வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் பலன் உண்டா?

சிறப்புக் கட்டுரை: வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் பலன் உண்டா?

ஷர்மிளா ருத்ரப்பா

அமெரிக்காவில் வாடகைத்தாய்க்கு ஏற்படும் அதிக செலவின் காரணமாக, மலிவான வேறு வழிகளை நோக்கிப் பல பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளை நோக்கி வாடகைத்தாய்க்காகச் (Surrogacy mother) செல்கின்றனர். உலக அளவில், வாடகைத்தாய் வர்த்தகம் (Surrogacy trade) மோசடிகள் நிறைந்ததாக உள்ளது.
2008 முதல் நான் வாடகைத்தாய் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கும் இந்தியாவில், அரசாங்கம் இது குறித்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது. ஒருபாலின ஜோடிகள் (Gay Couples) வணிக ரீதியாக வாடகைத்தாயைப் பயன்படுத்த 2012இல் தடை விதிக்கப்பட்டது. மார்ச் 2017இல், இந்தத் தடை அனைவருக்குமாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதியரின் குடும்பத்தைச் சார்ந்த ஏதாவது ஒரு பெண், பணம் வாங்காமல் தனது குடும்பத்தினருக்காகக் குழந்தை பெற்றுக் கொடுக்கும், "altruistic surrogacy" என்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வணிக ரீதியான வாடகைத்தாய் முறையின் மீது போடப்படும் தடையால், அப்படிச் செயல்படும் பெண்களுக்கு என்ன தாக்கம் ஏற்படுகிறது?
உயிரியல் நெறிகளை முன்வைப்பவர்களும் (Bioethicists) பெண்ணியவாதிகளும் வணிகரீதியான வாடகைத்தாய் முறையின் மீதான தடைகளை வரவேற்கின்றனர். பெண்களின் இனப்பெருக்கத் திறன்களின் அடிப்படையில் வியாபாரத்தை உருவாக்குவது நியாயமான செயலில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தியாவில் வாடகைத்தாய் வியாபாரம் வாடிக்கையாளர்களின் தேவைகளை மையப்படுத்தியே அமைந்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகள் இந்தத் துறையில் பிரபலமானதற்கான முக்கியமான காரணம், வாடகைத் தாய்மார்களுக்கு மிகவும் குறைவாகப் பணம் கொடுக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப குழந்தை பிறக்க வேண்டிய காலத்துக்கு முன்பே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறக்க வைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பெற்றுத் தந்தவர்கள்பால், வாடிக்கையாளர்களுக்கு எந்த உணர்வுபூர்வமான தொடர்பும் இல்லாமல் இருப்பதற்காக, வாடிக்கையாளர்களுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கும் இடையே ஒரு சுவரை எழுப்பிவிடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும்போது, எந்தத் தொடர்பும் இல்லாமல் செல்வதற்கு வழி வகுக்கிறது.
பல உயிரியல் சார் நெறியாளர்கள், கர்ப்பம் தரிப்பதை ஒரு சேவையாக விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது மனித உடலின் பாகங்கள் மற்றும் உயிரை விலைக்கு விற்பது போன்றதுதான் என்றும் கருதுகின்றனர். வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் நடைமுறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையைச் சீரழிவுக்குத் தள்ளுகிறது. வாடகைத்தாய்க்குப் பணம் செலுத்துதலைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பரிசுகள் அளிப்பது கூடுதல் நெறிமுறை உள்ள நடைமுறையாகப் பார்க்கப்படுகிறன.
இந்த வாதங்களுக்கு மதிப்பு இருக்கிறது. கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்விதமான வாடகைத்தாய் முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற நாடுகளைப் போல, நம் நாட்டில், எத்தனை மருத்துவமனைகள் இம்முறையைக் கையாண்டிருக்கின்றன, எத்தனை பெண்கள், தாய்மார்கள் இதில் பங்கேற்கின்றனர் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரே தகவல், 400 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை வருமானம் பெற்றுக்கொண்டிருந்த இத்துறை, சட்டரீதியிலான தடைக்குப் பிறகு சற்று சரிந்துள்ளது என்பதுதான். எனினும், குழந்தைப் பேறு வியாபாரம், இந்த நடவடிக்கைகளால் நின்று போய்விடவில்லை. அவர்களுக்கு மேலும் ஆபத்து விளைவிக்கும் விதமாக, குழந்தைப் பேறு மருத்துவமனைகளால், வாடகைத் தாய்மார்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டிக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
உதாரணமாக, 2012இல் ஓரின ஜோடிகள், வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டபோது, டெல்லியில் உள்ள குழந்தைப் பேறு நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள பல ஓரின ஜோடிகளுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டனர். அயல்நாட்டில் இருந்தவர்களின் விந்து உறைய வைக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. அது இங்குள்ள பெண்களின் கருமுட்டைகளுடன் சேர்க்கப்பட்டு, இந்திய வாடகைத்தாய் மூலமாகக் குழந்தையாகப் பெற்றெடுக்கப்பட்டது. சட்டரீதியிலான தடையைச் சமாளிப்பதற்காக, இந்த பெண்கள் நேபாளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே, குழந்தைகள் பிறந்ததும், குழந்தைகளை வாங்கிக்கொள்ளப் பெற்றோர்கள் வந்தனர்.
