வசூல் ராஜாக்களாக பசு காவலர்கள்!


பசுவை முன்னிறுத்தி இந்தியாவில் பெரிய அரசியல் நடந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. அந்த அரசியல் பல்வேறு வன்முறைகளுக்கும் பிரிவினைகளுக்கும் வித்திட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இதில், அறியாத அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று இருக்கிறது. பசுக்களின் காவலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் மோசடிக் கும்பல்கள் சாதாரண வணிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.
பஞ்சாப் முழுவதும் மக்களை மிரட்டி, பசு ரட்சகர்கள் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுவதாக கால்நடை வணிகர்கள் புகார் அளித்து மாநிலத்தையே அதிரவைத்திருக்கிறார்கள். இந்த மோசடிக் கும்பலுக்கு அஞ்சி தாங்கள் காலம்காலமாக செய்துவந்த தொழிலையே கைவிட்டிருக்கிறார்கள் பலர்.
ஜக்ரானில் உள்ள சிம்னா கிராமத்தில் 30 ஆண்டுகளாக, கால்நடைகள் வளர்ப்பையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்தவர் அமிஜித் சிங் டியோல். தான் வளர்க்கும் பசுக்களை விலைக்கு விற்று பொருள் ஈட்டி வந்திருக்கிறார் இவர். ஆனால் அதை வாகனத்தில் ஏற்றிச் சென்று விற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்ன சிக்கல் என்பதை அவரே கூறுகிறார்.
“விற்பனைக்காக பசுக்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை இடைமறிப்பதற்காகவே ஒரு கும்பல் வழியில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களை பசுக்களின் ரட்சகர்கள் என்று கூறிக் கொள்வார்கள். அந்தப் பசுக்களின் ரட்சகர்கள் என் வாகனத்தை எந்த இடத்திலும் நிறுத்தாமல் இருக்க நான் இந்து சிவசேனைத் தலைவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளேன்.
மேலும், பசு ஒன்றுக்கு ரூ .200 வீதம் அல்லது லாரி ஒன்றுக்கு ரூ .2,000 (ஒரு லாரியில் 10 பசுக்கள்) பசுக்களின் ரட்சகர்களுக்கு கொடுக்க வேண்டும். பின்னர் சரக்கு வாகனத் தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து மொத்தப் பணமாக 3.80 லட்சம் கொடுத்தால் அடுத்த ஆறு மாதம் வரை பசுக்களின் காவலர்களின் தொல்லை இருக்காது.
இந்த முறையில் பணம் கொடுத்துவிட்டால் போதும். அவர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை குறித்துக் கொண்டு அந்த வாகனத்தை மட்டும் தடுக்க மாட்டார்கள். இவர்களால் நான் இழந்தது பல லட்சங்களை. இவர்களுக்கு கப்பம் கட்டி நம்மால் மாளாது என்று கால்நடை வர்த்தகத்தையே கைவிட்டுவிட்டு பால் பண்ணை தொழிலுக்கு மாறிவிட்டேன் ” என்றார். எப்படியிருக்கிறது இந்தக் கூத்து..? தேடுவான் ஒருவன் தின்பான் இன்னொருவன் என்பது இதுதானா? சரி, இவர்கள் போலீஸில் புகார் கொடுத்தால் என்னவென்ற கேள்வி எழலாம். அதற்கு பஞ்சாப் முற்போக்கு பால் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தல்ஜித் சிங் இப்படி பதில் கூறுகின்றார். “போலீஸிடம் புகார் அளிப்பதில் எந்தப் பயனும் இல்லை. மேலும் எங்களுக்கு பயமாக உள்ளது. புகார் செய்தால், எந்த வியாபாரமாக இருந்தாலும் அதை நாங்கள் கைவிட்டு விடும் சூழ்நிலை ஏற்படும், மேலும் பசு ரட்சகர்களின் பகையை சம்பதிக்க வேண்டி வரும்” என்றார்.
சரி. பசுக்களின் பாதுகாவலர்களுக்கு எதற்கு பணத்தை அழவேண்டும் என்று தோன்றலாம். அதற்கென்ன அவசியம் என்பதை ஆராய்ந்தால் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் செல்ல அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய விதிமுறைகளே காரணமாக இருப்பது புரிய வருகிறது. உண்மையில் பஞ்சாப்பில் முறையான வழியில் வணிகம் செழிக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் செழிப்பதோ பசுக்களின் காவலர்கள்தான். சரி, அப்படி என்னதான் விதிமுறைகள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஜனவரி 2015 முதல், பசு சேவை ஆணையம் பஞ்சாபில் அமைக்கப்பட்டது. துணை ஆணையர்கள் அலுவலகங்களில் மூன்று செயல்முறைப்படி கால்நடை வாகனப் போக்குவரத்துக்கு ஆட்சேபணை சான்றிதழை வழங்க வேண்டும். ஆனால் இதற்குமுன்பு, கால்நடை பராமரிப்புத்துறையிடம் இருந்து பெறும் ஆவணம் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள நடைமுறைப்படி ஆட்சேபணை சான்றிதழ் உடனடியாக கிடைக்கும் என முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உறுதிமொழியளித்தார். ஆனால் அது நடப்பதில்லை. அண்டை மாநிலமான ஹரியானாவை ஒப்பிடும்போது, உடனடி ஆட்சேபணை சான்றிதழைப் பெறுவது பஞ்சாபில் ஒரு நீண்டகால செயல்முறையாகவே உள்ளது. இதனால் பஞ்சாபில் பசு வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்சேபணை சான்றிதழ் இல்லாமல் பசுக்களை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காகவே காத்திருக்கும் வசூல்ராஜாக்களான பசு காவலர்களுக்கு பணத்தை கொட்டி அழ வேண்டியிருக்கிறது. ஆக வணிகர்களைத் தவிர பசு ரட்சகர்களே செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள்.
பஞ்சாபில் பெரிய கால்நடைகள் கொண்ட மூன்று மண்டிகள் உள்ளன. அவை, ஜக்ரான் மற்றும் கண்ணா மண்டி (லூதியானா), கில்லியன்வாலி (முக்ட்சர்) மற்றும் பதின்டா ஆகும். மூன்று லட்சம் கால்நடைகள் ஆண்டுதோறும் பஞ்சாபில் இருந்து வெளியே செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பசு வணிகர்கள் கூறும்போது, ' சிவசேனா' மற்றும் ' பசு ரட்சக அமைப்பின் தலைவர்கள்' லாபத்துடன் நடக்கும் வர்த்தக மண்டியை அடையாளம் காண அவர்களுடைய அமைப்பில் இருக்கும் ஆட்களை அனுப்பி தினமும் வணிகர்களை கண்காணிப்பார்கள். நாங்கள் செல்லும் இடம் மற்றும் நேரத்தை தெரிந்துகொண்டு அவர்களுடைய ஆட்களை அனுப்பி எங்களிடம் பணத்தை கறந்துவிடுவார்கள் ” என்றார்.
“நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனுபவித்த இன்னல்களை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சத்தீஸ்கருக்கு 18 மாடுகள் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு மாதமாக தொடர்ந்து நான் ஆட்சேபணை சான்றிதழைப் பெற டிசி அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆனால், கிடைக்கவில்லை. எனவே, நான் எந்தச் சான்றிதழும் இல்லாமல் பசுக்களை அனுப்ப முடிவெடுத்து அனுப்பிவிட்டேன். ஒரு நாள் என்னுடைய சரக்கு வாகனம், ஹரியானா சிர்சாவில் பசு ரட்சகர்களால் நிறுத்தப்பட்டது. வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை அவர்கள் மிகவும் மோசமாகத் தாக்கினர். மேலும், லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கறவைப் பசுக்களை, பசு மடத்துக்கு அனுப்பிவிட்டனர். பசுக்களை விடுவிக்கவும், மற்றும் ஊழியர்களை ஜாமீனில் எடுக்கவும் 50,000 ரூபாய் செலவு செய்துள்ளேன்” என்றார் பெயர் சொல்ல அஞ்சும் வர்த்தகர் ஒருவர்.
மேலும் அவர், “தங்களை பசுக்களின் காவலர்கள் எனப் பெருமையாக கூறிக் கொள்கிறார்கள் அவர்கள். ஆனால், பசுக்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. எனது நான்கு பசுக்கள், சில நாட்களுக்கு முன் ஒட்டுண்ணித் தொற்றால் பசு மடத்தில் இறந்துவிட்டது” என்றார்.
லூதியானா போலீஸ் கமிஷனர் ஜே எஸ் ஆலுக்கா கூறும்போது, “யாரும் பசு ரட்சகர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு என்னை அணுகவில்லை. சில வணிகர்கள் என்னிடம் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் எழுத்து வடிவில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளித்தால் நான் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கிறேன்” என்றார்.
மற்றொரு வணிகரான அமரீந்தர் சிங் கூறும்போது, “நாட்டின் வெளியில் இருந்து நான் பெறும் ஆர்டர்களும் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு 10,000 உயர்தர பசுக்களை நேபாளுக்கு அனுப்ப ஆர்டர் கொடுத்துள்ளனர். மற்றொரு ஆர்டர் வங்காள தேசத்துக்கு கொடுத்துள்ளனர். ஆர்டர்களை கொண்டு செல்ல அவர்களுடைய அதிகாரிகள் பஞ்சாப்புக்கு வந்தனர்.
