மக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை.. சரணடைந்த ராணுவம்


இஸ்தான்புல்: துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார் அதிபர் எர்டோகன். நாட்டு மக்கள் நினைத்தால்தான் தன்னையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று எர்டோகன் உணர்ந்திருந்தார். 

இதையடுத்து, ராணுவத்திற்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என எர்டோகன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிகளுக்கு இறங்கினர். ராணுவ பீரங்கிகளை முன்னேற விடாமல் மக்கள் திண்டு போராட்டம் நடத்தினர். 

ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக டாக்சிம் சதுக்கத்தில் பொதுமக்கள் ஒன்று கூடினர். இந்நிலையில், வேறொரு நகரில் சுற்றுப் பயணத்தில் இருந்த எர்டோகன், இன்று அதிகாலை இஸ்தான்புல் நகரிலுள்ள அட்டதுர்க் முக்கிய விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு ஆதரவாளர்களும், பொதுமக்களும் கூடி எர்டோகனுக்கு ஆதரவாக கோஷமெழுப்பினர். அவர்கள் மத்தியில் எழுச்சிமிகு உரையாற்றினார் எர்டோகன். எர்டோகன் கூறியதாவது: 

துருக்கியில் எற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு ஐரோப்பாவிலுள்ள இஸ்லாமிய, மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலரும் தான் காரணம். சதி திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி வரும். துருக்கி நாட்டின் நேர்மை மற்றும் ஒற்றுமையை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல் தேச துரோகம். ராணுவ தளபதி எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புரட்சியில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் துப்பாக்கியை மக்களுக்கு எதிராகவே திருப்பியுள்ளனர். மக்கள் ஆதரவோடு அமைந்த இந்த அரசை சதி செய்து கலைக்க முடியாது. நாம் சதிகாரர்களுக்கு எதிராக நிற்கும்வரை அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். 

இவ்வாறு எர்டோகன் பேசிக்கொண்டிருந்ததை நேரடியாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் காண்பித்தன. அப்போது, புரட்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் பீரங்கிகளை கைவிட்டு, இறங்கி, கையை உயர்த்தி சரணமடைந்த காட்சிகளையும், டிவி சேனல்கள் காண்பித்தன.
மக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை.. சரணடைந்த ராணுவம் மக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை.. சரணடைந்த ராணுவம் Reviewed by நமதூர் செய்திகள் on 01:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.