தலித், பெண் பிரதிநிதிகளை கொடியேற்ற விடாத அதிமுக ஒன்றிய செயலாளர் - குடியரசு தினத்தில் கொடுமை

நம் நாடு 67வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுத்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
 
 
மேலும், ஆளும் அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் ஒருவரே, தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
 

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்று விழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் கு.கலையரசி, ஒன்றிய ஆணையாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அங்கு வந்திருந்தனர்.
 அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தும் அவர்கள் கொடியேற்றாமல் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் மூலனூர் ஒன்றியச் செயலாளர் வி.பி.பெரியசாமி அங்கு வந்தார். அவர் வந்த பிறகு விழா தொடங்கியது.
 
ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுந்தர்ராஜன் முன்னிலையில் அலுவலக உதவியாளர், அந்த கொடிக் கயிற்றை எடுத்து வி.பி.பெரியசாமியிடம் கொடுத்தார்.
 
அவர் கொடிக்கயிற்றைப் பிடித்த பிறகு, ஆணையர் சுந்தர்ராஜன், ஒன்றியப் பெருந்தலைவர் கலையரசியை அருகில் அழைத்தார். அவர் அருகில் வந்து சம்பிரதாயத்துக்கு கொடிக்கயிற்றைத் தொட்டார். இதன் பிறகு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
 
ஒன்றியத் தலைவர் கலையரசி அதிமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வி.பி.பெரியசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த பதவியிலும் இல்லை.
 
இது குறித்து கலையரசியிடம் கேட்டபோது, “நான்தான் கொடியேற்றினேன். உடனிருந்தவர்கள் கயிறு கட்ட உதவினார்கள்” என்று சொன்னார்.
 
ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ’வி.பி.பெரியசாமிதான், ஒன்றியப் பெருந்தலைவர் கலையரசி இப்பதவிக்கு வரக்காரணம். எனவே அவர் கொடியை எடுத்துக் கொடுத்தார். பிறகு ஒன்றியப் பெருந்தலைவர்தான் கொடியேற்றினார்’ என்றார். இருவரும் நடந்த உண்மைக்கு மாறாக சொல்லி சமாளித்தனர்.
 
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடியேற்று விழா முடிந்தபிறகு, மூலனூர் பேரூராட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. அங்கும், அதிமுக-வைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் க.மணிமேகலை, செயல் அலுவலர் வாசு உள்ளிட்டோர் முன்னிலையில் வி.பி.பெரியசாமியே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 
பேரூராட்சித் தலைவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் என்ற நிலையில் அவர் கொடியேற்ற அனுமதிக்காமல், தனது ஆதிக்கத்தைக் காட்டும் வகையில், இங்கும் அதிமுக ஒன்றியச் செயலாளரே கொடியேற்றி வைத்துள்ளார்.
 
இது பற்றி பேரூராட்சித் தலைவர் மணிமேகலை, செயல் அலுவலர் வாசு ஆகியோரிடம் கேட்டபோது, அவர்களும் உண்மைக்கு மாறாக, “தலைவர்தான் கொடியேற்றி வைத்தார்” என்று சமாளித்தனர்.
 
ஆனால் இரு இடங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அதிமுக ஒன்றியச் செயலாளர் வி.பி.பெரியசாமி கொடியேற்றுவதை தெளிவாகக் காட்டுகிறது.
தலித், பெண் பிரதிநிதிகளை கொடியேற்ற விடாத அதிமுக ஒன்றிய செயலாளர் - குடியரசு தினத்தில் கொடுமை தலித், பெண் பிரதிநிதிகளை கொடியேற்ற விடாத அதிமுக ஒன்றிய செயலாளர் - குடியரசு தினத்தில் கொடுமை Reviewed by நமதூர் செய்திகள் on 21:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.