யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!


இலங்கை யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து புதன்கிழமை காலை இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றன. இதுகுறித்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள்…
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தா.செ.மணி:
சென்ற 2016 அக்டோபர் 21 அதிகாலை யாழ்ப்பாணப் பலகலைக்கழக மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொலையுண்டிருப்பது எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய அந்த இரு மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு முழங்காலுக்குக் கீழேயும் சுட்டிருக்கலாமே? என்று அவர் கேட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு விபத்து என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா காட்ட முற்பட்டதை இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் இலகிறு வீரசேகரா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழுயிர்களைப் பறித்த சிங்களப் பேரினவாதக் கொலைவெறி இன்னும் தணியவில்லை என்பதையே இந்த யாழ் மாணவர்கள் படுகொலையும் உணர்த்தி நிற்கிறது. இந்த உண்மையை சர்வதேசச் சமுதாயமும் கணக்கில் கொண்டு தமிழீழ மக்களுக்கு நீதி கிட்டச் செய்ய உறுதியாகவும் உடனடியாகவும் முயல வேண்டும் என வலியுறுத்துகின்றோம். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகின்றோம். தமிழீழத்திலும் உலகெங்கிலும் யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து நடைபெறும் கிளர்ச்சிகளோடு எங்கள் தோழமையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசும் சிறிலங்காவில் தொடரும் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்க வலியுறுத்துகிறோம். இதைக் கண்டித்து அக்டோபர் 26 ஆம் நாள் புதன்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக நடக்கவிருக்கிறது. இப்போராட்டத்தில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ.,  திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, குமுக விடுதலைத் தொழிலாளர், அம்பேத்கர் சிறுத்தைகள், தமிழர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன.
இந்தப் போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர்கள், மனித உரிமையாளர்கள், சனநாயக ஆற்றல்கள்  பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை சிங்கள காவல்துறை சுட்டுப் படுகொலை செய்த பேரினவாத அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ் அமைப்புகள் இணைந்து கூட்டாக நாளை புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில் முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளன. இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை சிங்கள காவல்துறையினர் சுட்டுப் படுகொலை செய்த நிகழ்வு உலகத் தமிழினத்தை பேரதிர்ச்சிக்கும் பெரும் கொந்தளிப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த படுபாதக செயலை உலகத் தமிழர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
தமிழீழத்தின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் மாணவர்களும் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் நேற்று ஒன்றுதிரண்டு நீதி கோரி மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று தமிழீழத்தின் வடக்கு பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் மற்றும் வவுனியாவில் முழு அடைப்புப் போராட்டத்தின் மூலம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைக்கான குரல் ஓய்ந்து போய்விடவில்லை என்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய அடக்குமுறைகளை சிங்கள காவல்துறை ஏவிவிடுகிறது. அண்மையில் தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் தமிழர்களை அச்சுறுத்தும் ராணுவ பயிற்சியை நடத்தியது.
இப்போது யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்களை நரவேட்டையாடியுள்ளது சிங்களம். தொடரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறையில் இருந்து தமிழீழ தேசம் விடுதலை பெற வேண்டியதின் அவசியத்தை இத்தகைய இனவெறிப் படுகொலைகள் உறுதி செய்கின்றன.
சிங்களத்தின் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் தாய்த் தமிழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமையன்று முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளன.
இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், படைப்பாளிகள் அனைவரும் இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் அணிதிரண்டு வர வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
தமிழினத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்போராட்டத்தி ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து தமிழராய் திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கிறேன்.
தமிழீழத் தமிழர்களை அச்சுறுத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிடும் சிங்கள பேரினவாத அரசை இந்திய மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
நாம்தமிழர் கட்சி:
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நாளை 26.10.2016 புதன்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு  மாபெரும் ஆர்ப்பாட்டம்நடைபெறவுள்ளது.
முகப்புப் படம்: இலங்கையில் தமிழ் மாணவர்கள் நடத்திய போராட்டம்
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்! யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக் கொலை: சென்னையில் தமிழ் அமைப்புகள் இணைந்து இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.