50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி?

சிறப்புக் கட்டுரை: 50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி?

நேர்காணல்: விஜூ கிருஷ்ணன்

சந்திப்பு: சந்திரகாந்த் விஸ்வநாத்
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள் எழுச்சியின் பின்னணியில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர் கேரளாவைச் சேர்ந்த விஜூ கிருஷ்ணன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அம்மாநிலத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சியே இந்தப் பேரணிக்கு அடிப்படை என்கிறார் இவர்.
44 வயதாகும் விஜூ கிருஷ்ணன், விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகப் போராடுவதைத் தன் மனதுக்கு நெருக்கமானதாக நினைப்பவர். கேரளாவின் மலபார் பகுதியில் முதன்முதலாக நிகழ்ந்த விவசாயிகள் எழுச்சியைப் பற்றிய தகவல்களைக் கதைகளாகக் கேட்டு வளர்ந்தவர். கண்ணூர் மாவட்டத்திலுள்ள கரிவெல்லூரில் பிறந்தவர். தற்போது, இவர் அகில இந்திய கிஸான் (விவசாயிகள்) சபையின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
1946ஆம் ஆண்டு இதே கரிவெல்லூரில்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறையையும் எதிர்த்து விவசாயிகள் போராடினர். கடுமையான பஞ்சம் நிலவியபோது, தங்களிடமிருந்த நெல்லைப் பிடுங்கிய பண்ணையார்களோடு சண்டையிட்டனர்.
கரிவெல்லூர் போராட்டம் நிகழ்ந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மனதுக்கு நெருக்கமான கொள்கைகளுடன் ஒன்றிணைந்துள்ளார் விஜூ கிருஷ்ணன். மகாராஷ்டிராவின் 50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்து, தங்களது உரிமைக் குரலை எழுப்ப அவர்களைச் சம்மதிக்க வைத்துள்ளார்.
கடந்த வாரம், நாசிக்கில் தொடங்கி மும்பையில் முடிந்த விவசாயிகள் பேரணியை நடத்திய அகில இந்திய கிஸான் சபையின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் என்று சொன்னால், தெளிவாகப் புரியும். இது, இந்தியாவிலேயே மிகப் பெரிய விவசாயிகள் அமைப்பு என்று கூறப்படுகிறது.
விஜூ, இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய மாணவர் கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். இந்திய விவசாயப் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அதன் பின்பு பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் முதுகலைப்பிரிவு தலைவராகப் பணியாற்றினார். பல ஆண்டுகள் கல்லூரியில் வேலை செய்த பின்னர், அந்த வேலையைத் துறந்து முழுநேர சமூகச் செயற்பாட்டாளராக மாறினார். தற்போதைய இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களில் மிக இளையவர் விஜூதான்.
ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக இவர் இருந்தபோது, மாணவர் விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே இருந்த ஹோட்டலில் மாணவர்கள் தங்கியதற்கான வாடகையையும், அவர்களுக்கான போக்குவரத்துச் செலவையும் தந்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம்.
இத்தகைய பின்னணிகொண்ட, மகாராஷ்டிராவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் எழுச்சியை ஒருங்கிணைத்த விஜூ கிருஷ்ணன், ஆசாத் மைதானத்திலிருந்து நம்மிடம் நேரடியாகப் பேசினார்.
கேள்வி: பேரணி நடந்தபோது, ’நீங்கள் மலர்களை வெட்டலாம்; ஆனால், வசந்தத்தை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது’ என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் ட்விட்டர் கருத்துகளில் ஒன்றாக இருந்தது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: விவசாயத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சி இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது நிகழ்ந்து வருகிறது. மகாராஷ்டிராவைத் தவிர்த்து, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா என்று பல பகுதிகளில் இது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பும், விவசாயப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், இந்தப் போராட்டத்தில் 50,000 விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நடந்த போராட்டத்தில் இதைவிட அதிகமான விவசாயிகள் கலந்துகொண்டதாக நினைக்கிறேன். இப்போதிருந்தாவது, விவசாயிகளின் எழுச்சிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன். இது எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளித்துள்ளதோடு, அகில இந்திய கிஸான் சபையின் பலத்தையும் வெளிக்காட்டியுள்ளது.
கேள்வி: திரிபுரா மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்த விவசாயிகள் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியாக எடுத்துக்கொள்ள முடியுமா?
பதில்: விவசாயிகள் உயிர் வாழ்வதற்கான போராட்டம் இது. பாஜக பின்பற்றிவரும் கொள்கைகளை எதிர்ப்பதினால், அந்தக் கட்சிக்கு எதிராக இந்த எழுச்சி நடந்துள்ளதாக அரசியல் சாயம் பூசப்படுகிறது. எது எப்படியானாலும், இதைத் தேர்தல் அரசியலோடு தொடர்புபடுத்த வேண்டாம். ஆனால், பாஜகவை வீழ்த்த நினைக்கும் சக்திகளுக்கு, இந்த எழுச்சி பெரும் பலம் கொடுத்துள்ளது என்பது உண்மை.
கேள்வி: பாஜகவுக்கு எதிரான சக்திகள் என்று சொல்லும்போது, அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்துகொள்கிறது. விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் பற்றி முழக்கமிடும்போது, காங்கிரஸ் கட்சியை எப்படி விடுவிக்க முடியும்?
பதில்: பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே, விவசாயிகளுக்கு எதிரான தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவைதான். ஆனால், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வகுப்புவாதக் கொள்கைகளை உட்புகுத்துகிறது பாஜக. எங்களது போராட்டங்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல; காங்கிரஸ் ஆட்சியிலுள்ள கர்நாடகாவிலும் நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம்.
கேள்வி: இந்த நீண்ட பேரணியில் மாவோயிஸ்ட்களும் பங்கேற்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் ஆட்சியிலுள்ள கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முரண்பாடுகளைக் கவனிக்கிறீர்களா?
பதில்: மாவோயிசம் என்ற பிரச்சினை பற்றி அரசியல்ரீதியாகப் பேச வேண்டுமென்பதே எங்களது நோக்கம். எங்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்களும் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிராக, அதேபோன்ற சிந்தனையுள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்த விவசாய எழுச்சி இது. இதில், தீவிர இடது சித்தாந்தங்களைக் கொண்ட சிபிஐ (எம்எல்) கட்சியும் இடம்பெற்றிருக்கலாம். ஆனாலும், இந்தப் பேரணிக்கான பாராட்டை நாங்கள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து பெற முடியுமா?
கேள்வி: கரிவெல்லூரில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் எழுச்சி, இந்த நீண்ட பேரணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எப்படி?
பதில்: இந்த நாடு முழுவதற்குமான எழுச்சிக்கு கரிவெல்லூர், காயூர் மற்றும் புன்னப்ரா வயலாரில் நடந்த விவசாயிகள் போராட்டம் அடிப்படையாக அமையும். எல்லா ஊர்களிலும் அகில இந்திய கிஸான் சபை இருக்க வேண்டுமென்றும், எல்லா விவசாயிகளும் இதன் உறுப்பினர்களாக வேண்டுமென்றும் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்தப் பேரணியின் வெற்றி!
தமிழில்: உதய் பாடகலிங்கம்
நன்றி: news18
50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி? 50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி? Reviewed by நமதூர் செய்திகள் on 23:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.