ஒரு மாதமாக அவர்கள் டிசி அலுவலகத்துக்கு அலைந்தும் ஆட்சோபணை சான்றிதழைப் பெற முடியவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவர்கள் ஆர்டரை ரத்து செய்தனர். குஜராத், பெரிய பால் கூட்டுறவு இல்லமாக இருக்கிறது. பஞ்சாப் கால்நடைகளை வாங்குவதில் அமுல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு வணிகரும் வருடத்துக்கு 12-20 லட்சம் நஷ்டம் அடைந்தாலும்கூட, பெரும்பாலும் ஆர்டர்கள் குஜராத்தில் இருந்துதான் பெறப்படுகிறது. நாங்கள் நஷ்டமடைவதற்கு எங்களுக்கு ஆட்சேபணை சான்றிதழ் கிடைக்காததுதான்” என கூறினார்.
ஆனால் லூதியானா , கால்நடை பராமரிப்பின் பிரதிப் பணிப்பாளர் அஸ்வினி பரத்வாஜ் இதை மறுத்தார். “ நாங்கள் கால்நடை வர்த்தகர்களுக்கு ஆட்சேபணை சான்றிதழ் வழங்க ஒரு நாளுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை” என கூறினார்.
பஞ்சாப் சிவசேனா தலைவர் ராஜீவ் டாண்டன் கூறும்போது, “பசுக்களின் காவலர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நடப்பது உண்மைதான். வேறு கட்சியைச் சேர்ந்த சிலர் எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எங்கள் போட்டியாளர்கள் பசு சேவை என்ற பெயரில் பணம் பறிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். போலீஸ் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உண்மையான பசு சேவகர்கள் பால் பண்ணைகளில் சோதனை செய்தனர், அங்கு மாடுகள் பட்டினியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
மேலும் ஒரு வர்த்தகர் பேசும்போது, “பசு ரட்சகர்களுக்கு ஆட்சேபணை சான்றிதழ் என்றால் என்ன என்பதுகூடத் தெரியவில்லை. அவர்கள் ஆட்சேபணை சான்றிதழ் வைத்திருக்கும் சரக்கு வாகனத்தையும் இடைமறிக்கின்றனர். பெரும்பாலும் இதில் சீக்கிய ஓட்டுநர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான் தாக்கப்படுகிறார்கள். உரிமையாளர்கள் வாகனத்தில் இருந்தால் அந்த வாகனத்தை நிறுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஹரியானாவில், ஆட்சேபணை சான்றிதழைப் பெறுவதுகூட எளிமையானது. ஆனால், பசு ரட்சகர்களின் செல்வாக்கை பெறுவது எளிமையானது இல்லை”
பஞ்சாப் கால்நடை பராமரிப்புத்துறை துறை பிரதிப் பணிப்பாளர், டாக்டர் அசோக் மண்ட்ரூ கூறும்போது, “எங்கள் துறை வழங்கும் சான்றிதழில் விலங்குகள் நன்றாக உள்ளதா மற்றும் அது பாலுக்காக விற்கப்படுகிறதா போன்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும். பசு ரட்சகர்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதால், கால்நடை போக்குவரத்து வர்த்தகர்களுக்கு ஆபத்தாக முடியலாம்” என்றும் நாங்கள் கூறியிருக்கிறோம் என்றார்.
“பாட்டியாலா ராஜ்புரா, பசு ரட்சக தள் தலைவர் சதீஷ் குமார், 35 ஆண்டுகளாக பசுவின் பாதுகாப்புக்காக ”பசுக்களை நேசிப்போம்” என்ற குழுவை நடத்தி வருகிறார். இந்தப் பெயரில் தான் பெரும்பாலும் லூதியான -ராஜ்புரா டெல்லி நெடுஞ்சாலையில் வர்த்தகர்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்” என வர்த்தகர்கள் கூறினர்.
ஆரஞ்சு தலைப்பாகை, சிவப்புத் திலகம் மற்றும் ஒரு துப்பாக்கி ஏந்தியவர் குமார். இவர் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்களை காப்பாற்றியுள்ளாராம். "மாடு இறைச்சிக்கு" எதிராக 2,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளார். இவருடைய முயற்சியின் காரணமாக 22 மாநிலத்தில் பசு ரட்சகர்களின் தளம் உள்ளது. ‘இந்தியாவில் பசு வதை நிறுத்தப்படும் வரை நான் ஆயுதத்தைப் பிரயோகிப்பேன். நான் என் கோமாதாவுக்காக ஆயுதம் எடுப்பேன். இந்த பால் பண்ணை விவசாயிகள்தான் இதற்கு மூலகாரணம். ஏனெனில் அவர்கள்தான் பசுக்களை கைவிடுகின்றனர். பசுக்களை பாதுகாப்பதே என் நோக்கம். அதற்காகத்தான் கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார்” என்றார் குமார்.
ஆக, பசு வணிகர்களின் துயரம் ஒரு முடிவுக்கு வரப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
https://minnambalam.com/k/1471132830
வசூல் ராஜாக்களாக பசு காவலர்கள்! வசூல் ராஜாக்களாக பசு காவலர்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.