எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் தரும் அட்வைஸ் இது
தமிழக ஆளுநர் நடத்தி வரும் ஆய்வில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில், கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை, இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்தார்.
மேலும், கோவையைத் தொடந்து நெல்லை, கன்னியாகுமரி, கடலூரிலும் ஆய்வு மேற்கொண்டார். கடலூரில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புகொடியுடன் போராட்டம் நடத்தினர்.
ஆய்வு குறித்து ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் எந்த பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தவும், நிர்வாகம் தொடர்பான தகவல்களைக் கேட்டுப் பெறவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆளுநரின் விளக்கம் வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் பதவி என்பது பெயரளவிலான பதவி மட்டுமே என்றும், முதல்வர்தான் உண்மையான தலைமை பொறுப்பு வகிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆளுநர் நடத்தி வரும் ஆய்வில் மாவட்ட நிர்வாகத்தினர் தவிர்க்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் தரும் அட்வைஸ் இது
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:25:00
Rating:
No comments: