இரோம் ஷர்மிளா கனவும் யதார்த்தமும்!


இந்திய மக்கள் அனைவரையும் உண்ணாவிரதம் மூலம் தன் விரல் நுனியில் வைத்திருந்த திறமை மகாத்மா காந்திக்கு இருந்தது. அது திறமை என்பதை விட அர்ப்பணம் என்றே சொல்ல வேண்டும். தன்னை வருத்திக் கொள்கிற போராட்ட நடைமுறையான உண்ணாவிரதம் தொடர்பாக காந்திக்கும், அம்பேத்கருக்கும் முரண்பாடுகள் எழுந்தன. ‘பசியைப் பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு உண்ணாவிரதம் ஒரு போராட்ட வழிமுறையாக இருக்கலாம். ஆனால், அன்றாடம் உணவே இல்லாமல் இந்த நாட்டில் வாழ்கிறவர்கள் எப்படி உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வழிமுறையாக எடுக்க முடியும்’ என்றார் அம்பேத்கர். அரசியல் ரீதியாக அது சரிதான் என்றாலும் காந்திக்குப் பின்னர் இந்தியாவில் உருவான எல்லா எதிர்ப்பு வடிவங்களுமே உண்ணாவிரதம் என்ற தன்னை வருத்திக்கொள்ளும் நடைமுறையாகவே இருந்தன. இரோம் ஷர்மிளாவும் தனி மனுஷியாக அதையே செய்தார்.
மணிப்பூரின் தேவதை என்று வர்ணிக்கப்பட்ட இரோம் ஷர்மிளாவின் நிலை தற்போது பரிதாபமானதாக மாறி வருகிறது. நெஞ்சுரத்தோடு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தபோது மணிப்பூர் மக்கள் அவரைக் கொண்டாடி ‘இரும்புப் பெண்மணி’ என்று மணிமகுடம் சூட்டினர். ஆனால், அந்த மணிமகுடமே இன்று அவருக்கு முள்முடியாக மாறி, அவரை பெரும் துயருக்கு ஆளாக்கியிருக்கிறது. இரோம் ஷர்மிளா தான் பதினாறு ஆண்டுகளாக சுமந்து வந்த அந்த மகுடத்தை இறக்கி வைத்துவிட்டு சாதாரணப் பெண்மணியாக வாழ விரும்புகிறார். காதல் திருமணம், அரசியல் பிரவேசம் என அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்ததற்கு மணிப்பூரில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அவரது போராட்ட வாழ்வே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
இரோம் ஷர்மிளா விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிவதற்கு முன் இந்த பிரச்னையின் பின்புலத்தை அறிந்து கொள்வது நல்லது.
இந்தியா விடுதலை அடைந்தபோது மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. 1949ஆம் ஆண்டு மணிப்பூர் மகாராஜாவும் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் அப்பகுதி இணைந்தது. ஆனால், இதற்கு மணிப்பூரில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்தியா ஆட்சிக்கு எதிராக 1964ஆம் ஆண்டு யு.என்.எல்.எஃப் என்ற பிரிவினைவாத இயக்கம் உருவானது. மணிப்பூர் சுதந்திரமான சோசலிஷ தனி நாடாக உருவாக வேண்டும் என்பது இதன் கொள்கை. 1990-களில் இந்த அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கியது. இதற்காக மணிப்பூர் மக்கள் ராணுவம் என்ற ஆயுத இயக்கத்தைக் கட்டமைத்தது. இதனால், இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பதுங்கியிருந்தபோது யு.என்.எல்.எப். தலைவர் ஆர்.கே.மேகென் என்ற சனயாய்மா கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தவிர அங்கே பல பிரிவினைவாத அமைப்புகளும் இயங்கத் தொடங்கின. ஆக தீவிரவாதம், கிளர்ச்சி போராட்டம் என மணிப்பூர் யுத்த பூமியானது.
இந்நிலையில்தான் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அங்கே அமல்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்றி யாரையும் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. கடந்த 2000 நவம்பர் 2ஆம் தேதி மலோம் பேருந்து நிலையத்தில் மக்கள் பேருந்துக்காகக் காத்திருந்தபோது ஆயுதப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் காட்சியை நேரில் கண்ட இரோம் ஷர்மிளா கொதித்தெழுந்தார். உடனே மணிப்பூர் மக்களை பீடித்திருக்கும் இந்த கொடும் சட்டத்தில் இருந்து விடுவிக்க, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். மூன்று நாட்களுக்குப் பின் இரோம் ஷர்மிளா தற்கொலைக்கு முயன்றார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. மேலும் அவர் உயிர் வாழ்வதற்காக வலுக்கட்டாயமாக அவரது மூக்கில் டியூபை செலுத்தி அதன் வழியே திரவ உணவு கொடுத்து வந்தனர். இந்த வகையில் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் 16 ஆண்டுகளாக தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக ஷர்மிளா அறிவித்ததை அடுத்து, அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர் நேற்று நண்பகல் தேன் அருந்தி தன் 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன.
