கூடங்குளம்: அணு உலைகள் பழுதடைவது தொடர்கிறது!
வரலாறு காணாத வகையில், கூடங்குளம் அணு உலைகள் மிக மோசமாகப் பழுதடைந்துவருகின்றன. எனவே, கூடங்குளம் வளாகத்தில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அலகுகள் 1, 2 குறித்த சுயாதீனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை, அலகு 1 நாற்பதுக்கும் மேற்பட்ட முறை பழுதடைந்து நின்றுள்ளது. ஒவ்வொரு முறையும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் அலகு 1, மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கக் குறைந்தது நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள மற்ற அணு உலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுதடைந்து நிற்கும் அல்லது எரிபொருள் நிரப்ப நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் உலைகள் 45 முதல் 60 நாட்களில் மின் உற்பத்தியைத் துவக்கும்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், இதுகுறித்து தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார்.
கூடங்குளம் திட்டத்திற்கு உலைகளை வழங்கிய ரோசடோம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ - போடாஸ்க்கின் கொள்முதல் பிரிவு இயக்குனர் செர்ஜி ஷுடோவ் ரஷ்ய காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார். தரங்குறைந்த எஃகுவுக்குத் தரம் உயர்ந்ததாகச் சான்றிதழ் வழங்கியதாகவும், அவை இந்தியா, சீனா, பல்கேரியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டன என்றும் கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
கோபாலகிருஷ்ணனின் அறிக்கையை மேற்கோள்காட்டி கூடங்குளம் அணு உலைகளுக்கு வாங்கப்பட்ட உதிரிபாகங்கள் தரங்குறைந்தவை என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2013 மே மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கூடங்குளம் அணு உலையின் ஒவ்வொரு உதிரி பாகத்தையும் சோதனை செய்தசெய்த பிறகே அணு உலைகளை இயக்க முடியும் என்று சொன்னது.
ஆனால் தீர்ப்பு வந்த இரண்டே மாதங்களில் சில அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தாக்கல் செய்துவிட்டு அணு உலையை இயக்க ஆரம்பித்தது தேசிய அணு மின் கழகம்.
சில நாட்களுக்கு முன்னர், கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்து 2000 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டதாக அணுசக்தித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், இரண்டாவது அலகு 9 நாட்கள் மட்டும் ஓடிப் பழுதடைந்தது. 2000 மெ.வா. உற்பத்தியை நிகழ்த்திய சில நாட்களில், மீண்டும் அலகு ஒன்றிலுள்ள டர்பைனில் கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, “உலகம் முழுவதும் புதிய அணு உலைகள் 80% திறனில் ஓடும் நிலையில், கூடங்குளம் அணு உலையின் அலகு ஒன்று 43% திறனில்தான் ஓடியதென்று தெரிவிக்கின்றன தேசிய அணு மின் கழகத்தின் தரவுகள். கடந்த வாரம் டர்பைனில் ஏற்பட்ட கோளாறு, பல கோளாறுகளின் தொடர்ச்சிதான்” என்று கூறுகிறது. இது தொடர்பாகச் சில முக்கியமான கோரிக்கைகளையும் இந்த அமைப்பு வைக்கிறது:
1. சர்வதேச மற்றும் நம் நாட்டிலுள்ள சுயாதீன நிபுணர்கள் கொண்ட குழு, கூடங்குளம் அணு உலைகளின் அலகுகள் 1, 2 குறித்து முழு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆனாலும், நிச்சயம் இதைச் செய்ய வேண்டும்.
2. கூடங்குளம் அணு உலை வளாகத்திலுள்ள அலகுகள் 3, 4இல் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பின்னாளில் இத்தனை கோடிகள் செலவழித்துவிட்டோம் என்று எந்தக் காரணமும் சொல்லக் கூடாது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “கூடங்குளத்தில் நடைபெறும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளே காரணம் என்கிற குற்றச்சாட்டையும் சேர்த்தே வைக்கிறோம்” என்று தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கூடங்குளம்: அணு உலைகள் பழுதடைவது தொடர்கிறது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:46:00
Rating:
No comments: