நிர்வாணப்படுத்தி தாக்கினர்: பியூஸ் மானுஷ்
சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டும் பணிகளை தடுத்தார் என கைது செய்யப்பட்டார் இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ்.
சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 19ஆம் தேதி , சேலம் முதன்மை நீதிமன்றத்துக்கு வந்தது. அவரது மனைவியும் மனுதாரருமான மோனிகா அவரது கணவரின் உடல் நிலைகுறித்து பல்வேறு தகவல்களைக் கூறியபோது கவனமாகக் கேட்ட மாஜிஸ்ட்ரேட், அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கடுமையான ஆட்சேபணையின் காரணமாக விசாரணை ஜூலை 20ஆம் தேதி ஒத்திவைத்தார். பகல் 12.30 மணியளவில் மீண்டும் பியூஸ் மானுஷ் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காலையில் இருந்தே அவரது குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் குழுமி இருந்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘பியூஸ் மானுஷ் ஒரு நக்சலைட். ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என வாதிட்டார். அதற்குப் பதிலளித்த மாஜிஸ்ட்ரேட் சேஷாயி, ‘ஆர்வக்கோளாறில் குழந்தையைப்போல் அதீதமான சிந்தனையோடு போராடுபவர்களை எல்லாம் நக்சலைட் முத்திரை குத்தாதீர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்தவர், இரவு 7.15 மணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மூன்று வாரங்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4. 50 மணிக்கு ஜாமீனில் விடுதலையானார் பியூஷ் மானுஷ்.
அதன்பின், தனியாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியவர் சிறைக்குள் தனக்கு நேர்ந்த கொடூரங்களை கண்ணீரோடு வெளிப்படுத்தினார்.
‘நான் சிறைக்குள் சென்ற 8ஆம் தேதி இரவு, என்னை 30 காவலர்கள் சூழ்ந்துகொண்டனர். பின், என்னை நிர்வாணப்படுத்தினர். அதன்பிறகு மிகக் கடுமையாக தாக்குதல் நிகழ்த்தினர். என்னை படுக்கவைத்து கொடூரமாக அடித்தனர். தேசியக் கொடியை அவமானப்படுத்தியவனா நீ? என்று என்னைத் தாக்கினர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. காலை வரை இதேபோல் தாக்கினர். பாலம் தொடர்பான வழக்கில் கைதான என்னை, தேசியக் கொடியை அவமானப்படுத்தியவனாக தவறாகச் சித்தரித்து தாக்கினர். எனக்கு வந்த நிலை வேறு யாருக்கும் வரவேண்டாம்’ என்றார் கண்ணீரோடு.
நிர்வாணப்படுத்தி தாக்கினர்: பியூஸ் மானுஷ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:34:00
Rating:
No comments: