3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

காவிரி மேலாண்மை வாரியம், பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென அதிமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எவ்வித ஆலோசனையுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமும் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து மக்களவை கூடிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களை அதிமுக உறுப்பினர்கள் கையிலெடுத்தனர். தந்தை பெரியார் சிலைகள் பாஜகவினரால் உடைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனக்கூறிய அதிமுக எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அவையின் நடுப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், நீரவ் மோடி விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையை ஒருமணி நேரம் ஒத்திவைத்தார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூட்டினார்.
இதே பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை தொடங்கியதும் நாடு முழுவதும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வருத்தம் தெரிவித்தார். அதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.க்களும், சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கி பிரச்சினையை எழுப்பி மற்ற கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது மற்றும் ஹெச்.ராஜாவின் கருத்து தொடர்பாக விவாதிப்பதற்காக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். உறுப்பினர்கள் அமளியால் அவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நடத்திய கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது
3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! 3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.