காந்தி பிறந்த மண்ணில் மது தாராளம்!
இரண்டாம் மற்றும் இறுதிகட்டத் தேர்தலை இன்று (டிசம்பர் 14) எதிர்கொள்கிறது குஜராத்.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் ஆணையம் ரூ.23.8 கோடி மதிப்பிலான மது பாட்டில்களைக் கைப்பற்றியிருக்கிறது. அம்மாநிலத்தில் மதுவிலக்கு தீவிரமாக அமலில் இல்லையென்பதை இது காட்டுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மதுவிலக்கு குறித்து கருத்து தெரிவித்தபோது, குஜராத் மாதிரியை மற்ற மாநிலங்கள் பின்பற்றப்பட வேண்டுமென புத்திமதி சொன்னது. அந்த அளவுக்கு, அங்கு மதுவிலக்கு தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது என்ற கருத்து இதன்பின் பொதிந்துள்ளது. ஆனால், அங்குள்ள நிலைமை எவ்வாறு இருக்கிறது?
கடந்த 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோதே, அங்கு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. காந்தி பிறந்த மண் என்பதால், கொள்கைபூர்வமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு இப்போதுவரை பப்களோ அல்லது பார்களோ செயல்படுவதில்லை. இவ்வளவு ஏன், அங்கு மது உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, லாபம் என்று எதுவுமே நடப்பதில்லை. ஆனால், திருட்டுத்தனமாக மது உள்ளிட்ட இதர போதைப் பொருள்களை குஜராத் மாநிலத்துக்குள் எடுத்துவருவது குறைந்தபாடில்லை.
தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி, குஜராத் மாநில முதலமைச்சராக முதன்முறை பதவியேற்ற 2002 சட்டமன்றத் தேர்தலின்போதும் சட்டவிரோதமாக மது கடத்துவது அதிகமாக இருந்தது. வழக்கத்தைவிட, தேர்தல் காலங்களில் இவ்வாறு மது கடத்துபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியும் அதிகம் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து, குஜராத்துக்கு சட்ட விரோதமாக மது கொண்டுவரப்படுகிறது. காலம்காலமாகத் தொடரும் இந்த வழக்கம், பாஜகவின் ஆட்சியிலும் குறையவில்லை என்பதையே, தற்போதைய நடவடிக்கைகள் வெளிக்காட்டுகிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் மது, போதை மருந்து மற்றும் பணம் அதிகளவில் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறை, கலால் துறை, வணிகவரித் துறை மட்டுமல்லாது தேர்தல் ஆணையமும் இந்தப் பணியில் ஈடுபட்டது.
கடந்த ஒருமாத காலத்தில் மட்டும், குஜராத் மாநில காவல் துறை ரூ.3.56 லட்சம் மதிப்பிலான மதுவைக் கைப்பற்றியிருக்கிறது. அதேநேரத்தில், அங்குள்ள கலால் துறை ரூ.23.76 கோடி மதிப்பிலான 10.12 லட்சம் லிட்டர் மதுவைக் கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். பிடிபட்டிருக்கும் மதுவின் மதிப்பு இவ்வளவு என்னும்போது, புழக்கத்தில் இருந்தவற்றின் மதிப்பும் அளவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.
காந்தி பிறந்த மண்ணில் மது தாராளம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:34:00
Rating:
No comments: