பொது சிவில் சட்டம் - சிறு விளக்கம்



1. பொது சிவில் சட்டம் என்றால் என்ன? 
பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது. 

2. தனியார் சிவில் சட்டம் என்றால் என்ன? 
மக்கள் தமக்கு இடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய மதம் சம்மந்தப்பட்ட மிகச் சில விஷயங்களை மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் என வழங்கப்படுகிறது. 

3. முஸ்லிம் தனியார் சட்டம் எப்போது முதல் உள்ளது? 
மொகலாயர்கள் ஆட்சி காலம் முதலே இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைப்படி செயல்படுவதற்கு தனியாக சட்டங்கள்  இருந்திருக்கின்றன. 1862 ல் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் ஐபிசி என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். பின்னர் 1937 ல் முஸ்லிம் தனியார் சட்டம் அமலுக்கு வந்தது. 1939 ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இதுதான் இன்று வரை நீடித்து வருகிறது. 

4. பல சமூகங்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சட்டம் இருப்பது சரியா? 
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சட்டங்கள் இருப்பதாக நினைப்பது தவறு. முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று கிரிமினல் சட்டம் மற்றொன்று சிவில் சட்டம். இதில் கிரிமினல் சட்டம் முழுமையாக (100%) எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் கொலை செய்தாலும், ஒரு இந்து கொலை செய்தாலும் வேறு எவர் கொலை செய்தாலும் அவர்களுக்கு சட்டத்தின்படி ஒரே தண்டனைதான். இதில் எவருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. 

கொலை மட்டுமல்ல கிரிமினல் சட்டத்தின்கீழ் கருதப்படும் அனைத்து செயல்களுக்கும் தண்டனை எல்லோருக்கும் பொதுவானதுதான். சிவில் சட்டத்திலும் 80% மேலாக எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றது. உதாரணத்திற்கு கடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சிவில் சட்டத்தின்கீழ் வருகின்றன. அதில் முஸ்லிம்கள் தங்களுக்கு என்று தனிச்சட்டம் வைத்துக்கொள்ளவில்லை. கடன் பிரச்சனையில் இந்தியாவில் உள்ள பொதுவான சட்டமே முஸ்லிம்களுக்கும். இதுபோல் பல சிவில் சட்டங்களும் எல்லோருக்கும் பொதுவாகவே உள்ளது. 

குறிப்பிட்ட மிகச் சில விஷயங்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு அவர்களின் சமயம் சார்ந்த முறையில் தீர்த்துக் கொள்வதற்கு தனியாக சிவில் சட்டம் அரசியல் சாசனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும்கூட முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி தனிச் சலுகை வழங்கப்படவில்லை. இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், புத்தர்கள், பார்சிகள், யஹோதிகள் என பல சமூகங்களுக்கும் அவர்களின் நம்பிக்கையை பின்பற்றும் வகையில் அவர்களுக்கும் தனிச்சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு மட்டுமே தனி சிவில் சட்டம் இருப்பதாக மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. அதில் எள்ளளவும் உண்மை இல்லை. 

5. எந்தந்த விஷயங்களுக்காக முஸ்லிம்கள் தனிச்சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்? 
திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசுரிமை, சொத்து மற்றும் பரம்பரை சொத்தை பங்கீடு செய்தல், குழந்தைகளை தத்து எடுத்தல், வக்ப் நிலங்கள் போன்ற ஒருசில விஷயங்கள் முஸ்லிம் தனியார் சிவில் சட்டத்தின்கீழ் வருகின்றன. 

6. இந்திய அரசியல் அரசிலமைப்பு சட்டம் பொது சிவில் சட்டம் குறித்து என்ன கூறுகிறது? 
அரசியல் சாசனத்தின் 44 வது பிரிவு பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது. "நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்" என்கிறது. அது 'கொள்கை விளக்கம்' என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது. இது கட்டாயம் என்று சொல்லவில்லை. இது ஒரு ஆலோசனை மட்டுமே. 

7. பொது சிவில் சட்டம் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
"கொள்கை விளக்கம்" என்ற தலைப்பு மற்ற தலைப்புகளிலிருந்து வேறுபட்டது. மற்ற தலைப்புகளில் உள்ளதை செயல்படுத்தாவிட்டால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை செயல்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட முடியாது.  இந்த பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37 வது பிரிவு கூறுகிறது. 

8. இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு இருக்கின்றனவே? 
ஆம். உண்மைதான். 1995 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் "அனைத்து மதத்தவர்களுக்கு பொது சிவில் சட்டம் ஒன்றை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும்" என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது. 

அதேபோல் 2003 ல் "அரசியல்  நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 44 க்கு இன்றும் ஊக்கம் தராதது மிகவும் வருத்தத்திற்குரியது. நாடாளுமன்றம் இந்த நாட்டில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வர இன்னும் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை. ஒரு பொது சிவில் சட்டம் கொள்கைகளின் அடிப்படையில் எழும் முரண்பாடுகளை அப்புறப்படுத்தி தேசிய ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கும் பெரிதும் உதவி செய்யும்" என்று 23.07.2003 நடைபெற்ற ஒரு வழக்கில் தலைமை நீதிபதி வி.என்.ஹாரே இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார். ஆனால் இது தவறான அணுகுமுறை. அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயல். ஏனென்றால் கொள்கை விளக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது. 

9. நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது சரி, மத்திய அரசு கொண்டு வரலாம்தானே? 
"அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பொது சிவில் சட்டத்தை அரசு கட்டாயம் கொண்டு வர வேண்டும்" என்று சிலர் பேசுகிறார்கள். ஒரு விஷயத்தை விளங்கி கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதன் முதல் 35 பிரிவுகளை கட்டாயமாக்கினார். கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டியவற்றை அதில் கொண்டு வந்தார். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியாமல் 36 முதல் 51  வரை உள்ள பிரிவுகளை "வழிகாட்டும் கொள்கை"களாக மாற்றினார். பொது சிவில் சட்டம் குறித்து பேசும் பிரிவு 44  இதில்தான் வருகிறது. அதனால் இதனை கட்டாயம்  கொண்டுவந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. 

பிரிவு 36 முதல் 51 வரை 16 பிரிவுகளில் பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளையெல்லாம் நிறைவேற்றாமல் பிரிவு 44 க்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள். இதிலிருந்தே அவர்களின் நோக்கம் தெரிகின்றதல்லவா! 

10. பிரிவு 36 - 51 என்னன்ன கூறுகிறது? 
எதை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று கூறுகிறீர்கள்? "கொள்கை விளக்கம்" பகுதியில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. உதாரணத்திற்கு சில மட்டும்.  

பிரிவி 41 : 
"அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும். சக்திமீறிய வேலையாக அது இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. ஆனால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற நிலை இன்று வரை உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வேலையின்மை  அதிகரித்துதான் வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதை இதுவரை எந்த அரசும் கட்டாயமாக்க முன்வரவில்லை. 

பிரிவு 45 :
"14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும்" என்று சொல்கிறது. ஆனால் முதல் பத்து ஆண்டுகளில் அல்ல கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவருவதற்கே 60 ஆண்டுகளை அரசு கடத்திவிட்டது. ஒப்புக்கு சப்பாக இருக்கும் அந்த சட்டத்தையும் வலுவிழக்க மோடி அரசு முயன்று வருகிறது. 

பிரிவு 46 : 
"தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கல்வி, பொருளாதார மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று சொல்கிறது. இதிலும் இதுவரை இருந்த அரசுகள்  கவலைப்படவில்லை.  அவர்களின் வாழ்க்கை தரம் கீழான திசையிலேயே சென்று கொண்டு இருக்கிறது. 

