கிண்டில் கருவியில் பெரியார்!
பெரியாரின் 44ஆம் நினைவு நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் 24ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் புத்தகங்கள் அமேசான் கிண்டில் (Amazon Kindle e-book reader) கருவியில் வெளியிடப்பட்டன.
தந்தை பெரியாரின் 44ஆம் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி, ‘பெண் ஏன் அடிமையானாள்? எப்படி விடுதலை பெறுவாள்?’ என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அமேசான் கிண்டில் கருவியில் பெரியாரின் புத்தகங்களை வெளியிட்டார்.
தந்தை பெரியாரின் புத்தகங்களைத் தொடர்ந்து அச்சுப் புத்தகங்களாக வெளியிட்டுவரும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திலும் அவருடைய கருத்துகளைப் பரப்பும்வண்ணம் வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பே செல்பேசிப் புத்தகம், ஒலிப்புத்தகம், காணொளிப் புத்தகம் என பல வடிவங்களில் பெரியாரின் எழுத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன் பேசி (Smart Phone), குளிகை (Tablet) என இளந்தலைமுறை வாசகர்கள் புதிய தளங்களில் வாசிப்பதைக் கணக்கில் கொண்டு, உலகப் புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தின் மின் புத்தகப் பிரிவான கிண்டில் கருவிகளிலும் பெரியாரின் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம்.
அமேசான் கிண்டில் கருவியில் முன்பு ஆங்கில நூல்களைப் படிப்பதற்கான வசதி மட்டுமே இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் ஆங்கில நூல்கள் கிண்டிலில் வெளியிடப்பட்டிருந்தன. அண்மைக் காலத்தில் தமிழிலும் நூல்களை வெளியிடுவதற்கான தொழில்நுட்பத்தை கிண்டில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஆஸ்க்கி (ASCII) எழுத்துருவிலிருந்து ஒருங்குறி (Unicode) வடிவுக்குத் தானியங்கியாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ள முதல் நூல் என்ற பெருமை தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்குக் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக தந்தை பெரியாரின் ஆறு புத்தகங்கள் கிண்டில் கருவியில் வெளியிடப்பட்டுள்ளன.
கிண்டில் ஈ-புக் ரீடர் என்னும் தனிக் கருவியில் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் உள்ளிட்ட திறன்பேசிகளிலும் கிண்டில் செயலிகளில் இப்புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம். மேலும் இப்புத்தகங்கள் ‘கிண்டில் அன்லிமிடெட்’ வாசகர்களுக்கு இலவசமாகவும் கிடைக்கும் என்கிறது பெரியார் திடல் வெளியிட்ட செய்திக் குறிப்பு.
கிண்டில் கருவியில் பெரியார்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:59:00
Rating:
No comments: