பிரிட்டன் முன்னாள் பிரதமரிடம் பாடம் கற்கட்டும் மோடி - கி.வீரமணி


நபம் துகி தலைமையில் அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய பாஜக அரசை கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி. அதில், ‘நேற்று (13.7.2016) உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, அரசமைப்புச் சட்டம் 356 பிரிவினைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆளும் அருணாச்சலப் பிரதேச ஆட்சியை - ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் மத்திய பாஜக அரசு கலைக்கச் செய்து, ஜனநாயகப் படுகொலையைச் செய்தது. இந்த நிலையில், மீண்டும் 2015 டிசம்பரில் அங்கிருந்த (காங்கிரஸ்) அமைச்சரவையே பதவியில் அமர்த்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு கூறிவிட்டது. நாட்டில் உள்ள அத்துணை ஜனநாயக விரும்பிகளாலும் இது பெரிதும் வரவேற்கப்படுகிறது. பாஜக-வுக்கு மட்டும்தான், இது விசித்திரமான தீர்ப்பாகத் தென்படுகிறது. முன்பு இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ‘குதிரைப் பேரம்’ நடத்தி அங்குள்ள ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு முறைப்படி தன் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே, அரைவேக்காட்டுத்தனமாக நீக்கியது செல்லாது என்று மத்திய பிரதமர் மோடி அரசின் முகத்தில் அடித்ததைப்போல தீர்ப்பு தரப்பட்டது. இரண்டாவதாக அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்த காங்கிரஸ் அரசினைக் கவிழ்த்து, அங்கும் காங்கிரஸ் உறுப்பினர்களைக் கட்சி மாறச்செய்து, அங்குள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது செல்லாது என்று நேற்று தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் 356ஆம் பிரிவு பற்றிய எஸ்.ஆர்.பொம்மை வழக்கில்,உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பில் மிகத்தெளிவான நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை நெறிமுறைப்படுத்தியுள்ளதையும் அலட்சியப்படுத்தி, மத்தியில் உள்ள பாஜக அரசு நடந்துகொண்டதன் விளைவு, இந்த அவமானத்தை அவர்கள் சுமந்து தீரவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 356ஆம் பிரிவு, இந்தியாவில் 120 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரிதும் தவறாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒரு பிரிவு தேவையா என்ற சிந்தனையையே நாட்டில் விவாதப் பொருளாக்கியும் விட்டுள்ளது. இதற்குக் காரணமான அத்துணைப் பேர்களும் ஆளுநர், பிரதமர் - அமைச்சரவை, பிறகு கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் உள்பட ஜனநாயக ரீதியில் பொறுப்பேற்க வேண்டாமா?
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று 52 விழுக்காட்டினர் வாக்களித்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை மதித்து, யாரும் கேட்காமலேயே, தான் பதவி விலகுகிறேன் என்று கூறி, அடுத்த பிரதமருக்கு வழிவிட்டுச் சென்றதோடு, அந்த 10, டவுனிங் தெரு, பிரதமர் அலுவலகத்தில் வளர்ந்த பூனைக்குட்டியைக்கூட ‘அது அரசின் சொத்து, அதை என் வீட்டுக்கு அழைத்துச் செல்லமாட்டேன்’ என்று கூறியுள்ளாரே! என்னே ஜனநாயக மாண்பு! இந்த மக்களாட்சியின் உயர்ந்த மாண்பையும் பார்த்து, இந்த ‘ஞானபூமி’யில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளையும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? அவரை முன்மாதிரியாகக் கொண்டு பாடம் படிக்க வேண்டாமா? இனிமேலாவது இப்படிப்பட்ட ஜனநாயக அவலங்கள் தொடரவேண்டாம். உச்சநீதிமன்றம் எடுத்த ஜனநாயகப் பாடம் அருமையானது - பாராட்டத்தகுந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமரிடம் பாடம் கற்கட்டும் மோடி - கி.வீரமணி பிரிட்டன் முன்னாள் பிரதமரிடம் பாடம் கற்கட்டும் மோடி - கி.வீரமணி Reviewed by நமதூர் செய்திகள் on 23:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.