப்புக் கொள்கிறார்.
“இந்த மாற்றத்துக்குக் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும் ஒரு காரணம். அவர்கள் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி கவலைப்படவில்லை, அவர்கள் தனித்து நின்றார்கள். பிராந்தியக் கட்சிகளின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.
சரி, பாஜக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் பட்சத்தில் அதற்கு தலைமையேற்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்விதான் முக்கியத்துவமானது. தனது பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அது சகல தரப்பினரிடமும் தோல்வியடைந்துள்ளது அந்த வெறுப்புதான் மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இது பற்றி மம்தா என்ன நினைக்கிறார்… அவர்கள் இழந்த நம்பிக்கையை முதலில் மீட்டெடுக்க வேண்டும். “திரிணாமூல் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க விரும்பி அதன் தலைவர் சோனியா காந்தி முன்வந்தால் உங்களின் முடிவு என்னவாக இருக்கும்?” என்று கேட்டபோது, “இப்போதைக்கு இது பற்றி எதுவும் கூற முடியாது. சூழலைப் பொறுத்தே இந்த முடிவுகள் இருக்கும்” என்றார்.
மத்திய அரசுடன் உறவு!
மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்குமிடையில் சுமூகமான உறவில்லை. மத்திய அரசு திட்டங்களை அறிவிப்பதும் அதை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும், எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில அரசின் ஒப்புதலை பெறுவதில்லை என்றும் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார் மம்தா.
மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியைப் பிடித்த பின்னர் - மோடி 2014இல் ஆட்சிக்கு வந்த பின்னர் - அவர் மத்திய அரசோடு சுமூக உறவைப் பேணுவார் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், மம்தா தன் அமைதியைக் குலைத்து வெளிப்படையாகவே மத்திய அரசுக்கு எதிராகச் சீறினார். மம்தாவின் இந்த வெளிப்படையான அரசியல் பாஜக-வினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத்யாதவ் இவர்களோடு மாயாவதியும் இணைந்தால் காங்கிரஸ் தானாக வந்து தலைமையேற்கும். ஆனால், இவர்களை இணைப்பது யார் என்ற கேள்விக்கு விடையாக வட இந்திய அரசியலில் கிங் மேக்கராக மம்தா பானர்ஜி உருவாகியிருப்பதாக கருதுகிறார்கள்.
2019ஆம் ஆண்டு தேர்தல்!
2019ஆம் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. ஆனால், அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உ.பி. மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால், அதுதான் மோடி வீழ்ச்சியின் தொடக்கம். ஆனால், அதற்கு மாறாக இந்த இரு மாநில தேர்தல்களிலும் பாஜக வென்றால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமையும். ஆக மொத்தம் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களில் பாஜக-வைப் பலவீனமடையச் செய்வதே இப்போதைய நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் மம்தா, நிதிஷ்குமாருடன் வெளிப்படையான தேர்தல் நட்பு கொள்கிறார். மம்தா எடுத்திருக்கும் இந்த அஸ்திரம் வென்றால், இந்திய அரசியல் அரங்கில் மம்தாவின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரிக்கும்.
மாற்றத்தைக் கொண்டு வருவாரா மம்தா! மாற்றத்தைக் கொண்டு வருவாரா மம்தா! Reviewed by நமதூர் செய்திகள் on 05:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.