டெல்லி மற்றும் காத்மண்டுவுக்கு இடையேயான இந்த வர்த்தகப் பாதை, ஏப்ரல் 25, 2015இல் நேபாளைத் தாக்கிய நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதில் 8,000 பேர் உயிரிழந்தனர், 2,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தங்கள் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளை அந்த அந்த அரசு காப்பாற்றிக்கொண்டாலும், அத்தாய்மார்களின் நிலை இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
செப்டம்பர் 2015இல், மும்பையில் உள்ள குழந்தைப் பேறு நிபுணரிடம் பேசியபோதுதான் இது குறித்து அதிகம் தெரிந்துகொண்டேன். அந்த நிபுணர் (வேண்டுகோளின்பேரில் பெயர் தவிர்க்கப்படுகிறது), வாடகைத் தாய்மார்களை கென்யாவிலிருந்து மும்பைக்கு வரவழைக்கிறார். செயற்கைக் கருவுறும் முறை மூலமாக அவர்கள் கருவுறுகிறார்கள். 24 வாரங்கள் முடிந்ததும், அப்பெண்கள் இந்தியாவிலிருந்து நைரோபிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த மருத்துவர், இந்திய எல்லைக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாததால் அவர் சட்டத்தை மீறவில்லை. மேலும், கென்யாவில் இருந்து மருத்துவத்துக்காக வந்தவர்களுக்கு அவர் சிகிச்சை மட்டுமே அளித்துள்ளார்.
வாடகைத்தாய் வணிகம் தடை செய்யப்பட்டுள்ள கம்போடியாவில், இதே போன்ற நிலையை அரசு கண்காணித்து வருகிறது. பெனோம் பென் (Phnom Penh) நாட்டிலிருந்து, வாடகைத்தாய்கள் தாய்லாந்தின் பாங்காக்குக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் குழந்தையைப் பிரசவிக்கின்றனர். தாய்லாந்து அரசும் வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையைத் தடைசெய்துள்ளது. ஆனால், மருத்துவமனைகளில், வாடகைத் தாய்மார்களையும், நிஜத் தாய்மார்களையும் பிரித்தறிவது கடினமாக உள்ளது. கம்போடிய வாடகைத் தாய்மார்கள், லாஓஸ் நகரத்துக்கும் அனுப்பப்படுகின்றனர். அங்கு இவ்விஷயத்தில் எந்தத் தடையும் இல்லை. தாய்லாந்தில் வாடகைத்தாய் முறைக்குத் தடை விதிக்கப்படும் முன்பு அங்கு வேலை செய்த மருத்துவர்கள் லாஓஸ் நகரில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், பெண்களின் நிலை முன்பைவிட மிகவும் மோசமானதாக இருக்கிறது. தங்களை அழைத்து வந்த நபர்களை மட்டுமே அவர்கள் சார்ந்திருக்கிறார்கள். மொழி தெரியாத, கலாசாரமும் புரியாத நாடுகளில் அவர்கள் தனித்து விடப்படுகின்றனர். அவர்களை அழைத்துவந்த நிறுவனம் அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதியும் உணவும் அளிக்கிறது. அவர்கள்தான் பண விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எனவே, பெண்களுக்கு அந்த ஒப்பந்தத்தை முறிக்கவோ, நினைத்ததும் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்போ அமைவதில்லை. அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதோடு, வணிக ரீதியிலான ஏமாற்று வேலைகளையோ, முறைகேடுகளையோ எதிர்த்துக் கேள்வி கேட்க உரிமையற்றவர்கள் ஆகின்றனர்.
குறிப்பிட்ட நாடுகள் சார்ந்த தடைகள், ஏழை நாடுகளில் இருக்கும் பெண்களைக் காப்பாற்ற எதுவும் செய்வதில்லை. அதற்குப் பதிலாக, இப்பெண்களின் நிலையை மிகவும் மோசமாக மாற்றியுள்ளன. இந்த அரசுகள் வணிக ரீதியிலான வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட தடைகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
உலகளாவிய வாடகைத்தாய் முறையைக் கையாளுவதற்கு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தையும் நல்ல வழிகள். இத்தகைய சர்வதேசச் சட்டம், பெற்றோர், குழந்தைகளின் உரிமைகளையும், வாடகைத் தாய்மார்களின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். ஒரு பாலினத்தவருக்கான வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மாறுபட்ட சட்டங்கள், இப்படியான சர்வதேச நடைமுறைகளைக் கொண்டுவரத் தடையாக உள்ளன.
இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைச் சட்டபூர்வமாக்க வேண்டும். ஆனால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தடை செய்வதற்குப் பதிலாக, வாடகைத் தாய்மார்களின் மரியாதையைக் காக்கும் விதமாகச் சட்டங்களை இயற்ற வேண்டும். வாடகைத் தாய்மார்கள் முழு மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். விருப்பமில்லாத மருத்துவ முறைகளிலிருந்து வெளிவரவும், சிசேரியனுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கும், குழந்தை பெற்றதும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கான உரிமையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
வாடகைத் தாய்மார்களின் உணர்ச்சிகள், உடல் மற்றும் அறிவு ஆகியவற்றை மதிப்பதன் மூலம் மட்டுமே வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியும்.
நன்றி: https://theconversation.com/ india-outlawed-commercial- surrogacy-clinics-are-finding- loopholes-81784
தமிழில்: ந.ஆசிபா பாத்திமா பாவா
வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் பலன் உண்டா? வாடகைத்தாய் வர்த்தகத்தைத் தடைசெய்வதால் பலன் உண்டா? Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.