“எந்த நோக்கத்துக்காக ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டாரோ அந்த நோக்கம் நிறைவேறும் முன்பு உண்ணாவிரதத்தை கைவிட்டது ஏற்புடையது அல்ல” என்று சில அமைப்புகள் ஷர்மிளாவை விமர்சித்தன.
அடுத்து ஷர்மிளாவின் நிலைப்பாடு என்ன என்று நாடே எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் “நான் தேவதையல்ல. சாதாரண பெண். நான் என் காதலரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார்... அதுவரை தேவதையாக வர்ணிக்கப்பட்ட ஷர்மிளா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய ஷர்மிளா, “நான் மணிப்பூரின் முதல்வராக விரும்புகிறேன். எனக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இங்கு அரசியல் சாக்கடையாக உள்ளது. அதனை நான் தூய்மை செய்வேன். நாற்பது சுயேட்சைகளை ஒருங்கிணைத்து மணிப்பூரில் புதிய மாற்றத்தை கொண்டு வருவேன்” என்று அறிவித்தார். மேலும் இரோம் ஷர்மிளாவை முன்னிறுத்தி மாநில சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்துக்கு மணிப்பூர் பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் இமாகெத்தல் என்ற மிகப்பெரிய வணிகச் சந்தை உள்ளது. இங்குள்ள எல்லா கடைகளையும் பெண்களே நடத்தி வருகிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘இரோம் ஷர்மிளாவை தேவதையாக நாங்கள் கருதினோம். அவர் தேர்தல் அரசியலில் இறங்க விரும்புவது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதேவேளையில், மணிப்பூர் தனிநாடு கோரும் ஏ.எஸ்.யூ.கே என்ற பிரிவினைவாத அமைப்பு இரோம் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல் அரசியலை நோக்கிச் சென்ற அனைவருக்குமே அது ஒரு முட்டுச்சந்து என தெரியும். இரோம் ஷர்மிளா திருமணம் செய்ய உள்ள நபர் மணிப்பூர் தேசிய இனத்தைச் சேராதவர். ஆகையால், தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், இரோம் ஷர்மிளா தன்னுடைய போராட்டத்தைத் தொடர வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது. மணிப்பூரில் எதிர்ப்பு என்ற நிலையில், தன் இல்லம் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம். இதனால் போலீஸார் அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த மருத்துவமனை'யில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
16 ஆண்டுகள் உண்ணாமல் சிறையில் வாடிய ஒரு பெண், அவர் இரும்பு பெண்ணே ஆனபோதும், தன் சொந்த வீட்டாரால் நிராகரிக்க, அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. காதல் வாழ்வில் ஈடுபடுவது அவருடைய தனிபட்ட விருப்பம். ஆனால், அவர் மணிப்பூரின் முதல்வர் பதவியைக் கைப்பற்றுவேன் என்கிறார். மணிப்பூரின் அரசியல் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என்று பலரும் இதைக்கருதும் நிலையில் இரோம் தங்களை ஏமாற்றி விட்டதாக அங்குள்ள இயக்கவாதிகள் கருதலாம்.
சமூகத்துக்காக போராட வேண்டும் என்று விரும்பி பதினாறு ஆண்டுகள் போராடிய ஒரு இரும்புப் பெண்ணுக்கு இந்த சமூகம் தரும் பரிசா இது? மக்களுக்களுக்காக போராடுவதோ, இல்லை காதல் திருமணம் செய்து கொள்வதோ, அரசியலில் ஈடுபடுவதோ இரோம் ஷர்மிளாவின் தனிப்பட்ட விருப்பம். அவரை எந்த வகையிலும் நிர்பந்திப்பது, எந்த வகையிலும் நியாயமில்லை. அவர் வாழ்க்கையை அவர் வாழ இரோம் ஷர்மிளாவின் விருப்பம். அதை தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
இரோம் ஷர்மிளா கனவும் யதார்த்தமும்! இரோம் ஷர்மிளா கனவும் யதார்த்தமும்! Reviewed by நமதூர் செய்திகள் on 01:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.