பிரிவு 47 : 
"மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்று கூறுகிறது. 

இது குறித்து எல்லா அரசுகளும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. மதுவிலக்கை கொண்டு வர எந்த அரசுகளும்  முயற்சி எடுக்கவில்லை. மாறாக மதுவின் மூலம் வரும் வருமானதியே பல அரசுகளும் நம்பியிருக்கின்றன. இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தாத அரசு பிரிவு 44 ல் மட்டும் கவனம் செலுத்துவது தவறுதானே. 

11. அரசியல் சாசனத்தில் வலியுறுத்திய விஷயத்தை எதிர்ப்பது சரியா?
அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் நடைமுறையில் செயல்படுத்திட முடியாது. காரணம் பலதரப்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள். ஒருவருக்கு  ஆதரவானது மற்றவருக்கு எதிரானதாககூட இருக்கும். 

உதாரணத்திற்கு : 
அரசியல் சாசனத்தில் 343 (1) பிரிவில் "மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்திதான் இருக்க வேண்டும்" என்று திட்டவட்டமாக சொல்கிறது. அதற்காக நாம் இந்தி தேசிய  மொழி ஆக்கப்படுவதை ஆதரிக்க முடியுமா? அதுபோல் தான் இதுவும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசியல் சாசனம் வழங்கிய மற்றொரு உரிமைக்கு எதிரானதாக அமையும். குறிப்பாக "விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம். ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம்" என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. இந்த உரிமைக்கு எதிராகவே பொது சிவில் சட்டம் அமையும்.

12. அரசியல் சாசனம் முஸ்லிம் அல்லாத வேறு சமூகத்திற்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கிறதா? 
கண்டிப்பாக. பல சமூகங்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் பல விஷயங்களில் சலுகை அளித்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் : 

அரசியல் சாசனத்தில் 19 (1) (ஆ) பிரிவில் "ஆயுதங்கள் இன்றி அமைதியாக கூடுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது" என்கிறது. ஆனால் சீக்கியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது. "குருவாள்களை வைத்துக்கொண்டு சீக்கியர்கள் மட்டும் நடமாடலாம்; கூடலாம்" என்று இந்த 25 வது பிரிவு விளக்கம் கூறுகிறது. 

அதேபோல் காவல்துறை, இராணுவத்தில் எந்த சமூகங்களாக இருந்தாலும் ஒரே மாதிரி சீருடைதான். ஆனால் சீக்கியர்களுக்கு மட்டும் அவர்களின் மத வழக்கப்படி தலைப்பாகை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

"பொது இடங்களில் நிர்வாணக் காட்சி தருவது சட்டப்படி குற்றம்". அப்படி யாராவது நடந்து கொண்டால் அவர்களின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு நிர்வாணமாக வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

13. பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு எதிர்ப்பை மீறி கொண்டுவந்தால்? 
கடுமையான எதிர்ப்பு இருப்பதால் அரசு கொண்டு வர தயங்கும் என்றே கருதுகிறேன். அப்படி எதிர்ப்பை மீறி கொண்டு வந்தாலும் அது ஏட்டளவில் மட்டுமே இருக்கும். நடைமுறையில் முஸ்லிம்கள் தங்களின் சமயத்தின் வழிபடியே தொடர்ந்து செயல்படுவார்கள். ஷரியத் என்கிற அந்த சட்டத்தை முஸ்லிம்கள் தங்களின் உயிருக்குமேலாக நினைக்கிறார்கள். அதனை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுவிட மாட்டார்கள். இதில் அரசுதான் தோற்று போகும். 

- வி.களத்தூர் எம்.பாரூக் 

(பொது சிவில் சட்டம் தொடர்பாக கட்டுரையாளரின் முந்தைய கட்டுரையை வாசிக்க : http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31704-2016-10-24-05-58-54)
பொது சிவில் சட்டம் - சிறு விளக்கம் பொது சிவில் சட்டம் - சிறு விளக்கம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.