ஒரே தேர்தல் - தேசியக்கட்சிகளுக்கு சாதகம்: எஸ்.ஒய்.குரேஷி!


‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கோஷத்தை முன்வைத்து பாஜக தீவிரமாக பணி செய்ய தொடங்கியுள்ளது. நாடு முழுக்க நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மோடி முதன்முதலாக வைத்தபோது, அதை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார். இதையொட்டி ஒரே தேர்தல் தொடர்பான விவாதங்கள் நடந்தது. பிராந்தியக் கட்சிகளை செல்வாக்கிழக்க வைத்து தேசியக்கட்சிகளை மட்டும் பலப்படுத்தும் முயற்சி என இது பார்க்கப்பட்ட நிலையில், ‘ஒன்றுசேர்த்து தேர்தல்கள் - சாதகங்களும், பாதகங்களும்’ என்ற தலைப்பில் ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு டெல்லியில் புதன்கிழமை விவாதத்தை நடத்தியது. அப்போது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியதாவது:
“பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றும் இந்தியாவில் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒருவகையில் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. தேர்தலில் சிறிய கட்சிகள் போட்டியிடுவது ஜனநாயகத்தின் வெளிப்பாடாக உள்ளது. அதுவே நல்ல ஆட்சியாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாகவும் அமைகிறது. யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஆட்சேபம் தெரிவித்தாலும் சரி, பெரிய அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கான ஆதரவு அலை மாநிலத் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், மக்களவைக்கும், பேரவைக்கும் ஒருசேர தேர்தல் நடத்தினால் தேசியக்கட்சிகள் மட்டுமே பலனடையும்; சிறிய கட்சிகளின் தலைவிதி கடினமாக இருக்கும். எனவே, சிறிய கட்சிகளின் பங்களிப்பை சிறுமைப்படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் நடைமுறைகளை திட்டமிடுதலிலும், ஒருங்கிணைப்பதிலும் சுமையை அதிகரிக்கும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்படும். இதனால் அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்” என்றார் குரேஷி. இந்த விவாதத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதை ஆதரித்தனர்.
ஒரே தேர்தல் - தேசியக்கட்சிகளுக்கு சாதகம்: எஸ்.ஒய்.குரேஷி! ஒரே தேர்தல் - தேசியக்கட்சிகளுக்கு சாதகம்: எஸ்.ஒய்.குரேஷி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.