மதவெறியை முறியடிப்போம்! மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்! - திருமா


‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ இந்தக் கோட்பாட்டின் இலக்கை நோக்கி 25 ஆண்டுகள் கடந்து பயணிப்பது என்பது எளிதான ஒன்றல்ல. முழுமையான வெற்றியை ருசிக்கவில்லை, முழு அதிகாரத்தை அடையவில்லை. ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் எனும் ரதத்தின்மூலம் தனது பயணத்தில் வேகத்தைக் குறைக்காமல் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் தொல்.திருமாவளவன். 1962ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி இராமசாமி-பெரியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாகப் பிறந்த திருமாவளவனுக்கு இன்று. 54வது பிறந்த நாள். காலை 8.30 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மகனின் பிறந்த நாளுக்காக வந்திருந்த தாயார் பெரியம்மாள், மகன் திருமாவளவனை ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்தினார். 
அதன்பின், தொண்டர்கள் முன்னிலையில் திருமாவளவன் கேக் வெட்ட, அவரின் தாயார் முதல் கேக் துண்டை எடுத்து மகனின் வாயில் ஊட்ட, அவரும் பதிலுக்கு ஊட்ட அன்பில் நெகிழ்ந்தனர் அனைவரும். திரளாக திரண்ட விடுதலைச் சிறுத்தையினர் திருமாவளவனுக்கு பழங்கள் பரிசளித்தனர். சிலர் புத்தகங்கள் கொடுக்க, திருமாவளவன் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சி. திரண்டிருந்த தொண்டர்களிடம், ‘அண்மையில் குஜராத் மாநிலம் உனா எனும் நகருக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் இறந்துகிடந்த பசுவின் மாட்டுத்தோலை உரித்தார்கள் என்னும் காரணத்தைச் சொல்லி தலித்துகள் நால்வரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி அதைப் படமாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பரப்பி, தேசிய அளவில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது ‘புதிய கல்விக் கொள்கை’ என்னும் பெயரில், கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ‘ஒரே தேசம்; ஒரே கல்வி’ என்னும் அடிப்படையில் கல்விக் கொள்கையை வரையறுத்து, இந்திய தேசத்தின் பன்முக பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் முயற்சியில் சங்பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. சங்பரிவார் கும்பல் தமது காவிக் கொள்கையை இந்திய அரசின் கொள்கையாகத் திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்துத்துவ மதவெறி அரசியலை உயர்த்திப்பிடிக்கும் இத்தகையப் போக்கு இந்திய அரசின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை அடியோடு தகர்க்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.
இந்திய ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு நேரெதிரான வகையில் வெளிப்படையாக இந்துத்துவ மதவெறி அரசியலை நிலைநாட்டத் துடிக்கின்றனர். இது வெகுமக்களை அச்சுறுத்தும் கொடிய பயங்கரவாதப் போக்காகும்.
இந்நிலையில், உழைக்கும் மனிதனைவிடவும் செத்த பசுமாட்டை புனிதமாகக் கருதும் இந்துத்துவ கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் பயங்கரவாதப்போக்கை முறியடிப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக உள்ளது. இதை உணர்ந்து நாம் இன்று ஆகஸ்டு 17, 2016 தலைநகர் சென்னையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒருங்கிணைத்துள்ளோம். அனைவரும் திரளாகப் பங்கேற்று மதவெறியை முறியடிப்போம்! மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்!’ என்று, இன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்புவிடுத்தார் திருமாவளவன்.
மதவெறியை முறியடிப்போம்! மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்! - திருமா மதவெறியை முறியடிப்போம்! மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்! - திருமா Reviewed by நமதூர் செய்திகள் on 04:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.